மலர்கள் மீது நடக்க வேண்டிய பிஞ்சுப் பாதங்கள் அணுகுண்டுத் துகள்கள் மீதும், பலியான மனித உடல்கள் மீதும் அழுதபடியே ஓடி  வருகிறது. நேற்றுவரை கருவறையின் பாதுகாப்பில்  இருந்த பச்சிளம் குழந்தைகளும் கல்நெஞ்சக்காரர்களின் கருணையில் நேரடியாகக் கல்லறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதிலும் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் மனித உடல்களின் நடுவே தன் தாய், தந்தையும் இருப்பது கூட அறியாமல் சிரித்துக் கொண்டே வெளிவரும் ஒரு குழந்தையின் முகம் ஒட்டுமொத்த மனித குல மனசாட்சியையும் உலுக்கிப் பார்ப்பதாக உள்ளது. ஒருபுறம் மனித நாகரிகத்தின் உச்சத்தில் கைபேசியைக் கட்டி அணைத்துக் கொண்டு, கணிப்பொறியோடு உறவுகொண்டு கார்ப்பரேட்டின் நுகர்வுக் கலாச்சாரத்தில் கண்டதையும் துய்த்து மகிழும் பெருங்கூட்டம் இது யார் தவறென்று பட்டிமன்றம் நடத்துவதும், மறுபுறம் குளிரூட்டப்பட்ட அறைக் கதவின் சாளரத்தை இறுக்கி மூடிவிட்டு இந்த மாபெரும் இனப்பேரழிவை தொலைக்காட்சியில் பார்த்தும் ‘ஸ்ரீதேவி மது குடித்துத்தான் இறந்தாரா?’ போன்ற செய்திகளை அறியும் ஆவலுடன்  சேனலை மாற்றுவதெல்லாம் மனித இனத்திடம் இறுகிப்போன ஈரத்தின் சாட்சியே.

படம்: sarcasmlol

இயற்கையின் பேரழிவிற்குத் தன்னால் இயன்றவரை உதவிய தொழில்நுட்ப யுகத்தின் பாக்கியவான்கள் ஆயிற்றே! சுனாமியின் தாக்கத்திலும், புதிதாக வெளிவரும் சூப்பர் ஸ்டாரின்  படத்திலும் ஒரே  உணர்வைப் பெறுகின்ற சமூகத்தின் பார்வையில் இந்த இனப்பேரழிவும் மற்றுமொரு முக்கியச் செய்தியாக மட்டுமே ஆகிப் போனதில் நமக்குப் பெரிதும் வியப்பில்லைதான் என்றாலும் உறவுகளின் பிணைப்பில் மட்டும் அகக் களிப்பு பெரும் இன்பத்தை கல் தோன்றி முன்தோன்றாக் காலம் முதல் கற்றுக் கொண்ட நமக்கு நெஞ்சு வலிக்கத்தான் செய்கிறது. பெயர்தான் ‘சிரியா’ ஆனால் அது உண்மையில் சிரிப்பை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஏறத்தாள கி்.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக விளங்கிய சிரியாவும் மிகப்  பழமையான நாகரீகத்தைக் கொண்ட இனம். 1,83,630 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பழமை வாய்ந்த அழகிய நாட்டின் தற்போதைய மக்கள்தொகை  1,82,79,521 பேர். இறுதியாக  எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இதில் 92.1 % பேர் இசுலாமியர்கள். இதில் 73 % சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள், 13% சியா பிரிவைச் சேர்ந்தவர்கள், 4 % பேர் குர்திக்கள், மீதி 9.9 % கிறித்துவர்களும், 0.1 % யூதர்களும் அடங்குவர்.

பிரெஞ்சு காலனி ஆட்சியிலிருந்து 1946 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற சிரியா மூன்றே ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்துக்கொண்டு அதிபர் முறைக் குடியரசாக மாறியது. அரசியல் சதிகளுக்கு உட்பட்டு பல்வேறு  தலைவர்களால் ஆளப்பட்ட சிரியாவில் நான்கு ஆண்டுகள் இராணுவ அமைச்சராகப் பணியாற்றிய  ஆஃபெஸ் அல் அசாத் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம்   சிரியக் குடியரசின் அதிபராகத் தன்னைத் தானே பிரகடனம் செய்துகொண்டு ஆட்சியைத் தொடங்கினார். அணி சேரா நாடுகளின் பட்டியலிலும் ஐ.நா மன்றத்திலும் சிரியாவை இணைத்துக் கொண்டார்.

இசுலாமியர்கள் மட்டமே ஆள வேண்டும் என்று அதுவரை இருந்த அரசியலமைப்பில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தார் சியா இசுலாமியர்களின் ஒரு பிரிவான அலாவைட் இனத்தைச் சேர்ந்த ஆஃபெஸ் அல் அசாத். இது அதுவரை ஆட்சிக்கு  வந்த பெரும்பான்மைவாதிகளான சன்னி இசுலாமியர்களிடத்தே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தும் முப்பது ஆண்டுகள் தன்னுடைய கட்டுப்பாட்டில் சிரியாவின் நிர்வாகத்தைக்  காப்பாற்றினார். 2000 ஆம் ஆண்டு இவரது மரணத்தைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்த இவரது இளைய மகன் பசர் அல் அசாத். பெரும்பான்மை சன்னி இன மக்கள் வாழும் நாட்டில் சியா இனத்தவரே ஆள வேண்டும் என்று  இவர் நினைத்ததன் விளைவே போரின் துவக்கம்.

படம்: bbc

பசர் அல் அசாத் தலைமையிலான ராணுவத்துக்கும், சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க் கட்சிகளுக்கும் இடையே  2011ஆம் ஆண்டு மார்ச்  15ஆம் தேதி தலைநகர் டமஸ்கசில் துவங்கப்பட்ட பேரணி முதல் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்கவும், தனது சர்வாதிகாரப் போக்கினை நிலைநாட்டவும் அதிபர் பசர் அல் அசாத் நடத்திவரும் கோரத்தாண்டவமே சிரியா பனிப்போர். தற்போது எதிர்க் கட்சியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த இருபிரிவுகளுக்கும் இடையில் நடக்கும் இந்த யுத்தமே பிரதானமாகப் பாவிக்கப்படுகிறது. இங்கே மற்றொரு சிறுபான்மை இனத்தவர்களான குர்தீக்கள்  தென் மேற்குப் பகுதியைக் கொண்ட தனி நாடு கோரிக்கையை முன்வைத்துப் போராடுகிறார்கள்.

படம்: humannationalityvn

ஆனால் உண்மையில் நடப்பது இந்த இனப் பிரிவினைவாதச் சண்டை அல்ல. இதை மூலாதாரமாகக் கொண்டு அமெரிக்காவின் ஓநாய்களான சி ஐ ஏவின் திட்டப்படி 2009 ஆம் ஆண்டு சிரியா, லெபனான் மற்றும் துருக்கியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளங்களைச் சுரண்டவே அமெரிக்கப் பேரரசு அதன் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளைத் தங்களது சன்னி பிரிவு இசுலாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கத் தூண்டியதோடு தானும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.

கிளர்ச்சியாளர்களிலிருந்து தனியாக உருவான அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா). இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். ஆரம்பத்தில் அரசுக்கு எதிரான இந்த அமைப்பை வளர்த்த அமெரிக்கா வலிமை வாய்ந்த இசுலாமிய தேசத்தைக் கட்டி அமைக்க முயலும் இந்த அமைப்பின் நோக்கம் கண்டு அஞ்சி இப்போது முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பதே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

படம்: abcnews

மேலும் வடக்கே துருக்கியோடு சிரியா கொண்ட பிணக்கத்தின் காரணமாக   கத்தார், மற்றும் சவுதியின் உதவியில் வரும் ஆயுதங்களைக் கிளர்ச்சியாளர்களுக்குத் தன் நாடு வழியே வழங்கி உதவி வருகிறது துருக்கி.

சியா பிரிவு இசுலாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் உதவியோடும், அமெரிக்காவின் நிரந்தர எதிரியான ரசியாவின் ஆதரவோடும் சிரியா அரசும் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் கத்தாரிலிருந்து சிரியா, துருக்கி வழியாக ஐரோப்பாவிற்குச் செல்லும் இயற்கை எரிவாயுக் குழாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதே ரசியாவின் அடிப்படை நோக்கம். எனவே, சிரியாவில் நடப்பது முக்கியமாகப் பிறநாடுகளால் தூண்டப்பட்ட ஒரு யுத்தமே. ஆக தற்போது சிரியா யுத்தத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவது எதிரெதிர் அணியில் இருக்கும் ரஷ்யப் படையும், அமெரிக்கப் படையும் மட்டுமே.

படம்: gpaspectrum

அதனால்தான், இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே நிலவிவரும் கடும் தாக்குதலில் இரு பிரிவுகளிலும் அடிக்கடி வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், சுமார் 50 ஆயிரத்திற்கும்  அதிகமான அப்பாவிப்  பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். சுமார் 10 இலட்சத்திற்கும் மேலானோர் சிரியாவைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், சிரியாவில் ஆசாத் தலைமையிலான ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களின் படை வீரர்களுக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற ஆரம்பகாலத்தின்போது சக்தி வாய்ந்த குண்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தத் தாக்குதலில் மூன்று லட்சத்துக்கும் மேலானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலினால் மருத்துவமனைகளும், மீட்புப்பணி நிலையங்களும் மிக மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணத்தால் மீட்புப்பணி நடைபெறாமலும், உரிய மருத்துவச் சிகிச்சை இல்லாமலும் மக்கள் மரணப்பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ. நா மன்றம் அழைப்பு விடுத்து ஒரு வாரத்திற்குள்ளாகவே ரசிய விமானப் படையின் துணை கொண்டு கிளர்ச்சியாளர்கள் அதிகமாக உள்ள கிழக்கு கூட்டாவில் இரசாயன குண்டுகள் உட்பட எண்ணற்ற குண்டுகளை வீசி ஆயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்திருக்கிறது சிரியா அரசு. இந்நிலையில் ஐ. நா கொண்டு வரப்போகும் போர் நிறுத்த ஒப்பந்தம் எந்த அளவிற்கு ஆக்கப் பூர்வமானதாக இருக்கும் என்றும் தெரியாது.

படம்: inmoscowsshadows

இதில் மற்றொரு பெருங்கொடுமை என்னவென்றால் ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் அதிகாரிகள் தொடர்ந்து சிரியா பெண்களின் மீது பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக வேறு ‘வாய்சஸ் ஃப்ரம் சிரியா 2018’ (Voices from Syria 2018) எனும் தொண்டு அமைப்பு.தாங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்கியே உதவிப் பொருட்களைப் பெற்று வந்ததாக பிறர் கருதுவார்கள் என்பதால் பல பெண்கள் உதவி மையங்களுக்கு செல்வதையே தவிர்க்கின்றனர் என்று ஐ.நாவின் மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஆண் பாதுகாவலர்கள் இல்லாத, கணவரை இழந்த பெண்கள், மண முறிவு செய்துகொண்டவர்கள், உள்நாட்டுப் போரால் வேறு இடங்களில் சென்று வசிப்பவர்கள் ஆகியோரே எளிதில் பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

படம்: tribune

உறவுகளை இழந்து, கல்வியை இழந்து அடிப்படைச் சுகாதாரம் இழந்து, மானத்தை இழந்து என அத்தனை வாழ்வாதாரங்களையும், உயிரையும் இழந்துகொண்டிருக்கும் சிரியாவின் இலட்சக்கணக்கான மக்களும் செய்த தவறுதான் என்ன? உள்நாட்டில் நிலவிய இனப் பகையைத் தனது எண்ணெய் வர்த்தகத்திற்காக பல கோணத்திலும் வளர்த்த அமெரிக்க, ரசிய  வல்லரசுகள் இந்தப் பேரழிவிற்கு எத்தகைய பிணையைத் தந்துவிடப் போகிறது. அல்லது அப்படித் தந்தாலும் அது எவ்வகையிலும் ஈடாகாதே. இங்கே பிரிவினைவாதம்தான் மையக் கோளாறா? அல்லவே வர்த்தகச் சந்தையின் மூலமாக இன்று ஏகாதிபத்திய நாடுகள் கொண்டிருக்கும் முதலாளித்துவ உணர்வுதானே காரணம்.

இந்தியாவில் இருக்கும் நாம் என்ன செய்ய முடியும் என்று வெறுமனே துக்கம் அனுசரித்துவிட்டு மௌனமாகக் கடந்து சென்றால் இன்று எண்ணெய்க்காக சிரியா நாளை எதற்காகவோ இந்தியா என்று ஆகிவிடாதா?

படம்: wvphotos

சிறிய முட்களின் வலிகளைக் கூடத் தாங்கிக் கொள்ளாத பாலைவனத்துப் பிஞ்சு ரோஜாக்கள் இரத்தமும், சதையுமாக அழுது திரிவது காணவொண்ணாத் துயர். சிரியா மக்களின் வலிகளைச் சொல்லும் வார்த்தைகளுக்கே வலிக்கும். சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “போரில் இழப்புகள் சகஜம் என்றும், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும்  சாட்சியமாகாது” என்றும் அதிபர் பசர் அல் அசாத் கூறுகிறார். ஆக இதைத் தன் சொந்த தேசத்து மக்களாகவே இருந்தாலும் செத்தவன் வேற்று மதத்தவன் என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அவர் நேரடியாகவே சொல்வதாகத்தான் பார்க்க முடியும். அமெரிக்காவிற்கோ  பெரும்பான்மை கிளர்ச்சியாளர்களைக் கொண்டு எப்படியாவது சிரியா அரசை ஒன்று அடிபணிய வைக்க வேண்டும் இல்லையேல் அழித்து விட வேண்டும். அதற்காக எத்தகைய அழிவுகளையும் கடந்து செல்ல முடியும். ரசியாவிற்கும் தனது வர்த்தகத் தளத்தை அமெரிக்காவிடம் இழந்துவிடக் கூடாது என்பது தாண்டி வேறில்லை. இறுதியில் ஆகப் பெரிய மனித இனப் பேரிழவின் மீது எண்ணெய் வர்த்தகத்திற்கான கனவுக் கோட்டையைக் கட்டிக் கொண்டிருக்கும் இந்த வல்லரசு நாடுகள் அங்கே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்  அந்த அப்பாவி மக்களின்  மரண ஓலங்கள் எதிரொலிக்கும் என்பதை மறந்துவிட்டதே.  இறுதியில் நண்பர் ஒருவர் சொன்னது நினைவில் வருகிறது, “கடவுள் இல்லை என்று சொல்ல பெரியார் தேவையில்லை சிரியாவே போதும்”….

Featured Image credit: Metro

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here