பேரன்பு
படம் : Twitter

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் அவ்வப்போது அற்புதமான படைப்புகள் வரும். அந்த வரிசையில் இயக்குனர் ராம் அவர்களின் ‘பேரன்பு’ மனிதகுலம் முழுமைக்குமான பயனுள்ள ஆக்கம்.  ஒவ்வொரு காட்சிக்குமான ஒழுங்கும், நீதியுமே அதற்கு சாட்சியம் சொல்லும். சக மனிதரை நேசித்த, வஞ்சித்த அனைவரையும் படம் பார்க்கின்ற ஒவ்வொரு கணப்பொழுதும் நெகிழ வைக்கும்.

உலக உய்விற்கான அடிப்படையைக் கொண்டாடுகிறது இந்தப் படைப்பு. அப்படி என்ன அது? “அன்பின் வழியது உயிர்நிலை” என்பதுதான் அது. கட்டுப்பாடுகளற்ற, அறம் சார்ந்த, அறிவியல் நோக்கிலான படைப்பின் இலக்கணம் அது.  ஆனால் நாம் அனைவரும் பகுத்துண்டு பல்லுயிரோம்பி வளர்க்க வேண்டிய மனித உறவுகளை மேம்படுத்துகிற பண்பிலே அதன் மூலக்கூறான அன்பை முன்னிலைப்படுத்தத் தவறிவிட்டு குடும்ப அமைப்பு முறையில் எதன் பொருட்டோ, யாரோ சமயம் சார்ந்து, மொழி சார்ந்து, இனம் சார்ந்து வகுத்து வரையறுத்துத் தந்த தவறான இலக்கணங்களை இறுகப் பற்றியபடி பெரும் சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு வருந்துகிறோம்.

தனிமனித உணர்வுகளை முன்னிலைப்படுத்துகிற இடத்திலே சக மனிதருடைய தேவையை, இருப்பை உணராது கடந்து போவதை ‘வன்முறை’ என்று உணர்த்த மனநல மருத்துவரா வர வேண்டும்? அது சரி, உணவுச் சங்கிலியை உடைத்த சுயநலமிக்க ஒரே உயிரினத்திடம் இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்ப்பது தவறுதான்! இருந்தும் தொட்டுவிடும் தூரத்தில் வைத்து செவ்வாயையே ஆராய  முனையும் ஆறாவது அறிவு பலகோடி ஆண்டுகளாய் நமக்கான வாழ்வாதாரத்தை அள்ள, அள்ளக் குறையாது வழங்கிட்ட அற்புதமான இந்த உலகின் உய்வைப் பற்றிக் கடுகளவேனும் சிந்தித்தால் போதும், எந்த வகையிலும் மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தித் தராத அந்தச் சிக்கலில் இருந்து நீங்கிட எளிமையான வழியைப் புத்தம் புது மலரில் தேன் உண்ணும் வண்ணத்துப் பூச்சிகளும், புனலாடும் மீன்களும், புணர்தல் நிமித்தம் கண்டங்கள் கடந்து செல்லும் பட்சிகளும், அவ்வளவு ஏன்?அன்றாடம் நம் வீட்டு மொட்டை மாடிக்கு வரும் காக்கையும், குருவியுமே கூடக் கற்றுத் தரும் என்பது நன்கு புரியும்.

பேரன்பு
படம் : twitter

ஏன் நீங்கள் பிறரைப் போல இல்லை என்று கேட்பது எத்தனை பெரிய வன்முறை” என்பதிலிருந்து முரண்களைக் களைந்து ‘பேரன்பு’தான் மனிதம் தழைக்க இடையூறாக இருக்கின்ற சிக்கலை உடைக்கும் கண்ணி என்பதை அடிக்கோடிடுகிறார் இயக்குனர் ராம். ‘தஸ்தயேவ்ஸ்கி’ போன்ற பேரிலக்கியவாதிகள் தங்களது எழுத்தின் வழியாகச் செய்த அரும்பணியை செல்லுலாய்டில் பதியவைத்திருக்கும் இந்த மகா கலைஞன் இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளி, அரும்பெரும் சொத்து.

வணிகம் சார்ந்து ஒரு படைப்பை வெற்றியடையைச் செய்ய வேண்டும் என்ற தன்முனைப்பில் துளியும் பொறுத்தமில்லாத மலிவான காட்சிகளைத் திணிக்கும் இயக்குனர்களுக்கு இடையில் தரமான சினிமாவிற்கான பாதையை சீர்படுத்திடும் முனைப்பில் ஒவ்வொரு படைப்பின் ஊடாகவும் மனித சமூகம் எவ்விதப் பாகுபாடுமின்றி பகுத்தறிந்து, பண்பட்டு முன்னேறத் தேவையான கோட்பாடுகளை ஆய்வு செய்து, அதற்கென திரைக்கதை அமைத்து, அதன்பின்பே அதற்கான பாத்திரங்களை உள்ளீடு செய்வதில் ராம் காட்டுகிற சமூக அக்கறை ஒவ்வொரு புதிய படைப்பாளிக்கும் ஒரு பாடம்.

இங்கே தனிமனிதனுடைய விருப்பு, வெறுப்புகளுக்கும், தவறுகளுக்கும் அவர் மட்டுமே காரணம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு, ‘யாவரும் கேளிர்!’ என்ற சீரிய சிந்தனையை அரவணைத்து, இளகி இடம்கொடுத்து வாழ்ந்தாலே நாம் ஒவ்வொருவரும் இயற்கையினால் அசீர்வதிக்கபட்ட நல்வாழ்வை வாழ்வதாகப் பொருளாகும்.

பேரன்பு
படம் : twitter

சக மனிதர்களால், நெருங்கிய உறவுகளால் கைவிடப்படுகிற, அநியாயமாக ஏமாற்றப்படுகிற ஒரு மனிதன் அவர்களுடைய சிக்கலை, வருத்தத்தை புரிந்துகொண்டு அந்த ஏமாற்றத்தையும், அவமானத்தையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ள முடியுமென்றால் அவன் இயற்கையினால் எத்தனை அற்புதமாய் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்? அதேவேளையில் தெரிந்தே தவறிழைக்கத் தூண்டும் சூழலினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கையினால் எத்தனை வன்மமாய் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்மிக எதார்த்தமான இந்த மறைபொருளை ஒரே காட்சியில் சொல்ல முடியுமா? முதலில் சிலுவையில் அறையப்படாத இயேசுனாதராக ஒருவன் இருக்கத்தான் முடியுமா? அதுவும் சுயநலப் பிசாசு கொண்டையில் ஏறி ஆட்டி வைக்கும் இந்த நவீன உலகில்! நிச்சயம் முடியும்! யாரால்? சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிற, கைவிடப்படுகிற (SPASTIC DISORDER) மூளை வளர்ச்சிக் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை வளர்க்கப் போராடும் ஒரு தந்தையினால் முடியும். இதுதான் காட்சி அமைப்பதற்கான நீதி.

படத்தில் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும் மற்றொரு முக்கியமான பொருள், அதுவும் பாலியல் வன்முறை அதிகரிக்கும் புரிதலற்ற சமுகத்திற்கு வளர் இளம் பருவத்தின் பாலியல் தேவைகளை, உயிரியல் இயல்புகளை எவ்வாறு விவாதிப்பது, சங்கடங்கள் இல்லாமல் அதை எவ்வாறு போதிப்பது என்பதெல்லாம் பெரும் சிக்கலாக உள்ளது. அதற்கான தீர்வுக்கு நெருடலில்லாது வகை சொல்கிறது ‘பேரன்பு’.

பிறவிக் குறைபாடு நோயினால் (Achondroplasia) இறந்தே பிறந்த அழகான பெண் சிசுவைக் காப்பாற்றப் போராடிய காலங்களையும், இறுதியில் அந்தக் கோமேதகச் சுடரைக் கண்ணாடிக் குடுவையில் கையேந்திய கொடுமையான தருணத்தையும் நினைத்துப் பார்க்கையில் spastic குறைபாடு உடைய குழந்தையை வைத்துக் கொண்டு மிக எளிமையான வாழ்கையை வாழவே போராடுகிற ஒரு தகப்பனின் வலியை என்னால் முற்றிலும் உள்வாங்க முடிகிறது. என் ‘பாப்பா’ இன்று உயிருடன் இருந்திருந்தால் எதார்த்த சமூக நெருக்கடிகளுக்குள் ஆட்பட்டுத் தூண்டில் புழுவாகிய அமுதவனாகவே அலைந்து நொந்திருப்பேன் நானும்.

படம்
படம் :Twitter

தந்தைக்கும் , மகளுக்குமான பாசப் போராட்டத்தில் பல மாதக் காத்திருப்பும், முயற்சிகளும் சரி செய்யாததை எங்கிருந்தோ வந்த அந்த சின்னஞ்சிறு பறவை சரி செய்யுமே அப்போது உண்மையில் யுவனின் இசைக்குத்தான் அந்தப் பறவை பறக்கிறது. உறைந்து வீசும் கொண்டல் காற்றும், மறைந்து அசையும் சின்ன இலையும், தரை பட்டுக் குளிரும் மோகப் பனியும், உடல் விட்டுக் கிளம்பும் வெப்பக் கதிரும், மடல் விட்டுத் துளிரும் வெண் முகையும் இசை கொண்டு உணர வைக்க எவனால் முடியும் யுவனைத் தவிர? இயலாமை, ஏமாற்றம், வேட்கை, நிம்மதி என வார்த்தையால் வார்க்க முடியாத அக உணர்வுகளை இசையால் வார்த்தெடுக்க எவனால் முடியும் யுவனைத் தவிர?அப்படித்தான் மெய்ப்பொருள் அனைத்தையும் கலப்படமில்லாத சுனை நீரைப் போல காட்சிப் பேழையில் ஒளிப்படுத்தியிருக்கிறார் தேனி ஈஸ்வர். நடிகர்களின் அற்பணிப்பும் மிகைப்படுத்தலுக்கு அப்பாற்பட்டு உன்னதமானதாக உள்ளது. இப்படியொரு மகளின் மாதவிடாய்ச் சிரமங்களை நினைத்து, அவளின் பருவ வயது தேவைகளை உணர்ந்து உடைந்து அழும் காட்சிகளை இதை விட உண்மையாக வெளிப்படுத்த முடியுமா? எனத் தெரியவில்லை.

மனித உறவுகளிடையே நிகழும் உணர்வுப் பரிமாற்றங்கள் காலப் பெருவெளியின் நினைவுப் பள்ளத்தில் பேரலைகொண்டு பொங்கிப் பெருகும் காட்டாறுகளாகவும் , சில நேரம் சலனமேதுமின்றி மௌனித்துப் போகும் சிற்றோடைகளாகவும் தங்கிப் போகும். மண்ணிலிருந்து எழுந்து கடும்பாறை மீது முயங்கிப் பேராற்றலோடு வீழும் அருவியை, ஒவ்வொரு நொடிப்பொழுதும் தானாக உடைந்து, இணைந்து நிலைக்கும், தேவைக்கும் ஏற்றவாறு மாற்றம் பெரும் அணுக்களை எவ்வாறு ஓர் பொது இலக்கணத்துக்குள் வரையறுத்துக் கட்டிப் போடுவது மடத்தனமோ அதுபோலத்தான் அனைத்து உயிர்களிடத்தும் தயக்கமின்றி நாம் பரிமாறும் ‘பேரன்பும்’. புத்தரின் பகுத்தறிவு போதிக்கும் தத்துவம் இதுதானே! திருவள்ளுவனும், பேராசான் மார்க்சும், தந்தை பெரியாரும் முன்வைத்த தர்க்கம் இதுதானே! மேகம் இளகி மழையாய் பொழிவதுபோல் மனிதம் இளகி பேரன்பைப் பொழியட்டும்.

பேரன்பு
படம் : Twitter

ராமும், அவரது குழுவும் வருடக்கணக்கில் உழைத்து இப்படியொரு உன்னதமான படைப்பைத் தயாரித்து வழங்கியது விருது வாங்கி அலமாரியை அலங்கரிக்கவா?  அல்லது கோடி,கோடியாக மூட்டை கட்டவா? இரண்டுமே அல்லஎல்லையில்லா விரிவு கொண்ட வானைப் போல, சொல்லவொண்ண அழகைச் சொரியும் வனத்தைப் போல, கள்ளமில்லாச் சிரிப்பை உமிழும் மழலை போல வார்த்தைக்குள் வார்க்க முடியாத மொத்த அழகோடு தோழர் ராம் சமைத்திருக்கும் இந்த அருமருந்து வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் இப்புவியை மீட்டெடுக்க! ஒவ்வொரு மனிதரிடமும் பேரன்பின் அலாதியை, அவசியத்தை உணர்த்த!

வாழ்த்துகள் ‘பேரன்பு’ படக்குழு, வாழ்த்துகள் ராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here