பகிரவும்

அனைத்துவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்த ஆண், பெண் இருவருக்குமான வெளிகள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக மடைதிறந்து விடப்பட்ட இந்த பின்நவீனத்துவ காலத்தில் பாலியல் கல்வி குறித்தும், பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் தளங்கள் மற்றும் போக்குகள் குறித்தும் தவறான கருத்தே பரவிக் கிடக்கிறது. அதன் விளைவாகவே சமீப காலங்களில் எண்ணற்ற பாலியல் குற்றங்கள் அதுவும், சிறிய குழந்தை மீது கூட நடக்கிறது என்பதை அனைவருமே காணலாம்.

தொடர்ந்து பாலியல் கல்வியின் அவசியம் குறித்தும் ஒரு கூட்டம் குரலெழுப்பி வருகிறது. உலகின் பண்பட்ட தொல்குடி தனது வர்லாறுகளிலிருந்தும், பாரம்பரியமிக்க தனது இலக்கியங்களிலிருந்தும் தன்னை மீட்டுக்கொள்ள முடியும். காதலையும், காமத்தையும், பொது வெளியில் விவாதித்த சமூகம் அதை இழிவாகக் கருதுமளவு மாற்றியது யார்? இந்த இனத்தின் மீது பண்பாட்டுத் தாக்குதல் நடத்தித் தன்னை ஆதிக்க இனமாக உருவகம் செய்துகொண்ட மதவாதிகளும், ஆன்மீகவாதிகளும்தான் இதற்கு முழுமுதற் காரணம்.

முற்றிலும் காதலாக உணரப்பட்ட வாழ்வின் பேரின்பம் சிற்றின்பமாக மாற்றப்பட்டது பக்தி இலக்கியத்தின் தொடக்ககாலம் என்றும் அதை பெண்ணடிமைத் தனத்தின் போக்காகவும், வன்மத்தின் உச்சமாகவும் மடைமாற்றியது சிற்றிலக்கியங்கள் எனவும் கூறலாம். நாஞ்சில் நாடனின் சிற்றிலக்கியங்களில் கூட இதைப் பற்றிய விரிவான ஆய்வுகளைக் காணலாம்.

படம்: dinamani

சங்க காலச் சமுதாயத்தினர் பாலியலை மிக இயற்கையானதாகக் கருதினர். அதனைக் குற்றமானது, சிற்றின்பம், தீமையானது என்று இழிவாகக் கருதி ஒதுக்கும் போக்கு அறவே இல்லை. புற ஒழுக்கப் பாடல்களைக் காட்டிலும் அகப் பாடல்களே அதிகம் இருப்பதே இதற்குச் சான்று. அதுபோல பாலுறவை மையப்படுத்தி காமத்தை உடலிலிருந்து பிரித்துக் காமக்கலையாக (eroticism) மாற்றும் முயற்சியும் இல்லை. ஆணுக்கும், பெண்ணுக்குமிடையிலான உடலுறவை இயல்பானதாகக் கருதும்போக்கே சங்க இலக்கியம் முழுவதும் காணப்படுகிறது. போர், நாடு, உடைமை என விரிந்திடும் ஆணின் வாழ்க்கையில் பாலியல் வேட்கை மட்டுப்படும் வேளையில், வீட்டில் காத்திருக்கும் பெண்ணின் பாலியல் விருப்பம் அளவற்றுப் பொங்கி வழிகின்றது. இந்நிலையில், பாலியல் விழைவை எப்படி எதிர்கொள்வது என்பது பல பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.

சங்க இலக்கிய மரபானது பாலியல் விருப்பம், புணர்ச்சி, கலவியின்பம் என்று மூன்று நிலைகளில் ஆணும், பெண்ணும் சேர்ந்து உடல், மனரீதியில் அனுபவிக்கும் அனுபவங்கள், மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. காதலன் தன்னுடைய காதலியிடமிருந்து பெறும் சுகத்தைப் பெரிதும் கொண்டாடுகிறான். அவளை ஒரு தடவை புணர்ந்து விட்டால், அதற்குப் பின்னர் அரை நாள் வாழ்க்கை கூடத் தேவை இல்லை என்கிறான் ஒருவன்; கடலால் சூழப்பட்ட உலகமும், நாடும் கூடத் தன் காதலியின் பூப்போன்ற மேனியை அணைத்துப் பெறும் இன்பத்துக்கு ஈடாக முடியாது என்கிறான் இன்னொருவன். பெண்ணும் தன்னுடைய பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்தத் தயங்கிடவில்லை. தலைவன் வாழும் மலையிலிருந்து வரும் நீரில் மிதந்து வருகின்ற காந்தள் மலரை முயங்குவது தனக்கு ஆறுதலாக உள்ளது என்கிறாள் ஒரு பெண்.

படம்: ujiladevi

திருமணத்திற்கு முந்தைய உறவுக் காலத்திலும் காதலர் பாலுறவு கொள்வது சங்க காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. காமம் முற்றிலும் அக வெளிப்பாடகவே கருதப்பட்டதால்தான் இந்தப் பண்பாடு அதைப் போற்றி வளர்த்திருக்கிறது. ஒருபுறம் பெண்ணின் புழங்கு வெளியையும், மனவோட்டத்தையும் தடைப்படுத்திட முயலும் சமூகச் சூழலில், அவளுடைய காமம் பற்றிய வெளிப்பாட்டிற்கு ஆதரவான நிலை நிலவியது. இனக்குழுவினருக்கிடையிலான சண்டைகளில் போராடி மடிய ஆணுடல்களை உற்பத்தி செய்திட பெண்ணின் காமம் போற்றப்பட்டுள்ளது. `ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே’ என்ற வரிகள் பெண்ணின் அடையாளத்தை உணர்த்துகின்றன.

“முட்டுவென் கொல்? தாக்குவென் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ அ அல் எனக் கூவு வேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் உயிர்க்கே”
குறுந்தொகை : 28

என் காதல் நோயின் கொடுமை அறியாமல் தென்றல் காற்று அலைக்கழிக்கிறது; அதனை அறியாமல் ஊரும் உறங்குகிறது. என் நிலையை எப்படிக் கூறுவேன்? முட்டுவேனோ? தாக்குவேனோ? கூவுவேனோ? என்ற ஔவையாரின் பாடல் வரிகள் பெண்ணின் காமம்மிக்க மனத்தைத் துல்லியமாகச் சித்திரித்துள்ளன.
சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரையில் பாலியல் துய்ப்பில் பெண்ணும் கொண்டாட்டம் மிக்கவளாக விளங்குகிறாள். பெரும்பாலும் ஆணின் எதிர் பால் வேட்கை என்பது உடலுறவு என்ற மைய நிகழ்வினை நோக்கியதாக இருந்தாலும் அங்கேயும்

“ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”.                                                                                                                                                        –திருக்குறள் 1330

என்ற வள்ளுவனின் நோக்கில் காதல் தழும்பி வழிவதைக் காணலாம். ஆனால் அதைக் காட்டிலும் கூடுதலாகப் பெண்ணின் காமவேட்கை வெவ்வேறு தளங்களில் நுட்பமாக விரியக் கூடியதாக இருக்கிறது. காதலனின் வருகையைப் பார்த்தால் போதும், காதலனின் மார்பில் சாய்ந்தால் போதும், அவன் உடல் நாற்றத்தை உணர்ந்தால் போதும் என்றெல்லாம் பெண்ணின் காமம் பன்முகத் தன்மையுடையதாக விரிகின்றது.

படம்: samakalam

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பு நாட எம்
தொடர்பு தேயுமோ நின்வயி னானே
          –குறுந்தொகை -42

சங்க காலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர்; பலர் பாடல்கள் இயற்றினர். ஆண்களால் தொகுக்கப்பெற்றுள்ள தொகை நூல்களில் நாற்பத்தொன்று பெண் கவிஞர்களின் கவிதைகள். சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் பெண் நிலை, மனவுணர்வு, உடல் பற்றிய வருணனை போன்றன தனித்து விளங்குகின்றன. பெண்ணின் பாலியல் மனநிலையை ஆழமாக விவரித்துள்ளன.

“கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மானமக் கவினே”

–குறுந்தொகை- 27

அதாவது மகப்பேற்றுக்குப் பின்னரே பெண்ணுடல் முழுமையடையும் என்று கருதுகின்றார் வெள்ளி வீதியார். அதோடு திருவள்ளுவரும்

“உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது”
                                                                 –திருக்குறள் .1185

“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு”
                                                                 — திருக்குறள்.1186

போன்ற குரல்களின் வாயிலாகப் பெண்ணின் அகவுணர்வை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெண்ணுடல் இயற்கையாகவே முலை, அல்குல், தாய் வயிறு (கருப்பை) எனத் தனித்த அடையாளங் கொண்டது. பெண்ணுறுப்புகள் பற்றிய பெண் கவிஞர்களின் பார்வையில் பாலியல் நோக்கமுடையதெனினும், தனித்து விளங்குகின்றன. பொருள் தேடிப் பிரிந்து போன கணவனுக்காக வீட்டில் காத்திருக்கும் பெண் எதிர்கொள்ளும் பாலியல் மனநிலையை ஔவையார் நுணுக்கமாக விவரித்துள்ளார்.

“வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே”

அதாவது ஒரு பெண் `தன்னுடைய முலைகளிடையே துயிலுவதை விடுத்துக் கொடிய பாலை வழி சென்றாரே கணவன்’ என்று வருந்துகிறாள். பிரிவு பற்றி யோசிக்கும்போது பாலியல் விழைவு இயற்கையாக இடம்பெறுவது சங்கக் கவிதைகளின் தனித்துவம்.

படம்: thamil

ஆக இவ்வாறு காதலையும், காமத்தையும் இரண்டறக் கலந்து போற்றி வளர்த்த சமூகத்தில் பக்தி இலக்கியங்களின் தொடக்கமே பாலியல் உணர்வுகளை எதிர்மறை அம்சமாக்கிவிட்டது. உடல் பற்றிய கொண்டாட்டங்கள் புறந்தள்ளப்பட்டன. உடலை வருத்தித் தவமிருப்பது, உடலைத் துறப்பதன் மூலம் வீடுபேறு அடைதல் போன்ற கருத்துப் போக்குகள் பாலுறவைக் கேவலமாக ஆக்கின; பாலியல் என்பது குற்றமனம் தொடர்புடையதாக மாறியது. சிற்றின்பம் என்று இழிவுபடுத்தப்பட்ட பாலியல் புறக்கணிப்பு, மனிதர்களை அதிகாரத்துக்குட்பட்ட வெறும் உடல்களாக மாற்றிவிட்டது. ஒத்தக் கருத்துடைய ஆணும், பெண்ணும் சேர்ந்து துய்க்கும் பாலுறவு என்பதுதான் பெரும்பேறு.

பின்னர் பின்நவீனத்துவ வளர்ச்சியில் முதலாளித்துவப் பண்பாடு பெண்ணடிமைத்தனத்தை வளர்த்தெடுப்பதோடு தொடர்ந்து பல வகையிலும் பாலியல் குறித்த தவறான கருத்துகளையும், வன்மம் நிறைந்த பாலியல் உணர்வுகளையும் வளர்க்கிறது. இதுவே இன்று மிகப்பெரிய வணிகத் தளமாகவும் மாறிவிட்டது. அதன் விளைவுதான் இன்றைய தலைமுறையை பாலியல் குற்றங்கள் நோக்கித் தள்ளுகின்றன.

பொது வெளியில் ஒரு ஆண் தன்னுடைய பாலியல் உணர்வுகளை எந்த வடிவிலும் வெளிப்படுத்தத் தடையில்லாத நிலையிலும் ஒரு பெண் எந்த வடிவிலும் வெளிப்படுத்த உரிமை இல்லை என்பதே எத்தகைய வன்முறை? இந்த வன்மம் பெண் மீதான அடக்குமுறையை ஊக்குவிக்காமல் என்ன செய்யும்? இன்று பெரும்பாலான பாலியல் குற்றங்களின் அடிப்படை அந்த பெண் மீது ஏவப்படும் அடக்குமுறையே அன்றிப் பெரிதும் காமத்தின் ஈர்ப்பினால் அல்ல.

படம்: muthukamalam

இன்று அடிப்படை மதவாத அமைப்புகள் கூட தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவ முயன்று வருகின்றன. அவை பெண்களை வெறும் பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாக மாற்ற முயலும். பெண்ணின் ஆடைகள் தொடங்கிப் பெண் நடத்தை வரை எல்லாவற்றையும் கண்டிக்க முயலும் இவர்களின் போக்கும் அபாயகரமானது.
இன்னொருபுறம் ஆபாசத்தையும், பாலியல் வக்கிரத்தையும் தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களினால் இளைய தலைமுறையினர் மனக்குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். பாலியல் பற்றிய தவறான புரிதலைப் புறந்தள்ளிவிட்டு, அதை இயற்கையானதாகக் கருதி வரவேற்கும் மனநிலை இன்று தேவைப்படுகிறது.

இத்தகு சூழலில் சங்கக் கவிதைகள் சித்திரிக்கும் இயல்பான பாலியல் குறித்த வாசிப்பு அவசியமாகின்றது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்களிடமிருந்து பாலியல் ரீதியில் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பது வரலாற்றின் விநோதம்தான். இருந்தும் பண்பாட்டு வளர்ச்சியில் எந்த இடத்திலும் தவறுகள் நடக்கலாம். அதை ஒழுங்குபடுத்தி மீட்டுருவாக்கம் செய்து கொள்ளவே இலக்கியங்கள். எனவே மிகப் பழமையான இந்தப் பண்பட்ட சமூகத்தின் பேரிலக்கியங்களின் வாயிலாகவே காமம் எனும் பேரின்பத்தின் இலக்கணம் யாதென்று கற்றுத் தேர்ந்து பண்பட்ட, பாலியல் குற்றங்களற்ற சமூகமாக உலகின் தொல்குடியான தமிழ்ச் சமூகத்தை மாற்றிடுவோம்.

Featured Image credit:  Etsy

Facebook Comments
பகிரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here