‘பால் செலான்’- ஒரு மலரின் கல்லறை

1
415
views
Paul Celan
படம் : https://pbs.twimg.com/media/DsX5C0pXoAUbmvI.jpg

இந்த வரிகள்தான் எல்லோருக்கும் இருப்பதைப் போல் உறங்கவிடாமல் என்னை தினமும் தத்தளிக்கச் செய்யும் வார்த்தைகள். ‘செலானின் வார்த்தைகள் என் உறக்கத்தை தற்கொலை செய்யத் தூண்டின’ என்ற வாக்குமூலத்தைதான் என்னால் உறுதியாக முன்வைக்க முடியும். மரணத்தின் நிழலை, தனிமையை, காயத்தை தன் நினைவுகளில் சுமக்கும் ஒரு மனிதனின் வரிகள் யாரையும் உறங்கச் செய்வதில்லை.

‘பால் அன்ட்ஷல்’, பிறகு ‘அன்சல்’, பிறகு ‘செலான்’.  செலான் (Paul Celan) – 1947-இல் தனக்கென சூட்டிக் கொண்ட பெயர்.  யூத இனத்தைச் சேர்ந்தவர்.  ஜெர்மன் மொழியில் எழுதியவர்.  ரோமானியாவில், புகோவினாவில் உள்ள செர்னோவிட்ஸ் (இப்பொழுது செர்னோவிட்ஸி) என்ற இடத்தில் பிறந்தவர். புகோவினா பகுதி, ஜெர்மானிய படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, அவருடைய தாயும், தந்தையும் யூதர்களுக்கான வதை முகாமில் அடைக்கப்பட்டனர். வதை முகாமில் தந்தை TYPHUS- லினால் இறந்துபோனார். தாய் கழுத்தில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.  சித்ரவதையிலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்பிப் பிழைத்தவராக, 1947-1948இல் பாரிஸில் குடியேறினார்.  Ecole Normale Superior – இல் ஜெர்மானிய இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். 

நிலையற்ற வாழ்வைப் பற்றிய புரிதல் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு வருவது என்பது அவனை துறவியாக மாற்றி அவனுக்கு மட்டுமான விடுதலையாகிறது. ஆனால் கவிஞனாக மாறும் அந்த மனிதன்தான் ஆபத்தானவன். அவன் தன் வலி பொருந்திய வாழ்வை, அதன் விடுதலைக்கான வேட்கையை மேலும் கடத்தி தன் எழுத்துகளில் நிலைத்திருக்கச் செய்துவிடுகிறான். அப்படிப்பட்ட ஆபத்தான கவிதைகள்தான் பால் செலானின் கவிதைகள். தலைகீழாக நடக்கும் மனிதனை கற்பனை செய்து பாருங்கள். அவனால் வானத்தை அவன் காலுக்கு கீழாக பார்க்கமுடியும். “உயர்ந்து எட்ட முடியாத வானத்தை தன் காலுக்கு கீழான ஒரு பள்ளமாக”. இந்த வார்த்தைகள்தான் கலையைப் பற்றியும், கவிதைப்பற்றியும் தன்னுடைய உரையில் செலான் குறிப்பிட்டது.

நமக்கு  முன்னால் இருக்கும் அனைத்தைப் பற்றியும் நாம் முன்வைக்கும் தீர்மானங்களின் அளவுகோலோடுதான் நாம் கலையையும் அணுகுகிறோம். செலான் போன்ற கவிஞன் அளவுகோலை தொலைத்துவிட்ட ஒரு குழந்தையின் மனநிலையோடு கலை என்பதை அணுகுவதில்தான் அவனுக்கான இடத்தை நிரப்பி வைத்திருக்கிறான்.

“இனியும் இல்லை

என்னை இந்தக் காலத்தினுள்

இறக்கிய இந்த அழுத்தம்

சில நேரங்களில் உன்னுடன். அது

வேறொன்று.

வெறுமையைத் தடுத்து

உன்னுடன் விடைபெறும்

அந்த அழுத்தம்.

உன்னைப் போல, பெயர் இல்லை.

ஒன்றாகவே இருக்கலாம்.

ஒருநாள் அதன் பெயரில் நீ என்னை அழைக்கலாம்.

ஒருநாள்.”

பிரஞ்சு புரட்சியின் மிக முக்கிய குறியீடான கில்லட்டினைப் பற்றி அதனை ஒரு கலையின் வடிவமாக பார்க்கும் ஒரு குழந்தைக் கண்களுடன் செலான் தன்னுடைய விருது ஏற்பு உரையில் கூறுகிறார். ”மேடையில் நிரம்பியிருக்கும் அத்தனை வார்த்தைகளுக்கும் பிறகு (கில்லட்டின் பற்றி நாம் நினைத்துப் பார்ப்போம்) …என்ன ஒரு வார்த்தை. “அது தானியங்களுக்கு எதிரான ஒரு வார்த்தை, கயிறுகளை அறுக்கும் ஒன்று, ஆட்சியாளர்களுக்கும்  பார்வையாளர்களுக்கும் முன்னால் தன் தலையை தாழ்த்தி வணங்கி நிற்காத ஒன்று, அது ஒரு விடுதலையின் செயல்பாடு, அது ஒரு நகர்வு.”

இப்படிப்பட்ட ஒரு பார்வை கொண்ட மனிதனின் வாழ்வு என்பது கவிதை இயற்றுவதற்கான இனிய மனநிலைக்கு வாய்ப்பாக அமைந்த ஒன்றல்ல. தன் தாய் தந்தை இருவரையும் நாஜிகளின் வதை முகாமில் இழந்து, தானும் வதைமுகாமில் சிக்கி அங்கிருந்து தப்பி தன் இழப்பின் வலியோடு தன் காலத்தை கடத்திய ஒரு நபரின் குரலாகவே அவரது கவிதைகள் ஒலிக்கின்றன.

Paul Celan
படம் : world literature today

கிடைத்த சுவரில் தலையை மோதிக்கொள்ள வைக்கும் அளவிற்கு கடினமான பரப்புடையவையாக கைவிடப்பட்ட கறுத்துப்போன ஒரு வாழ்க்கையை பாறைகளாக, கற்களாகத் தாளில் கிடத்தும், இறுக்கப்பட்டு அடக்கப்பட்டிருக்கும், தீவிரமான அலறல்களாக விரிகின்றன செலானின் கவிதைகள்.

சாவைப்பற்றி எழுதும் செலான் ரோசா லக்சம்பர்க்கின் காயங்களை நட்சத்திரங்களுக்கு பதிலாக அறையும் உக்கிரமான சிவப்புச் சாம்பலாக, ஒரு ஆவேசமான ஒளியில் நின்று கொண்டிருக்கும் பெண்ணின் கண்களில் பிரதிபலிக்கும் மனதின் கரும் பொய்களாகக் காண்கிறார்.

“ஒரு கவிஞன் தான் கவிதை எழுதுவதை கைவிடுவதற்கு இணையாக எந்த ஒன்றும் இல்லை, அது அவன் யூதனாக இருந்தும் ஜெர்மன் மொழியிலேயே எழுதிக்கொண்டிருந்தாலும் சரி” இந்த வரிகள் செலானின் வாழ்க்கை வரலாறை எழுதிய ஜான் ஃபெர்ல்ஸ்டினர் செலானைப் பற்றி அவருக்கு கவிதையோடு இருந்த உறவைப்பற்றி கூறும் வரிகள். செலானின் அத்தனை துயரங்களின் மொத்த அடையாளமாக அவருடனேயே இருப்பது அவர் எழுதும்  அந்த  ஜெர்மானிய மொழிதான்.

”வார்தையைச் சுற்றி எந்தப் பனிப்பந்து உருவாகும் என்பது உன்னை மறுதலிக்கும் அந்தக் காற்றைப் பொறுத்தது.”

நாஜிக்களின் கொடூரங்களின் நினைவுகளை தன் மனதோடு சுமந்துகொண்டு அலைந்த அந்த மனிதன் மனிதத்தைப் பற்றி பேசுவதற்காக மறுதலிக்கப்பட்ட அதன் குரலைத் தேடும் செயலாகவே தன் கவிதைகளைக் காண்கிறான். மனிதத்தின் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு பிறவியாக மனிதனுக்கு அப்பாலும் பாட இன்னும் இருக்கின்றன. பாடல்கள் என்பதே செலானின் குரலாக இருக்கிறது. அமைதியைப் போல உறுதியான ஒன்றை மரணம் என்று பெயரிட்டு அழைப்பதை நாம் இன்னமும் நிறுத்தவில்லை.

வாழிடம் இழந்த ஒரு பறவையின் காதலைப் பாடும் கவிதைகளாக செலானின் காதல் கவிதைகள் உள்ளன. செலான் இன்கே போர்ஹ் பாஹ்மானுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ”என்னுடைய கவிதைகளைப் பற்றி உனக்குத் தெரியும், நீ அவற்றை படி, அதை நான் உணர்வேன்”

ஜெர்மன் யூதர்களுக்கு செய்த பாவங்களின் சின்னமாக நிற்கும் செலானின் வரிகள் ஜெர்மானிய இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஒன்று. அவருடைய கவிதையிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாகவே அவரது புற உலக வாழ்க்கையும் அமைந்தது. அவரது கவிதையில் விரியும் மனிதர்களும், காட்சிகளும் அந்த வரிகளுக்கு அப்பால் பிரித்து பார்க்க இயலாத பிணைப்போடே உள்ளன. இருளின் நிலத்திலிருந்து தப்பி இருளோடு தொலைந்துபோன தன் வாழ்வைப் பற்றிய நினைவுகளின் வாதையாக நீளும் குரல் செலானின் வரிகள்.

அவரது வதைமுகாம் அனுபவம் கவிதைகளில் கொடூர உணர்வுகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. முன்கூட்டிச் சொல்ல முடியாதவைகளுக்கும், எதிர்பார்க்க முடியாதவைகளுக்கும் கவிதை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று செலான் நம்பினார். போரும், பாசிசமும் இருக்கின்ற வரையில் செலானின் குரல் வன்முறைக்கு எதிரான ஒரு கலைஞனின் வலி நிறைந்த பதிவாக இருக்கிறது.

1970 ல் செலான் தற்கொலை செய்து கொண்டார். செலானின் கவிதைகளை தமிழில் அஷ்டவக்கிரன் மொழிபெயர்த்திருக்கிறார். அவரது ‘அந்தகனின் சொல்’ புத்தகத்தில் வெளிவந்திருக்கிறது, பிரம்மராஜன் மொழிபெயர்த்து ‘உயிர்மை’ இதழில் வெளியானது. கண்ணன் எம்., பிரகாஷ் வெ, மொழிபெயர்த்து ‘கல்குதிரை’ இதழிலிலும்  வெளியாகியிருக்கிறது. இன்று நவம்பர் 23 பூவுலகில் மனித இனம் விருப்பு, வெறுப்புகள் விளைவாய்த் தூக்கிச் சுமந்த வலிகளையும், அதன் வரலாறையும் கொட்டித்த தீர்க்க நித்தமும் கவிதை வேட்டையாடிய அந்த அற்புதக் கவிஞன் பால் செலானின் பிறநத தினம்.

துணைநூற் பட்டியல்:

  1. John Felstiner, Poet Survivor Jew, Yale University Press, 2001.
  2. Paul Celan, Selected Poems, Penguin Books, London, 1996.
  3. Paul Celan, Correspondence, Seagull Books, 2010.
  4. Paul Celan, Collected Prose, Translated by Rosemarie Waldrop, Sheep Meadow Press, 1986.
  5. Corona, Selected Poems of Paul Celan, Station Hill Barry town, 2013.
  6. அஷ்டவக்கிரன், அந்தகனின் சொல், பார்வை பதிவுகள், கோவை, 2011.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here