அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அப்பாவி மக்களைப் பசியிலும், வறுமையிலும் துன்புறச் செய்து, அதிகாரத் திமிரில் உரிமைக்குரல் அனைத்தையும் நசுக்குவதற்காக உழைத்துக் களைத்த பாட்டாளி மக்களை வெங்கொடுமைச் சாக்காட்டில் வாட்டியெடுத்த அரச கட்டமைப்பையும், ஏகாதிபத்யத்தையும் ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை அடித்துக் கிளம்பும் புயலென, டெக்டோனிக் அடுக்குகளை வெடித்துக் கிளம்பும் எரிமலையென மிரட்சியான அதன் மாட மாளிகையின் மீது தாக்கிய உரிமைக் குரல்களின் ஒருமித்த அதிர்வுகள் அதன் அசைக்க முடியா வலிமையையும், அதிகார வல்லமையையும் தகர்த்து வீழ்த்தியதோடு மாபெரும் புரட்சிப்படையை கட்டியெழுப்பிய அந்தப் பாடல் 1792 ஏப்ரல் 25ஆம் நாள் பின்னிரவில் சர்வாதிகார அரசின் பாதுகாவலனான ஒரு இராணுவ வீரனிடமிருந்தே அரசுக்கு எதிரான குரலாய் உதித்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நடந்தது. பின்னாளில் அதுவே உலகின் பல நாடுகளிலும் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை முழக்கமாய் எல்லைகள் பல கடந்து வீரியம் அடைந்ததும் நிகழ்ந்த உண்மை.

நிலமானிய, நிலபிரப்புத்துவ முறைகளுக்கு எதிராகவும், நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவான வரிக் கொள்கையை எதிர்த்தும் 1789 இல் போராட்டத்தில் குதித்த பாரிஸ் மக்களைத் தொடர்ந்து உரிமைக்கான உணர்வைத் தக்கவைக்க குரல் கொடுக்க வைத்தது இந்தப் பாடல். உழைக்கும் மக்களின் உரிமையைப் பறிக்கும், உழைப்பைத் திருடும் நிலவுடைமை அமைப்புகள் அனைத்தையும் அடிப்படையிலேயே நிலை குலையச் செய்த அந்த முழக்கம்தான் ‘லா மெர்ஸெய்லே’. இன்றைய பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதம்.

படம்: ilimvemedeniyet

இயற்கையோடு இயைந்த, மனித உணர்வுகளோடு உறவாடுகிற, யாக்கையின் தேவைகளை வெளிப்படுத்துகிற கலையே காலம் கடந்தும் நிலைத்திருக்கும் பண்பைப் பெரும். அது நிலவியல் சார்ந்து, சூழ்நிலை சார்ந்து, மொழி சார்ந்து, காலத்தின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வடிவத்தை எட்டும். அவ்வாறு மண்ணோடும், மக்களோடும் கலந்து உருவாகிற கலைகள் யாவும் மக்களுக்கானதாகவும், மண்ணுக்கானதாகவும் இல்லாவிடின் அந்நியப்பட்டுப் போவதுடன் காலாவதியாகிப் போகும். ஓவியம், இலக்கியம், இசை என அனைத்திற்கும் இதே கோட்பாடுதான். அந்த வரிசையிலே எத்தனையோ பாடல்களும், இசையும் நின்று நிலைப்பதும், அவ்வப்போது காற்றோடு கரைவதுமாக இருப்பினும் நாட்டுப் பண் என்பது நிலவரையறைக்குட்பட்டு வாழும் நிலப்பிரபுத்துவ சமூகம் காலனியாட்சிக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அதிலிருந்து மீள்வதற்கான உணர்வுகளைக் கட்டமைக்க வேண்டிய தேவை கருதி உருவானது.
அது தாய்நாட்டின் பெருமைகளைப், பண்பாட்டைப், பாரம்பரியத்தைப் போற்றி பாடுவதாகவும், அதன் மூலம் காலனியத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவும் தோன்றியதாகவே உள்ளது. ஆனால் ஏகாதிபத்தியத்தோடு, சொந்த நாட்டின் அரச பயங்கரவாதத்தையும், சர்வாதிகாரத்தையும் எதிர்த்து அடிப்படை மனித உரிமைக்கான முழக்கமாகவும், பாட்டாளி வகுப்பினரின் உரிமை மீட்புப் பாடலாகவும் உள்ள ஒன்று தேசிய கீதமாகவே மாறிப் போனதன் வரலாறு பற்றி இன்றளவும் மூன்றாம் உலக நாடுகளின் மீது முதலாளித்துவ கட்டமைப்பின் மூலம் ஏகாதிபத்தியத்தை நிறுவிக் கொண்டிருக்கும் வல்லரசு நாடுகளுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

அரசின் கொடுங்கோன்மைக்கு எதிரான மக்களின் உணர்வை ஒன்று திரட்டவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிடவும், வலிமையான பாரிஸ் கம்யூன் அரசை நிறுவிடவும் 1792ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சிப் போர்களில் பங்கேற்ற இராணு அதிகாரி ‘கிளாடே ஜோசப் ரோகெத் தி லில்’ அவர்களால் எழுதப்பட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆஸ்திரியா மீது போர் அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஸ்ட்ராட்டஸ் நகரின் மேயர் பாரன் பிலிப் அவர்கள் வேண்டுகோளின்படி புரட்சிப்படைக்கெனத் தனி கொள்கை முழக்கப் பாடல் ஒன்று இல்லாது இருப்பது பெரும் குறைபாடாக இருப்பதாகக் கருதி தி லில் இந்தப் பாடலை எழுதி இசைத்தார். இவர்கள் அனைவரும் கொள்கை வேறுபாடு காணாது இராணுவத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றிய புரட்சியாளர்களுக்கு ஆதரவான வீரர்கள்.

படம்: clefrance

ஜூன் 20, 1791 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு புரட்சிப் படையினரால் கைது செய்யப்பட்ட பதினாறாம் லூயியை மீண்டும் மீட்டு ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க ஏகாதிபத்திய நாடுகள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நேரத்தில் வலுவாக இருந்த புரட்சிப்படையினர் ஒன்றாகத் திரள முடிவெடுத்தனர். 516 இளைஞர்களைக் கொண்ட அந்தப் புரட்சிப்படை நாடே அதிர லா மெர்ஸெயிலேவை ஆவேசமாகப் பாடிக்கொண்டு வழி நெடுகிலும் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் பேராதரவைப் பெற்றவாறு மெர்ஸெய்லெவிலிருந்து கிளம்பி தலைநகர் பாரிஸ் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். 1792 ஜுலை 3 ஆம் தேதி கிளம்பிய இந்தப் பேரணி தொடர்ந்து 26 நாட்கள் நடை பயணத்தை முடித்து தலை நகர் பாரிஸை அடைந்தது.

படம்: futurity

அப்போது இளைஞரும், முதுகலை மருத்துவருமான பிரான்காய்ஸ் மிரேரால் இந்தப் பாடலைப் பாடி ஒருங்கிணைக்கப்பட்டு மெர்ஸிலேவில் இருந்து தலைநகர் பாரிஸ் நோக்கிப் பேரணி வந்த படை வீரர்கள் மக்களிடையே நாட்டுப் பற்றைத் தூண்டும் வகையிலே உணர்ச்சி வேகத்தில் பாடிக் கொண்டே வந்ததால் அன்றிலிருந்து ‘லா மெர்ஸிலே’ என்று அடையாளப்படுத்தப்பட்டது.. இந்தப் பாடல்தான் ஐரோப்பிய பேரணி வடிவத்தின் கொள்கை முழக்கப் பாடலுக்கான முதல் உதாரணம். 14 ஜூலை 1795 ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆணைப்படி இது தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.

1871இல் மேலும் சில வரிகள் சேர்க்கப்பட்டு பாரிஸ் கம்மியூன் பொதுவுடைமை அரசு ஏற்றுக்கொண்ட வகையிலே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அனைத்துலகப் புரட்சி இயக்கங்களின் முழக்கப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1879இல் மீண்டும் பழைய பாடல் வரிகளோடு பாரிஸ் கம்யூனால் பிரான்சு நாட்டின் தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவின் ஏகாதிபத்தியத்தை உணர்த்துவதாக அமைந்த பாடல் வரிகள் மக்களின் நாட்டுப் பற்றையும், உரிமை மீட்பையும் தூண்டியது என்று சொன்னால் அதில் எள்ளளவும் ஐயமில்லை. 1917ஆம் ஆண்டு நடந்த பிப்ரவரிப் புரட்சிக்குப் பிறகு சில ஆண்டுகள் கிட்டத்தட்ட ரசியாவிலும் தேசிய கீதம் போலவே நடைமுறையிலிருந்தது ‘லா மெர்ஸெல்ஸ்’.

21 ஜனவரி 1793 இல் பதினாறாம் லூயி மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டபோது உலகெங்கிலும் அடிமைத் தலைகளை உருவாக்கிச் சுரண்டிப் பிழைக்கும் அதிகார வர்க்கத்தை ஒருகணம் மிரளத்தான் வைத்தது ‘லா மெர்ஸெலே’. இன்றளவும் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 14 ஆம் நாள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக எழுந்த பிரெஞ்சு புரட்சியின் துவக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் தலைநகர் பாரிஸில் உள்ள பாஸ்திலே கொடுஞ்சிறை நீக்கப்பட்ட நாள் கொண்டாடப்படுகிற அன்று நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் குழந்தைகள், பெரியவர்கள், அரசியல் தலைவர்கள், இராணுவ வீரர்கள், பிரபலங்கள், பாடகர்கள் என அனைவரும் மகிழ்ந்து பாடுகிறபடி ‘லா மெர்செய்லே’ கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கும்.

படம்: dnaindia

இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் ஏகாதிபத்திய நாடுகள் போலி தேசிய சிந்தனையை விதைத்து மக்களது சிந்தனையை மழுங்கடிக்கச் செய்திட அந்த உணர்வுகளைப் பயன்படுத்துகிறது என்பது வேறு கதை. எனவே இன்றைய தேசிய சிந்தனை உலகலாவியதாக விரியவும் அது மக்களுக்கான பொதுவுடைமைச் சிந்தனையாக உருவாகவும் மக்கள் அமைப்பாகத் திரண்டு அத்தகைய உணர்வுகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து ஒலித்துக் கொண்டிருக்கும் லா மெர்ஸெல்ஸ் உண்மையிலேயே மெர்சலான பாடல்தான். இதோ அந்தப் பாடல் வரிகளின் முதல் பத்தியின் மொழியாக்கம்:
தந்தை நாட்டின் பிள்ளைகளே எழுந்திருங்கள்!
மகிமையின் நாள் வந்தடைந்துவிட்டது.
நமக்கு எதிராக, வல்லாட்சியின்
கொடூரப் பதாகை உயர்த்தப்பட்டிருக்கிறது!
அந்த வெறி கொண்ட வீரர்களின் உறுமல்
நமது நாட்டுப்புறங்களில் கேட்கின்றதா?
உங்கள் பிள்ளைகள், மகளிரின்
குரல் வளையைத் துண்டிக்க வந்துவிட்டார்கள்.
ஆயுதங்கள் எடுங்கள், குடிமக்களே,
நமது படைகளை உருவாக்குவோம்.
நடை போடுவாம்! நடை போடுவோம்!
தூய்மையற்ற (எதிரிகளின்) குருதியில்
நமது களங்கள் மூழ்கட்டும்!

படம்: ziarulmetropolis

21 செப்டம்பர் 1792ஆம் ஆண்டு பிரெஞ்சு சார்வாதிகார முடியாட்சி வீழ்த்தப்பட்டதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்றோடு 226 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘லா மெர்ஸெலே’ பற்றிய பதிவை வெளியிடுவதில் மகிழ்ச்சியே!

Featured image credit: frenchictouch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here