படம்: thefearlessindian
பகிரவும்

1970 ஆம் ஆண்டு டெக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. அமைதிக்கான அணு ஆராய்ச்சி என அதற்கு வேடிக்கையாக பெயரிட்டனர். அமெரிக்க, ரஷ்யா வரிசையில் உலகில் ஆறாவது அணு ஆயுத வல்லமை பொருந்திய நாடாக இந்தியா அன்று உருவெடுத்தது மட்டுமல்லாமல் வல்லரசு நாடுகளுக்கு இணையான சக்தியாகத் தன்னை அது நிரூபித்தது.

ராணுவப் பயன்பாடாக இல்லாமல் ஆக்க ஆற்றலாகவும் இந்தியாவில் எண்ணற்ற அணு சக்தி நிலையங்கள் முக்கிய மின்னாதாரக் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது பல்துறைகளில் மேம்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவின் இன்றைய அணு ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சி ஆச்சர்யகரமானது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தாக்கி அழிக்கும் ஏவுகணை துவங்கி இன்று செவ்வாய் கிரகப் பயணம் என வல்லரசுப் பயணத்தின் அஸ்திவாரமாக இருந்தவர்தான் விஞ்ஞானி ஹோமி ஜகாங்கீர் பாபா.

படம்: thehindu

இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை என போற்றிப் புகழப்படும் இவர் மும்பையில் ஒரு செல்வாக்கான குடுபத்தில் பிறந்தவர். டாடா குழுமைத்தை சேர்ந்த தோராப்ஜி டாடா இவரது உறவினர். ஹோமி பொறியியல் பயின்று டாடா குழுமத்தின் முக்கியத் தலைமை வகிக்க வேண்டும் என்பதே தந்தையின் கனவாக இருந்தது. அவர்கள் ஆசைக்காக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்  சேர்ந்து இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்றார்.

படிக்கும் காலத்தில் தனக்கு இயற்பியல் துறை மீதிருந்த அதீத ஆர்வத்தைப் பெற்றோரிடம் தெரிவித்தார். “நீ பொறியியல் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறு!” என விதிமுறை அளிக்கப்பட்டது. சொன்னது போலவே அவர் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். மகனின் விருப்பத்திற்கு மதிப்பளித்த அவர் தந்தையும் அவரை அங்கேயே பௌத்திக அறிவியல் சார்ந்த கணிதம் படிக்க அனுமதித்தார் .

தனது பெற்றோர் மற்றும் சகோதரர் ஜாம்ஷெட் டாட்டாவுடன் பாபா. .படம்: indianexpress

1930களில் அவருக்கு கணிதவியலாளர் பால் டிராக்கிடம் (Paul Direc)  பயிலும் வாய்ப்பு கிட்டியது. நோபல் பரிசு பெற்ற பால் டிராக்கின் அறிமுகம் ஹோமிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அப்போது கேவின்டேஷ் அறிவியல் கூடம்தான்(Cavendish Laboratory)  வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளுக்கான மையமாக விளங்கியது.

1934ஆம் ஆண்டு பாபா தன் முதல் ஆராய்ச்சி அறிக்கையான காமா கதிரியக்க உட்கவரலில் எலக்ட்ரான் பொழிவு(The Absorption of Cosmic radiation) என்ற கட்டுரையை வெளியிட்டு தனது இயற்பியல் பட்டத்தை வென்றார். மேலும் அதற்காக ஐசக் நியூட்டன் படிப்புதவியும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் மேலும் மூன்று ஆண்டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை தொடரலாம் என்ற வாய்ப்பும் கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) அணுவின் மையமான நியுட்ரானைக் கண்டிருந்தார். அதன் தாக்கத்தால் அணு ஆராய்ச்சி பற்றியான ஆய்வுகள் உயரிய விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

படம்: indiatoday

எனவே பௌத்திக அறிவிலை(theoretical physics) விட முக்கியத்துவம் வாய்ந்த அணுக்கரு இயற்பியலில் (nuclear physics) நாட்டம் செலுத்தத் துவங்கினார் ஹோமி. ஹோமிக்கு இக்காலகட்டத்தில்தான் நீல்ஸ் போர்(Neils Bohr), பெர்மி மற்றும் ஐன்ஸ்டீன் போன்றோரின் அறிமுகம் கிட்டியது. அவர்களுடன் இணைந்து விவாதிப்பது ஆராய்ச்சிகள் மேற்கொள்வது எனத் தன் அறிவியல் தாகத்தை வேறு நிலைக்குக் கொண்டு சென்றார். 1934ல் ராயல் சொசைட்டிக்கு எலக்ட்ரான் பாசிட்ரான் சிதறல் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். தற்போது அவரை கௌரவப்படுத்தும் விதமாக இந்தத்துறை பாபா சிதறல்(Bhabha scattering) என்றழைப்படுகிறது.

1932 முதல் 1954 வரை 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார். 1936 வால்டர் ஹெயில்டர்(Walter Heitler) உடன் இணைந்து அண்டவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் புவியின் வளிமண்டலத்தைத் தொடர்பு கொள்வது பற்றியும் வெவ்வேறு இயக்கத்தில் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை பற்றியும் ஆய்வறிக்கை சமர்பித்தார். இயற்பியலில் முனைவர் பட்டத்துடன் Senior Studentship of the 1851 exhibition வைத்திருந்தவர் 1939 வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவியலாளர்களில் ஒருவராக இருந்தார். ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவம் (theory of relativity) நிறுவும் அணுத்துகள்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார். குவாண்டம் மின்னியல்(Quantum Electrodynamics) பற்றியும் பல படைப்புகளைத் தந்துள்ளார்.

படம்: rlalitha.blogspot

ஐந்து முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ஹோமி, 1939ல் இரண்டாம் உலகப்போரின் உக்கிரத்தால் இந்தியா திரும்ப வேண்டிய நிலைவந்தது. தேசம்(Swadesh) படத்தில் வரும் ஷாருக்கான் போல அவரது இந்திய வருகை இந்திய அறிவியலில் ஒரு மாபெரும் புரட்சியை தோற்றுவிக்கும் அடித்தளமாக அமைந்தது.

1940ஆம் ஆண்டு பெங்களுரில் இருக்கும் இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில்(Indian Research Institute) இணைந்து புகழ்பெற்ற சர்.சி.வி ராமன் தலைமையில் பணியாற்றினார். யாரைப் பற்றியும் புகழும் பழக்கமில்லா ராமன் ஹோமியை ‘இந்தியாவின் டாவின்சி‘ என வர்ணித்தார். அதற்குக் காரணம் வழக்கமான விஞ்ஞானிகள் போலல்லாது இவர் கலைத்துறையின் மீது பேராவல் கொண்டிருந்தார். நல்ல ஒவியராகவும், இசை ரசிகராகவும், கட்டிடக் கலை நிபுணராகவும் இருந்தார். தன்னைப் பேட்டி எடுக்க வரும் நிருபர்கள் பலரை இவர் ஓவியமாக வரைந்து வைத்திருந்தார். இறந்த பின் கூட இவரது பல சொத்துகள் கலைத்துறைக்கு அளிக்கப்பட்டன.

1944 சுயமாக அணுஆயுத உற்பத்திக்கான ஆய்வுக்காக அண்டவியில் கதிர் ஆராய்ச்சி நிறுவனத்தைத் துவங்கினார். இந்தியாவில் திறமையானவர்கள் இருந்தும் ஆய்வுகள் செய்யத் தேவையான கூடங்களோ, இயந்திரங்களோ இல்லை என்பதை உணர்ந்த பாபா நம் நாட்டிக்கு ஆய்வு உபகரணங்கள் தேவை என்பதை டாடாவிடம் தெரிவித்தார். யோசனையை ஏற்றுக்கொண்ட பின் இந்தியாவின் முதல் அறிவியல் கழகமாக டாடா அணு ஆராய்ச்சிக் கழகத்தை 1945ல் துவங்கி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்(Tata Institute of Fundamental Research). அதுவும் இந்தியா பிரிட்டிஷ் கட்டுபாட்டில் இருந்த காலத்திலேயே.

தோட்டக் கலையிலும் ஆர்வம் கொண்ட இவர் அமீபா வடிவில் பல்வேறு மரங்களை இடம்மாற்றி நட்டார். அதன் பின்புதான் கட்டிட வேலையையே துவங்கினர். இன்று மரங்களை அழித்துதான் நம் அரசுப் பாதையை விரிவு செய்கிறது, மெட்ரோ ரயில் விடுகிறது.

அன்றைய பிரதமர் நேருவுடன் பாபா .
படம்: indiatoday

எந்தவொரு செயலிலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட இவரது பண்பு பிரதமர் நேருவுக்கு பிடித்திருந்தது. நேருவிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஹோமி நேருவை அண்ணா என அழைக்கும் சிலரில் ஒருவர். சுதந்திரமடைந்த இந்தியா பல்வேறு துறைகளில் நாட்டம் செலுத்தியிருந்தபோது அணு ஆராய்ச்சியின் முக்கியதுவத்தை நேரு மற்றும் அம்பேத்திகரிடம் விளக்கி அதற்கான ஒப்புதலைப் பெற்றார்.

ஜப்பான் மீதான குண்டுவீச்சுக்குப் பின்னர் உலக நாடுகள் பலவும் அணு ஆய்வில் ஆரம்ப கட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது 1948 ல் இந்திய அணு ஆற்றல் நிலையம் அமைக்கப்பட்டது அசர வைக்கும் முன்னேற்றமாக கருதப்பட்டது. பின்னர் இந்திரா காந்தியால் அது பாபா அணு ஆராய்ச்சி மையம் எனப் (BARC) பெயரிடப்பட்டது.

பாபா அணு ஆராய்ச்சி மையம் . படம்: thewire

இந்திய அணு ஆராய்ச்சியின் முதல் தலைவராக இருந்த பாபா ஜெனிவாவில் நடைபெற்ற அணுவியல் பாதுகாப்பு தொடர்பான ஐநா சபையின் முதல் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். அணு பிளப்பை எவ்வாறு ஆக்க சக்தியாக பயன்படுத்தலாம் என விவரித்தார். (President of the United Nations Conference on the Peaceful Uses of Atomic Energy in Geneva, Switzerland in 1955)

குறைந்து கொண்டே போகும் சுரங்க நிலக்கரி, ஹைட்ரோ கார்பன் மூலம் 100 கோடி மக்களை நெருங்கப் போகும் இந்தியாவின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தவர் ‘யுரேனியம்’ மற்றும் ‘தோரியம்’ பயன்படுத்தி அணு சக்தியை அதிகரிக்க ஆலோசனை தந்தார்.

உலகமே யுரேனியத்தைப் பயன்படுத்தியபோது ‘தோரியம்’ என்ற மாற்று வழிமுறைத் திட்டத்தை உலக அறிவியலாளர்கள் வியந்து பாராட்டினார்கள். ஏனெனில் அணு பிளவுக்குத் தேவையான முக்கிய தனிமம் ‘யுரேனியம்’, ஆனால் அது இந்திய மண்ணில் குறைவாகக் கிடைக்கிறது.

“The total reserves of thorium in India amount to over 500,000 tons in the readily extractable form, while the known reserves of uranium are less than a tenth of this.”

இதனால் வருங்காலத்தில் மேலை நாடுகளிடம் கையேந்தும் நிலை வரும். ஆனால் தோரியத்தின் கதை வேறு. ஒருவேளை ‘யுரேனியம்’ முற்றும் தீர்ந்துவிட்டு ‘தோரியம்’ மட்டுமே பயன்படுத்த முடியும் எனும் நிலை வந்தால் கூட உலகின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு டன் கணக்கில் இந்தியாவிடம் தோரியம் உள்ளது.

கனடாவில் இருந்த தனது W.B. லூயிஸ் நட்பு வட்டதின் மூலம் இந்தியாவில் கனடாவின் அணுக்கழகமான CIRUS நிறுவப்பட்டது. இதன் வழியாக இந்தியாவின் முதல் அணுவுலை 1956 ல் மும்பையில் நிறுவப்பட்டது. ராஜஸ்தான் கோட்டா, சென்னைக் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கான்டு அணுசக்தி மின்சார நிலையங்கள் என தற்போது இந்தியாவில் இருக்கும் 22 அணு ஆற்றல் உற்பத்தி மையங்கள் உருவாக இவரே ஆதாரம். பாபாவிற்கு 1954 ம் ஆண்டு பத்ம பூஷண் விருதளித்துப் பெருமைப்படுத்தியது இந்தியா.

1974 அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு அணு ஆயுதத் தயாரிப்பிற்கான உபகரணங்களை அளிப்பதில்லை. அதுமுதல் இந்தியாவே அதற்கான தேவையைத் தயாரித்துக் கொள்கிறது. இன்று அணு ஆயுத வளர்ச்சியில் தலைசிறந்த தேசங்களில் இந்தியா தலையாயது. LIGO உள்ளிட பல ஆராய்ச்சிகளுக்கு உலக நாடுகள் இந்தியாவை நாட வேண்டிய நிலையுள்ளது.

படம்: thebetterindia

ஹோமியின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உட்பட அவர் இந்தியாவிற்கு செய்த தொண்டுகளுக்காக உலக அறிவியலாளர்கள் எல்லோருமே அவரின்பால் கடமைப்பட்டுள்ளனர். நேரு, சாஸ்திரி என இரு பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக(Scientific Advisory) இவர் பணியாற்றினார். விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளிக் குழு தொடங்கியதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். கடைசிவரை அறிவியலைத் தவிர வேறொருவரை மணக்கவில்லை.

1962 களில் இந்தோ-சைனா போரின் போது அணுகுண்டு ஆய்வு தீவிரமடைந்தது. 1964 ல் சீனா அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்தியபோது அரசு அனுமதித்தால் இந்தியாவும் அதே போல சோதனையை நிகழ்த்திக் காட்ட முடியும் எனச் சவால் விட்டார் ஹோமி.

ஆனால் அவர் கனவு நிறைவேறும் முன்பே 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் நடந்த சர்வதேச அணுசக்திக் கழக முகமைக்குச்(IAEA) செல்லும் வழியில் ஆல்பஸ் மலைத்தொடரில் வீழ்ந்து அவர் விமானம் விபத்துக்குள்ளானது.

அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ(CIA) வின் அதிகாரி ராபர்ட் கிரைவ்ளேவ்(Robert Crowley) உடனான சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்யப்பட்ட ரகசிய உரையாடலைப்(Conversations with the Crow) படிக்கும்போது வியத்தகு உண்மைகள் வெளிவந்தன. அவரது வாக்குமூலத்தின் படி இந்திய விஞ்ஞானத்தின் அடித்தளமாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாபா ஆகியோர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர்(ஹோமி பாபாவின் விமான விபத்திற்கு 14 நாட்கள் முன்னமே சாஸ்திரி விமானம் விபத்துக்குள்ளானது). அணு உற்பத்தியில் புரட்சிகர மாற்றத்தை உண்டாக்கிய இந்தியா அமெரிக்காவின் கண்களுக்கு அச்சுறுத்தலாகத் தென்பட்டது.

சக்திவாய்ந்த அணுகுண்டுத் தயாரிப்பின் விளிம்பிற்கு இந்தியா சென்றுவிட்டதை உணர்ந்த அமெரிக்கா பாரத அணுசக்தி வளர்ச்சியை குலைக்க அதன் மூளையாக இருந்த பாபாவை அழிக்க நினைத்தது. ஆனால் லால் பகதூர் சாஸ்திரி? நேருவைப் போலல்லாது தாக்கும் குணம் கொண்ட லால்தான் அணுபிளவு சோதனைக்கு ஒப்புதல் அளித்தவர்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் பாபா .
படம்: beaninspire

அந்தக் காலகடத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யாவுடனான பனிப்போர் மிகத் தீவிரமாக இருந்தது. சீனாவைப் போல போர் வந்தால் பாகிஸ்தானை ஒரே குண்டில் இந்தியா அழிக்கும் எனவும் அப்படி நேர்ந்தால் தனது எதிரியான ரஷ்யாவுடன் கூட்டணி சேர்ந்து தன்னையும் தாக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை எண்ணியது.

ஹோமி பாபா இறந்த பின்பும் இந்தியா புவிக்கடியில் அணுகுண்டுச் சோதனை நடத்திக் காட்டியது. எனினும் நாம் ‘தோரியம்’ பயன்பாட்டிற்குப் பதிலாக ‘யுரேனியம்’ உபயோகப்படுத்தும் நிலைக்கு மீண்டுவிட்டோம். சில வருடங்களுக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாயும் மர்மான முறையில் இறந்தார்.

ஹோமி ஜகாங்கீர் பாபாவின் மர்மமான மரணம் பற்றிய பல்வேறு சர்ச்சைகளுக்கு 31 வருடங்கள் ஆகியும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அமெரிக்க உளவுத்துறை பற்றி இதுவரை எந்த சாட்சியங்களும் இல்லை. இந்திய அரசு அதனை விசாரிக்கவும் முனையவில்லை.

Featured image credit: thefearlessindian

Facebook Comments
பகிரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here