படத்தின் தலைப்பைக் கண்டதும் இது குறிஞ்சி நிலத்தின் பண்புகளையோ, அங்கு வாழும் மக்களையோ பற்றிய படம் என்றுதான் தோன்றும். ஆனால் அதற்கும் மேலாக இது வஞ்சிக்கப்படும் நிலமற்ற தொழிலாளர்களுக்கான நீதியை, அவர்களுக்கான உரிமையை பதிவு செய்திருக்கிறது.

உடல் உழைப்பைத் தவிர எதுவும் சொந்தமில்லாத மக்களாகவே அவர்களை வைத்துக் கொண்டதோடு எத்தனை எளிமையாக இடப்பெயர்வு குறித்த வலிகளையும் அவர்கள் கடந்து செல்ல வகை செய்கிறது இந்த அதிகார அமைப்பு. பல தலைமுறை கடந்து தாங்கள் வாழ்ந்த ஊரை, பேசிய மொழியை, பழகிய உறவை என தனிமனிதனுக்குரிய மொத்த அடையாளத்தையும் அந்த மக்களுக்கு என்றுமே கிடைக்காத நிலம் என்னும் உரிமை வழியாக அதிகாரமும், முதலாளியமும் உண்டாக்கித் தருகிற அமைப்பு எப்படி அழிக்கிறது என்பதை பல வருடப் போராட்டத்திலும் தோல்வியுற்றுப் போகும் ரங்கசாமியின் வழி அறியலாம்.

இன்று அமைப்பு சாரா கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, உள்நாட்டு உற்பத்தியில் தொழில்நுட்ப வல்லுனர்களாகப் பணியாற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் உட்பட அனைத்துவகைத் தொழிலாளர்களுக்கும் இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பில் இதேநிலைதான்.

உழைப்பு பண்டமான நிலப்பிரபுத்துவ காலந்தொட்டு பல வகையிலும் சுரண்டலை அதிகரித்து உபரி உற்பத்தியை மூலதனமாக நிலை நிறுத்திய முதலாளிகளின் சுயநலமும், பெரும்பசியும் ரங்கசாமி போன்ற கோடிக்கணக்கான கூலித் தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதை செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கும் ஆகச் சிறந்த படைப்பு ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனலாம். இயக்குனர் லெனின் பாரதிக்கும்,  தயாரிப்பாளராகக் களம் இறங்கி இப்படியொரு மக்கள் படைப்பை வழங்கிய மக்கள் கலைஞன் விஜய் சேதுபதிக்கும் வாழ்த்துகள்.

உற்பத்திப் பொருளின் உண்மையான மதிப்பிற்கு காரணமாக உள்ள உழைப்பை மறக்கச் செய்து பயன்மதிப்பை மட்டும் உணரச் செய்து பரிமாற்ற மதிப்பை மிகைப்படுத்திடும் மூலதனச் சந்தை தலைமுறை தோறும் உழைத்து, உழைத்து உற்பத்தியை உருவாக்கும் தொழிலாளர் வகுப்பினரை எப்படியெல்லாம் சுரண்டிப் பிழைக்கவும், ஏமாற்றவும் செய்கிறது என்பதை திரைக்கதை ஆக்கியிருக்கிறார் லெனின் பாரதி.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுமைக் கூலிகள். pic:  3.bp

அனைவருக்குமான நிலவுடைமை என்பது அடிப்படை உரிமை. மறுக்கப்படும் அத்தகைய உரிமை சமூக மாற்றத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. இங்கே நிலம் என்பது வெறும் மண் சார்ந்தது அல்ல. அதுதான் நிலை மூலதனம். உழைப்பை மையமாகக் கொண்ட நிலையற்ற மூலதனத்தின் மதிப்பைக் குறைத்து நிலையான மூலதனத்தை மிகைப்படுத்துவதால் மட்டுமே இங்கே முதலாளிகளிடம் உபரி உற்பத்தி சாத்தியமானது. நிலையான மூலதனத்தை மிகைப்படுத்துவதன் மூலமே தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆரம்பத்தில் நிலமற்ற இந்தப் பெருங்கூட்டம் தீவிரமான வழிமுறைகளாலும், கடுமையான சட்டங்களாலும் ‘தொழிலாளர் ஒழுக்கம்’ என்ற கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டார்கள். இயல்பான உற்பத்தி முறையாக முதலாளித்துவ உற்பத்தி நிலையாக வளர்ந்த பிறகு அது குறைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது தொழிலாளர்கள் மீது முதலாளிகள் செலுத்தும் ஆதிக்கத்திற்கான அடையாளக் குறியை கட்டாயமான பொருளாதாரத் தொடர்புகள் ஏற்படுத்துகிறது. அதேபோல இப்போது நேரடியான கூடுதல் பொருளாதார வலிமையும் ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வேலையின்மை, பசி, வறுமை மற்றும் தேவைகள் ஆகியவற்றோடு உற்பத்தியின் மீது இயல்பான அக்கறையும் கொண்டிருக்குமாறு தொழிலாளர்களின் மனநிலையே மாற்றியமைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் உற்பத்திக்கான எந்த வழியும் இல்லாதவர்களாக இருப்பதால் தங்களது உழைப்பை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை உருவாகிறது.

அப்படித்தான் தமிழக , கேரள எல்லை மலைப் பகுதிகளில் வாழும் கூலித் தொழிலாளர்கள் ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டத்தில் பண்ணை அடிமைகளாகத் தலைமுறை தாண்டி வருந்தி உழைக்கிறார்கள். அரசும், முதலாளியமும் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி விட்டிருப்பதை இந்தப் படத்தைக் காண்பவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

பரிவர்த்தனை மதிப்பின் பலனை சிறிதும் அனுபவிக்காத கூலித் தொழிலாளர்கள் கையில் நிலை மூலதனம் சேராது கவனமாகப் பார்த்துக் கொள்ளப்படுவதன் பயனே முதலில் சுமைக் கூலியாகவும், இறுதியில் காற்றாலை ஒன்றுக்கு காவல்காரனாகவும் பணியமர்த்தப்படும் விவசாயியான ரங்கசாமி.

நாயகன் ரங்கசாமி  pic :justwatch

பண்ணைத் தொழிலாளர்களைக் கைவிட்ட கேரள மார்க்சிஸ்டுகளைச் சாடியிருப்பது உண்மைதான் என்றாலும் கம்யூனிஸ்டுகளின் முகமாக வரும் சகாவு அந்த வலியைப் போக்குகிறார். சகாவின் அரிவாள் பாய்வது சங்கங்களைத் தொழிலாக மாற்றிய தொழிற்சங்கவாதிகளை எதிர்த்து என்பது உண்மையில் பாராட்டிற்குரியது. அரிவாளை இறக்கும்போது “இதானே நீ படிச்ச கமியூனிசம்?” என்ற சகாவின் குரல் மனசாட்சியின்றி தொழிற் சங்கங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்குமான சாட்டையடி!

முன்னணி நடிகர்களைக் களம் இறக்காமல் அந்தந்த கிராம மக்களையே பாத்திரங்களாக கொண்டு வந்திருப்பது திரைக்கதைக்கு கூடுதல் சிறப்பு. தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு நெடுகிலும் பசுமையான ஒரு மலைப் பயணத்திற்கான அனுபவத்தைத் தருகிறது.

Pic: Studio Flicks

கதையின் எதார்த்தத்தையும், சாமானியனின் ஏமாற்றத்தையும் தாங்கி நகரும் பின்னணி இசைதான் இந்தத் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது. ஒரு மூட்டை ஏலைக்காயில் ரங்கசாமி குடும்பத்தின் இரண்டு தலைமுறைக் கனவு மலையிலிருந்து தவறி உருண்டோடும்போது சிந்திச் சிதறி நாசமாகும் பெருங்கனவின் இழப்பை இளையராஜா என்ற மகா கலைஞன் அன்றி வேறொருவராலும் அப்படியே அதன் உள்ளார்ந்த வலியை உணர வைக்க முடியாது.

மற்றபடி சாத்தன் மேடு, கிறுக்குக் கிழவி, கங்காணி, சுமை கூலியாக வரும் பெரியாளு, மெட்டு தேநீர் கடைக்காரர் என கதை நெடுகிலும் நிலத்தின் பண்புகளை, வாழ்வியலை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் சிறிய பாத்திரங்கள் அனைத்துமே அப்படியொரு பொருத்தம்.

இறுதியாக உலகெங்கிலும் உள்ள நிலமற்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம் என்று படைக்கப்பட்டிருப்பது நிறைவு!

Featured Image : samayam 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here