Elephant killed in Kerala
Who Killed the Elephant in Kerala – Someone With Firecrackers or You and Me?

‘யானை’ என்ற சொல்லைக் கேட்டதும் நமது மனது குழந்தைப் பருவத்தை நோக்கி ஓடிவிடுகிறது. இன்றைக்கும் தெருக்களில் யானை வந்தால், அதனைப் பார்க்க முதல் ஆளாக ஓடுவது என்னுடைய அம்மாவாகத்தான் இருக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் வியக்க வைக்கும் உயிரினம் அது. வனம் எனும் பெருஞ்சொத்தை காத்து நிற்கும் காவலன். இப்பூவுலகில் இன்றும் நிலைத்திருக்கும் பேரதிசயம்.

வாட்ஸ்சப், முகநூல், இன்ஸ்டா என்று இணையம் முழுவதும் அந்த வனதேவதையின் புகைப்படமும் , மனிதனாக பிறந்ததற்கு  மன்னிப்பு வேண்டி வாசகங்களும் வளம் வருகின்றன. இதே போன்றுதான் புகைப்படமும் வசனமும் சின்னத் தம்பி யானையை கும்கிகள் கொண்டு துன்புறுத்தி அப்புறப்படுத்தியபோதும் , மகாராஜா யானை கொள்ளப்பட்டபோதும் இணையத்தில் வளம் வந்தன . ஏன் இன்று சிசுவோடு கொல்லப்பட்ட அந்த வனதேவதையின் சாவுக்கு காரணமான கூட்டத்தில் ஒருவன் கூட நான் மேல் சொன்ன சம்பவங்களுக்கு அனுதாப ஸ்டேட்டஸ் போட்டிருக்கலாம். ( காட்டு பன்றிகளுக்கு வைக்கப்பட்ட வெடியை யானை தின்று விட்டது என்ற செய்தி இப்போது வருகின்றன. ஆனால் இன்னும் அவை உறுதி செய்யப்படவில்லை ) இது ஒரு இணையதள மனநிலை. பெருவாரியான மக்கள் வினையாற்றும் ஒன்றுக்கு நாமும் நம் கருத்தை தெரிவிப்பது. எல்லோரையும் இந்தப் புள்ளியில் இணைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று நம்பும் சொற்ப மனிதர்கள் இங்கு இருக்கவே செய்கிறார்கள். ஆனால் சிக்கல், மீதம் இருக்கும் பெரும்பான்மை மக்களின் மனநிலையால் வருவது. வனங்களை அழித்து தண்டவாளங்களையும் , கான்கிரிட் ரோடுகளையும் நிலக்கரிச் சுரங்கங்களையும் அமைக்கும்போது அவை இந்த மக்களின் வளர்ச்சிக்கானது என்று நம்புவதில் இருந்தே இவை தொடங்கிறது. 

விளைநிலத்திற்குள் புகுந்த யானைகள், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்த யானைகள் போன்ற செய்திகளே தவறான ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன். காட்டு விலங்குகளால் பாதிப்படையும் மக்களின் மனநிலையையும் பேச வேண்டும் என்ற குரலும் கேட்கத்தான் செய்கிறது. ஆனால் வன உயிர்களைப் பற்றி சரியான புரிதல் இல்லாத மேம்போக்கான பார்வையே இந்த வாதம். காரணம் யானைகள் ஒருபோதும் பிறருக்குச் சொந்தமான பகுதிகளுக்குள் நுழைவதில்லை. உயிர்வாழும் பொருட்டு உணவு மற்றும் இருப்பிடத்திற்காக தாம் வாழும் பகுதியை விட்டு வேறு வழியின்றி மற்றொரு இடத்தை நாடி போகும்போது உயிரினங்களுக்கு ஏற்படுக்கின்ற பிரச்சினையே இது.

ஆனால் இங்கே அதுகூட நிகழவில்லை. யானையின் வழித்தடத்தை ‘வலசை’ என்று கூறுவார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக உணவைத்தேடி பயணித்த பாதையை அவை ஒருபோதும் மறந்து வேறுவழியில் சென்றதே இல்லை. பின் ஏன் அவை ஊருக்குள் வருகின்றன? அவைகள் நம் ஊருக்குள் வரவில்லை, அவற்றை நாம்தான் வர வைக்கிறோம். அவற்றின் இருப்பிடத்தை அபகரித்து, வாழ்வாதாரத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறோம்.

https://mubi.com/films/disneynature-s-elephant

இங்கு ‘நாம்’ என்பதிலும் கூட ஒரு குறிபிடத்தக்க முரண் உள்ளது. காடுகளில் இன்றும் பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்களை வனவிலங்கு தாக்கியது என்ற செய்தியை என்றாவது கேள்விப்பட்டது உண்டா ? நிச்சயமாக இருக்காது. காரணம், வனம் எல்லோருக்குமான சொத்து என்ற புரிந்துணர்வு அங்கு இருக்கிறது. ஒருவர் மற்றொருவரின் வாழ்வியலில் தலையிடுவதே இல்லை. இங்கு பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைகிறார்கள், வனங்களுக்கு அருகில் இருக்கும் நிலங்களைச் சுற்றி மின்சார வேலிகளை அமைக்கிறார்கள். காடுகளை அழித்து மடங்களும் , நீர்நிலைகளை அழித்து கல்லூரிகளும் கட்டி அவர்களின் கல்லாபெட்டியை நிரப்ப காடுகளை காவு வாங்குகிறார்கள். நடுக்காட்டில் விடுதிகள் அமைத்து யாரோ சில பணக்காரர்கள் தங்களின் பொழுதுகளைக் கழிக்க வனத்தின் ராஜாக்கள் கொட்டடியில் அடைக்கப்படுகின்றன.

நாம் மட்டுமே இந்த உலகத்தின் முக்கியக் கூறு அல்ல, வனத்தின் சின்ன, சின்ன உயிரும் முக்கியமே. அதுவும் யானைகள், வனத்தின் தேவதைகள், வனம் அவைகளால் உருவானவையே. யானைகள்தான் வனம் என்ற சொல்லின் ஆணிவேர். ஒரு யானை நாள் ஒன்றுக்கு 350 கிலோ உணவை உட்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். எனவே உணவுத் தேவையை நிவர்த்தி செய்ய அவை தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டே இருக்கும். ஒருமுறை பயணித்த இடத்தையும், நீர், உணவு கிடைத்த இடத்தையும் இறக்கும்வரை அவை மறக்காது.

யானையும் தாய்வழிச் சமூகம்தான். யானைக்கூட்டத்தின் தலைமை பொறுப்பில் எப்போதும் பெண்களே இருக்கும். இதற்கும் காடுகளின் செழிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? யானைகளின் நலத்திற்கும், காடுகளின் செழுமைக்கும் சம்பந்தம் இருக்கிறது

https://wallpaperscraft.com/download/slony_tolpa_semya_trava_zabota_52931/1280×960

யானையின் ஜீரண சக்தி குறைவு எனவே அதன் கழிவில் இருந்து அதிகமான விதைகள் காடுகள் முழுவதும் பரவும். அதுமட்டும் இல்லாமல் உறைந்த மரக் கிளைகளை உடைத்து உண்பதால் காட்டிற்குள் சூரிய ஒளி உட்புக உதவுகிறது. யானை உண்ட உணவின் மீதியே வனத்தில் வாழும் பல உயிரினங்களின் உணவாக உள்ளது. ‘யானைகள் வாழும் காடு செழிப்பானது’ என்றொரு சொலவடை உள்ளது. அப்படிப்பட்ட யானைகள்தான் தங்களின் வழித்தடம் அழிக்கப்பட்டு அங்கே தண்டவாளங்கள் வந்தது கூடத் தெரியாமல் இரயிலில் அடிபட்டு மடிகின்றன. மொத்த வனத்தின் நினைவுகளையும் அந்தத் தண்டவாளத்தில் பழிகொடுத்துப் பரிதாபமாக இறந்து கிடக்கும் யானையின் புகைப்படத்தை நாளிதழில் பார்க்கும்போது அதன் சாவில் நமது பங்கும் உள்ளது என்று ஒருபோதாவது தோன்றியது உண்டா ?

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 75 யானைகள் பலியாகி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் விபத்து மற்றும் வேட்டைகள் மூலம் 373 யானைகள் உயிரிழந்துள்ளன. ரயிலில் அடிபட்டு மட்டுமே 62 யானைகள்  உயிரிழந்துள்ளன. மின்வேலியில்  மாட்டி உயிரிழந்த யானைகள், தோட்டத்தை சேதப்படுத்துகின்றன என்று விஷம் வைத்துக் கொல்லப்பட்ட யானைகள் என இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகும். யானையைக் கொன்ற அந்த நபர் கண்டுபிடிக்கப்படலாம், அப்படிக் கண்டுபிடித்தாலும் அவருக்கு அதிகபட்ச தண்டனை என்ன கொடுக்க முடியும் ? சில வருடங்களுக்கு முன்பு மானைக் கொன்ற அந்த உச்ச நடிகரை சட்டத்தால் என்ன செய்ய முடிந்தது ? குட்டியானை வாலில் தீ வைத்தது, நாயை மாடியில் இருந்து தூக்கி வீசியது, மிருகங்களை வன்புணர்வு செய்தது என்று மற்ற உயிரினங்கள் மீது நமது வன்மம் ஏனோ கூடிக்கொண்டே போகிறது.

https://twitter.com/mikbisi/status/1268833610330767360/photo/1

இங்கு கண்டிப்பாக சில கேள்விகள் எழலாம். யானையை மனிதர்களோடு வாழ அனுமதிக்க முடியுமா? அவை ஆபத்தானவை இல்லையா? என்பதுதான். பழங்குடிகள் அவ்வாறுதானே இன்னமும் வாழ்கிறார்கள்! ஆனால் நமக்கு அது கஷ்டம்தான். காரணம், சில மாதங்களுக்கு முன்புகூட குட்டியானை ஒன்றின் வாலில் குடிபோதையில் தீ வைத்த இளைஞர்கள் என்று படித்து கடுப்பானேன். அப்படி இருக்கும்போது அவற்றை நாம் கண்டிப்பாக அன்பாக பார்த்துக் கொள்ளமாட்டோம். அகதி வாழ்வு என்பது மனிதர்களோடு போகட்டும். அவைகளின் இருப்பிடத்தை அவற்றிடமே ஒப்படைப்பதுதான் சரி. ஒரு யானையை முகாம்களில் அடைத்தாலும் அதற்கான உணவு கிடைக்குமே என்று மட்டும் ஒருபோதும் எண்ணிவிடாதீர்கள். அது சிறைவாழ்விற்கு சமம். அது ஒரு முழு வனத்தின் ராஜாவை தீப்பெட்டிக்குள் அடைப்பதாகும்.

உணவு தேடி வந்த அந்த யானை யாரையும் தொந்தரவு செய்யவில்லை. பழத்தினுள் இருக்கும் வெடி வெடித்ததும் அது தண்ணீருக்குள் இறங்கிவிட்டது. விஷயம் தெரிந்த வனத்துறை அதை மீட்க முயன்றபோதும் அவர்களைத் தன் அருகில் அது நெருங்கவிடவில்லை. இறந்த பின்பு அதைப் பரிசோதித்தபோது அதன் வயிற்றில் குட்டி இருந்தது. ஒரு தாய் யானையின் ஆக்ரோஷம் ஆண் யானையை விட மோசமானது. ஆனால் அது அந்தக் கோபத்தை அந்த ஊருக்குள் சென்று அந்த கிராமத்தின் மீது காட்டவில்லை ! மரணம் நெருங்கியபோதும்  அந்த வாயில்லா ஜீவனுக்குத் தெரிந்த ‘வன்முறை அறம் ஆகாது’ என்கின்ற உண்மை ஆறறிவு உள்ள நமக்கு ஏனோ தெரியாமலே போய்விடுகிறது. நமது பரிதாப உச்சுகொட்டலோ, போஸ்ட்டுகளோ அந்த வனதேவதையின் இறப்பிற்கு நீதியைப் பெற்றுத் தராது. வளர்ச்சி என்று சொல்லி காடுகளை அழிப்பதை நிறுத்தாதவரை இன்னுமொரு வனதேவதை ஒவ்வொருநாளும் செத்துகொண்டேதான் இருப்பாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here