World Book Day
படம்: Indiacelebrating

“புரட்சி பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே”
-தோழர். லெனின்

உழைப்பே மனித சமூகத்தை பரிணாம வளர்ச்சி அடையைச் செய்தது. வாசிப்பின் ஊடாக உலகை அறிந்த, அறியும் மனிதர்களாலேயே மனித சமூகத்தின் உழைப்பை ஆக்கபூர்வமான ஆற்றலாக மாற்றிட முடிந்தது. உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையின் வாயிலாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன்  ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று கடைபிடிக்கின்ற நிகழ்வு. இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது “அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலகப் புத்தக தினமாக கொண்டாடப்படும்” என்பதே அத்தீர்மானம் ஆகும்.

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் புத்தக தினமாக இந்த நாள் அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் ஐரோப்பாவின் முதல் நவீனமென்று கருதப்படும் ‘டான் குயிக்ஸோட்’ என்கிற நாவலைப் படைத்த ஸ்பானிஷ் மொழி படைப்பாளி ‘மிகுவேல் டி செர்வாண்டிஸ்’ மறைந்த தினம் 1616 ஆம் வருடம் ஏப்ரல் 23. மேலும் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும்  இன்கா தி லா வேகா ஆகியோர் மறைந்த நாளும் இதுவென்பதே காரணம்.

உலகால் அதிகம் கவனிக்கப்படாத பிரெஞ்சு பத்திரிகையாளர் ழீன் டொமினிக் பாபி (Jean-Dominique Bauby) பிறந்ததும் 1952 ஏப்ரல் 23 தான். அவர் எழுதியது ஒரே ஒரு புத்தகம்தான். ஆனால் அதை அவர் விரல்களால் எழுதவில்லை. அவர் இமைகளின் அசைவுகளால் எழுதினார்.

The Diving bell and the Butterfly
படம்: bookdepository

காலம் விடுத்த சவால்

‘ழீன் டொமினிக்’ எப்போதும் உற்சாகமான, கொண்டாட்டமான மன நிலையுடையவர். பிரெஞ்சு மொழியில் வெளிவரும் ‘ஏல்’ (Elle) என்னும் புகழ்பெற்ற பத்திரிகையின் ஆசிரியர். எவரும் எதிர்பாராத வேளையில், திடீரென 1995 டிசம்பர் 8-ல் அவரது மூளையையும் முதுகெலும்பையும் இணைக்கும் நரம்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ‘கோமா’ நிலைக்குத் தள்ளப்பட்டார். மூன்று வாரம் அதே நிலையிலிருந்து, பின்னர் கண்விழிக்கும்போது தலையிலிருந்து கால் வரை எந்த உறுப்பும் இயங்காமல் போய்விட்டன.

 Locked in Syndrome எனும் முடக்குவாத நோய் காரணமாக இந்த நிலைக்கு ஆளானார். இடது கண் விழியும் இமையும் மட்டும் அசைந்தன. காதுகள், கேட்கும் சக்தியை இழக்கவில்லை. அவரது மூளை எல்லாவற்றையும் கவனித்து உள்வாங்கும் நிலையில் இருந்தது. ஆனால் மூளையின் கட்டளைக்கு உறுப்புகள் எதுவும் (இடது கண் விழி மற்றும் இமைகள் தவிர) கீழ்ப்படியவில்லை. கிட்டத்தட்ட 20 நாட்களில் 27 கிலோ எடை குறைந்து மெல்லிய கம்பிபோலக் கட்டிலில் கிடக்கும் நிலை ஏற்பட்டது. பிரான்சின் கடற்கரை நகரமான பெரக் சூ மெரில் உள்ள அதிநவீன மருத்துவமனையில் அவரை மீட்பதற்காக மருத்துவக் குழுவொன்று போராடிக் கொண்டிருந்தது.

பேச்சுப் பயிற்சிக்காக ‘பேச்சு சிகிச்சை’யில் பயிற்சி பெற்ற இருவர் மிகுந்த முயற்சி எடுத்துப் பார்த்தனர். பேச்சுப் பயிற்சியினால் அவரோடு உரையாட ஒரு வழிமுறையைக் கண்டடைந்தனர். இயங்கும் ஒரு கண்ணையும் அதன் இமைகளின் அசைவுகளையும் வைத்து அவரிடம் பேசியாக வேண்டுமென்பதால், அவருக்குத் தேவையானவற்றைக் கேள்விகள் வடிவில் கேட்டனர். ‘ஆம்’ என்பதற்கு ஒரு முறை கண்ணிமைக்கவும், ‘இல்லை’ என்பதற்கு இருமுறை கண்ணிமைக்கவும் பயிற்சியளித்தனர்  (Partner-assisted scanning or listener-assisted scanning). இது ஓரளவிற்குப் பலனளித்தது.

காதல் அளித்த நம்பிக்கை

அதற்கடுத்த முயற்சியாக ஆங்கிலத்தில் அதிகம் பயன்படக்கூடிய எழுத்துகளை ஒரு பிளாஸ்டிக் பலகையில் பொறித்து ஒவ்வொரு எழுத்தாக ஒருவர் வாசித்துக் காண்பிப்பார். ழீன் மனதில் உள்ள வார்த்தையின் எழுத்து வரும்போது ஒருமுறை கண் இமைக்குமாறு பழக்கினார்கள். ஆக, அதுவரை கேட்ட கேள்விக்கு ஆம், இல்லை என்பதற்கு மட்டும் பதில் என்கிற நிலையிலிருந்து சிறுசிறு வார்த்தைகளால் ஆன கேள்விகளைக் கேட்டுப் பதிலடையும் நிலைக்கு முன்னேற்றமடைந்தார்.

முதலில் வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் பேசிய ழீன், அவரது பத்திரிகையில் விமர்சகராகப் பணியாற்றிய அவரது காதலி பென் சாடோனின் ஆறுதலான அருகாமையினால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னம்பிக்கையடைந்தார்.

பேச்சுப் பயிற்சி நிபுணர் மெண்ட்லில் உடனான சலிப்பற்ற உரையாடலில் உற்சாகமான ழீன், தான் ஒரு புத்தகம் எழுத விரும்புவதாகவும், அதற்கு உதவும்படியும் கேட்டார். மெண்ட்லில் அதற்குச் சம்மதித்து, ஏற்கனவே ழீனுடன் ஒரு புத்தகத்துக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பதிப்பாளரிடம் பேசி அவர்களையும் சம்மதிக்கச் செய்தார். புத்தகம் எழுதும் பணி துவங்கியது. மெண்ட்லில், ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து ழீனின் இமையசைவை வைத்து வார்த்தைகளைக் கோர்த்து வரிகளாக்கிப் பின் பத்தியாகவும், பக்கமாகவும் புத்தகம் உருவாகத் தொடங்கியது.

படம்: https://commons.wikimedia.org/wiki/File:Jean-Dominique-Bauby-01.jpg

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அதிகபட்சம் ஐந்து நிமிடம் என்கிற காலக்கணக்கில் மெண்ட்லில் மற்றும் ழீனின் நண்பர்கள் ஆகியோரின் பொறுமையான ஒத்துழைப்பினால் ‘The Diving Bell and the Butterfly’ என்ற தலைப்பில் அந்த நூல் 1997 ஆண்டு மார்ச் 7-ம் தேதி வெளியானது. Diving bell என்பது உருளும் விழிகளையும் Butterfly என்பது படபடக்கும் இமைகளையும் குறிப்பதாக ழீன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்.

புத்தகம் வெளிவந்ததும் மரணம்

புத்தகம் வெளிவந்த இரண்டு நாட்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ழீன், மருத்துவமனையிலேயே இறந்து விட்டார். பிரான்சில் நடந்த இந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து ழீன் எழுதிய நூலின் தலைப்பையே கொண்டு திரைப்படமும் வெளிவந்துள்ளது. அந்தத் திரைப்படத்தை ஜூலியன் ஸ்நாபெல் இயக்கியுள்ளார். அது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும், இரண்டு அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Diving bell and the Butterfly
படம்: nytimes

The Diving Bell and the Butterfly‘  நூல் பெரிதாக இலக்கியத்தரமான படைப்பு இல்லை. ஒரு சாமானியன், உலகத்துடனான சகலத் தொடர்புகளிலிருந்தும் அறுபட்டு முடங்கிய நிலையில் தனது நிலைமையை, மருத்துவமனையில் தான் கண்ட அன்றாட நிகழ்வுகளைச் சகமனிதர்களோடு பகிரும் ஒரு மவுன உரையாடல் போலத்தான் அந்த நூலின் உள்ளடக்கம் இருக்கிறது.

எழுத்தாளர்களின் விரல்களிலிருந்து எழுத்து பிறக்கும்போது தொடர்ந்து கற்பனைகள் உருவாகி அடுத்தடுத்த வார்த்தைகளை எழுதமுடியும். அந்த வகையில் ஒவ்வொரு படைப்பும் அதன் எழுத்தாளர் வாசித்த, பயிற்சி பெற்ற ஒரு திறனால் அவரது கற்பனை வளம் பெற்று உருவாகிறது. எனவே ழீன் தனது விரல்களினூடே இந்த நூலை எழுத முடித்திருந்தால் இந்தப் புத்தகம் வேறொரு வடிவத்தை எட்டியிருக்கக்கூடும்.

பல சமரசங்களோடுதான் ழீன் இந்த நூலை இறுதி செய்திருக்கலாம். எனினும் படைப்பாக்கத்தில் இந்த முயற்சி அசாத்தியமானது. உலக புத்தக தினமான இன்று அவரையும், அவரது இமைகளையும், அவரது வழிந்தோடும் விழிநீரில் கலந்திருக்கும் வலியையும் அதனால் உருவான ஒரு நெகிழ்வான படைப்பையும் நினைவுபடுத்துவது ஒவ்வொரு வாசிப்பாளரின் கடமை.

வாசிப்பின் மீது கொண்ட தீராக் காதல்தான் ஒரு மனிதனை படைப்பின் ஆர்வத்திற்கு இந்த நிலையிலும் முயற்சிகொள்ளச் செய்திருக்கிறது. வாசிப்பிற்கு காலம், நேரம், வயது, பொருளாதாரம், இருப்பிடம், உடல்நிலை, குடும்பச் சூழல் என்று எதுவுமே தடையாக இருக்க முடியாது. எனவே உலக உய்விற்கு வாசிப்பு மட்டுமே ஒரே வழியாக இருக்க முடியும் என்பதால் வாசிப்போம், வாசிப்பைத் தொடர்ந்து  ஊக்குவிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here