படம்:

பொருளாதார அடியாளின் வாக்குமூலம் முதல் பாகம் வெளியிட்ட கோவை விடியல் பதிப்பகம்தான் இந்த இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டிருக்கிறது. தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் கொள்கைக்கு இடம்கொடுத்த அனைத்து உலக நாடுகளின் சமூகப் பொருளாதார நிலை பற்றியும், அவர்களது உழைப்பும், வளங்களும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களால் சுரண்டப்படுவது குறித்தும், அதற்குத் துணையாக இருந்து தரகு வேலை பார்த்த பொருளாதார அடியாட்கள் பற்றியுமான ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணமாகத்தான் ஜான் பெர்கின்ஸ் எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின்’ வாக்குமூலம் முதல் பாகத்தைப் பார்க்கிறோம். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மீண்டும் 2015இல் நவீன பொருளாதார அடியாட்கள் பற்றியும், அமெரிக்கா பற்றியும், அதே மரணப் பொருளாதாரக் கொள்கையைக் கையிலெடுத்திருக்கும் சீனா பற்றியும் அவர்களது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் பற்றியுமான பதிவுதான் இந்த இரண்டாம் பாகம்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்பது ஒரு சுழற்சி முறையில் அமைந்தது. ஒருபுறம் முதலாளி வர்க்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும் மிகுதியாக இருக்க மறுபுறம் பற்றாக்குறையும், வறுமையும் வளர்ந்து வருவது. இதன்மூலம் தொடர்ந்து தேவைகளை அதிகரிக்கச் செய்து மீண்டும் முதலாளித்துவம் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற பல நிதி நிறுவனங்களின் உதவியில் அடிப்படைக் கட்டுமான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் ஒரு சமூகத்தின் மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கி சாதிய, வர்க்கப் பாகுபாட்டை நிலைத்திருக்கச் செய்து அதிகாரத்தின் துணையோடு சந்தையை ஆக்கிரமிப்பதுதான் முதலாளித்துவத்தின் முதல் இலக்கு. அதற்கான முக்கியக் கருவி தனிமனிதனை முற்றிலும் கண்காணிப்பதும், அவனது தேவைகள் என்னவென அவனைத் தீர்மானிக்க விடாமல் வழிநடத்தி, அவனுக்குள் போட்டியையும், பொறாமையையும் தூண்டிவிட்டு சகமனிதனின் வாய்ப்பை அடித்துப் பிடுங்கித்தான் அவன் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையை அவனுள் வளர்த்துவதும், போலி ஜனநாயகத்தை முன்னிறுத்தி உழைப்புச் சுரண்டலோடு, இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதுமே ஆகும்.

படம்: hateandange

இதற்காக அது நுழைகின்ற எந்தவொரு நாட்டிலும் முதலில் அதிகார அமைப்பைத் தனது அடிமையாக்க வேண்டியது அவசியமாகிறது. கையூட்டுகள் கொடுப்பது, அச்சுறுத்துவது, படுகொலை செய்வது என அனைத்துவிதமான முயற்சிகளும் செய்து எப்படியேனும் அதிகார மையத்தைத் தனக்கு அடிபணியச் செய்துவிடுவது பெருநிறுவன முதலைகளின் தரகர்களான பொருளாதார அடியாட்கள் எனும் ஓநாய்கள் செய்கின்ற வேலை. ஆகவே அரசை வழிநடத்துகின்ற, அமைப்புகளை வழிநடத்துகின்ற தலைவர்கள் அனைவரும் எப்படியேனும் இந்தப் பெருநிறுவனங்களின் விசுவாசிகளாக மாறிவிடுகின்றனர்.

இதில் பெரிதும் வருத்தப்படவேண்டியது என்னவென்றால் இந்த வகையான அடிமைச் சிந்தனையை மக்களே ஏற்றுக்கொள்வதுதான். “ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும்போது அது பௌதீக சக்தியாகிவிடும்” என்பார் கார்ல் மார்க்ஸ். அந்த வகையிலே உலகம் முழுவதுமே முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் அனைத்திலும் இந்த அடிமைத்தனமும் மக்களைக் கவ்விப் பிடித்துவிட்டது. இதற்கும் அந்த பெருநிறுவனங்கள்தான் காரணம். தங்களது தந்திரத்தால் மக்களின் நுகர்வு வெறியைத் தூண்டி மக்களைத் தயார்படுத்துவதோடு அவர்களது பண்பாட்டுக் கூறுகளில் ஆழமாக வேரூன்றிவிட்ட சாதிய, வர்க்கப் பாகுப்படுகளை ஆராய்ந்து, அவற்றை வளர்த்தெடுத்து, மிகவும் எளிமையாக மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்களது மனிதநேயத்தையும், சூழலியல் சார்ந்த வாழ்க்கைப் பொருளாதாரச் சிந்தனையையும் மழுங்கடிக்கச் செய்துவிடுகிறார்கள்.

முதலில் இந்தப் பெருநிறுவனங்கள் மலிவான சந்தையை உருவாக்குவதாகக் கூறியே ஒரு நாட்டிற்குள் நுழைகிறது. ஆனால் உண்மையில் அது சார்ந்துள்ள சந்தையில் பற்றாக்குறையை ஏற்படுத்திக் கொள்ளை இலாபம் அடைகிறது.
புதிய தொழில்கள் உருவாவதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் குறைய வேண்டும். ஆனால் ஒருபுறம் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் துறைதோறும் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதே வேளையில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துகொண்டே இருக்கும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும். இது எளிய மக்களின் சிந்தனையால் புரிந்துகொள்ள முடியாத முரண். உண்மையில் நடப்பது என்னவென்றால் அப்படியொரு தேக்க நிலையை உருவாக்குவதன் மூலம் போட்டியை அதிகரித்து தனிமனிதனின் உழைப்பை அதிகம் சுரண்டும் வேலையைச் செவ்வனே செய்வதுதான் பொருளாதார அடியாட்களின் தந்திரம்.

அதாவது வேலைப்பழு அதிகம் மற்றும் சரியான ஊதியம் தராமை ஆகிய காரணங்களைக் கூறி ஒருவர் வெளியேறினால் அந்த இடத்தில் அவரைக் காட்டிலும் அதிக நேரம் உழைக்கவும், குறைந்த ஊதியம் பெற்றுக்கொள்ளவும் பலபேர் தயாராக இருக்குமாறு சந்தையை மாற்றுவது. அதேபோல் வளங்கள் குறைவாக உள்ள துறையில் தேவைக்கு அதிகமான தேக்கநிலையை உருவாக்குவது. இந்நிலையில் மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதே தெரியாமல் பார்த்துக் கொள்வது, அவ்வாறு தெரிந்தாலும் அதை வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ளச் செய்வது.

படம்: consultwlc

மேலும் மக்களின் நுகர்வுத் தன்மையைக் கண்காணித்து அவர்களது கடன் வாங்கும் திறனைக் கணக்கிட்டு இந்த நிறுவனங்களுக்கு விளக்குவதற்காகவே FITCH RATINGS, MOODY’S, STANDARD & POOR’S RATINGS போன்ற பல தனியார் அமைப்புகள் எண்ணற்ற பொருளாதார அடியாட்களை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. கல்விக் கடன், வாகனக் கடன், வீடு கட்டக் கடன் என அனைத்திற்குமான தனிநபர் தகுதியை இவர்களே தீர்மானிக்கிறார்கள். தேவைகள் அதிகரிக்கும் இடத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் விளைவு என்னவாகும்? மக்கள் தொடர்ந்து கடனாளிகளாகவே இருப்பார்கள். தற்சார்பு முற்றிலும் அழிந்து போகும்.

எனவே முதலாளித்துவ சுழற்சி முறையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற மிகப்பெரிய அமைப்புகளின் மூலம் அரசை அடிபணிய வைக்கும் வேலையைப் பொருளாதார அடியாட்கள் பார்த்துக் கொள்வார்கள். மக்களைக் கடனாளியாக்கி இதை ஏற்றுக்கொள்ளும் வேலையை அதிகாரம் பார்த்துக் கொள்ளும். நுகர்வுவெறி அதிகமாகி மீண்டும் முதலாளித்துவம் வளரும்.
முதல் பாகத்தில் சொல்ல முடியாத தீர்வுகளை 11 வருடங்களாக ஆய்வு செய்து இரண்டாம் பாகத்தில் கூறியிருக்கிறார் ஜான் பெர்கின்ஸ். இதில் மரணப் பொருளாதாரத்திலிருந்து மீள்வதற்கு மாணவர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், நடுத்தர வயதினர், ஓய்வு பெற்றோர் என அனைவுருக்குமான சமூக நடைமுறை முன்வைக்கப்படுகிறது.

Featured Image credit: Nivas ram

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here