படம்: Vidiyal Publication

26, அலிபூர் சாலை, டெல்லி என்ற இடத்தில் இதே டிசம்பர் 6  ஆம் தேதி 1956ஆம் ஆண்டு ஒரு மாமனிதரின் இறப்புச் செய்தி சமூக விடுதலைக்கான போராளிகள் நடுவில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியது. அவர்தான் ‘பாரத ரத்னா’ புரட்சியாளர் அண்ணல். அம்பேத்கர்.

‘மகர்’ என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஏப்ரல்  14, 1891 இல் பிறந்த ‘பீமாராவ் இராம்ஜி’ பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் பரோடா மன்னரின் உதவியோடு கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாலும், தனது சொந்த முயற்சியில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் என அனைத்தையும் படித்தார். பொருளாதாரத்தில் முதுகலை முடித்த அவர் ‘இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் ‘இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர்ந்த நூலாக இன்றும் உள்ளது.

படம்: forwardpress.in

இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். 1947, ஆகஸ்டு 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்குத் தலைவரானார். அம்பேத்கரால்     உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு   நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது. சாதிப் பாகுபாடுகளற்று , அனைத்து மக்களுக்கான முழு விடுதலையை வழங்கும்படி அமைந்த அரசியலமைப்பையே அவர் உருவாக்கித் தந்தார்.

ஆனாலும் அவர் வேண்டிய விடுதலைச் சமூகம் இன்றளவும் தனது விடுதலைக்கு ஏங்கித் தவிப்பதற்கு தற்கொலைக்குத் தூண்டப்பட்ட உயர்கல்வி மாணவரான ரோஹித் வெமுலா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கேரளா சட்டக் கல்லூரி மாணவி, ஆதிக்கச் சாதியினரின் தூய்மை பாழாகிறதென்று சொல்லிக் கொடூரமாகக் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட அரியலூர் நந்தினி, கலப்புத் திருமணம் காரணமாக கொலை செய்யப்பட்ட தர்மபுரி இளவரசன், உடுமலை சங்கர் , சென்ற வருடம் திருநெல்வேலி களக்காடு பகுதியில் கழிவறை தூய்மை செய்ய வலியுறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் என சாமானியர்கள் துவங்கி இந்திய ஆட்சிப் பணியாளராக இருந்து சாதியப் பாகுபாட்டால் நெருக்கடிகுள்ளாகிப்  பணியிலிருந்து விலகிய சிவகாமி IAS  வரை உதாரணங்கள் ஏராளம். இந்நிலையில் அவருடைய நினைவு நாளான இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, பல்வேறு துன்பங்களை அனுபவித்து, கல்வி ஒன்றே மாற்றத்திற்கான ஒரே வழி என்பதைக் கண்டுணர்ந்து உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கரின் வாழ்வையும், போராட்டக் களத்தையும், கோட்பாடுகளையும் சற்று வலுவாகப் பதிவு செய்வது காலத்தின் தேவையாக உள்ளது.

படம்: velivada.com

அடிமைத்தனமான,  இழிவான வேலைகளைச் செய்யும் மக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்தது ஆதிக்கச் சமூகம். ஜப்பானிலுள்ள புராகுமின்கள், அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவிலுள்ள கறுப்பின மக்கள், ருவாண்டாவைச் சேர்ந்த ஹுது மற்றும் துவா இனத்தவர்கள் என்று உலகெங்கிலும் பல்வேறு வகையான மக்கள் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டு வந்தாலும் இந்து மதத்தின் சாதிய அடிப்படையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவது இந்தியாவில் மட்டும்தான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூக அமைப்பு முறையைக் கொண்டு இந்து மதத்தின் புனித நூல்களுள் ஒன்றான ரிக் வேதம் பிராமணர்கள்,  சத்திரியர்கள்,  வைஷ்யர்கள்,  சூத்திரர்கள் என்று நான்கு வர்ணங்களாக முறையே மக்களை வகைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மனு தர்மமும் அதை வளர்த்தெடுத்தது. ஒவ்வொரு வர்ணங்களுக்குள்ளும் நூற்றுக்கணக்கான சாதிகள் இருக்கிறது. இந்த நான்கு வர்ண வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு சூத்திரர்களுக்கும் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்தான் தீண்டத்தகாத இனத்தவர்கள். இவர்கள் சூத்திர இன ஆண்களுக்கும், பிராமணப் பெண்களுக்கும் களங்கப்பட்ட உறவின் மூலம் பிறந்தவர்களாக ஆரம்பகால பௌத்த இலக்கியங்கள் கூறுகிறது. வர்ண வேறுபாடுகளுக்கு இணையான புனித நூல்களுக்கு அப்பாற்பட்டு ஏற்படுத்தப்பட்ட பிழவுதான் சாதிகள் (பிறப்பால் என்று பொருள்) .

மகராஷ்டிராவில் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தை வழிநடத்தியவர்களுள் மிக முக்கியமானவரான ஜோதிராவ் ஃபூலே. தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து 1873 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி உருவாக்கிய ‘சத்திய சோதக் சமாஜ்’ என்ற அமைப்புதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமைகளை மீட்பதற்கான முதல் முயற்சியாகக் கருதப்பட்டது. ‘உடைந்து போனவர்கள்’ அல்லது ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ என்று பொருள்படும் ‘தலித்’ என்ற மராத்திச் சொல்லை அறிமுகப்படுத்தியவரும் இவரே. அதன் தொடர்ச்சியாகத்தான் எழுபதுகளில் மராட்டியத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், இந்திய வரலாற்றில் சாதி முறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில் சிலரும், தங்களைத் ‘தலித்’ என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கினர். அதிலிருந்துதான் இந்தப் பெயர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலைத்துவிட்டது .

இந்து மதத்தின் சாதி வேறுபாடுகளான நான்கு வகை வர்ண வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இவர்கள் ‘பஞ்சமர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், உழைக்கும் மக்கள்,  நிலமற்றவர்கள்,  அரசியல் அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் சுரண்டப்படும் மக்கள்.

படம்: thelogicalindian.com

‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்பாலொருவன்’ என்று புறநானூறும், ‘வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மலையும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கில்லை’ என்று தொல்காப்பியமும், ‘மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும் விழிக்கொரு பகட்டும் ஆய்’ என்று குற்றாலக் குறவஞ்சியும், ‘நால்வகைப்பாவும் நால்வகைக் குலத்தின் பால் வகைப்படும்’ என்று சிலப்பதிகாரமும், முற்போக்குச் சிந்தனையோடு ‘பறைச்சியாவது ஏதடா? பனத்தியாவது ஏதடா? இறைச்சித்தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?’ என்று சிவவாக்கியரும் சாதிய வேறுபாடுகளை அடையாளம் கண்டு பதிவிட்டிருப்பதே தமிழ்ச் சமூகத்திலும் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கான சான்று.

பிறகு 1927 இல் அம்பேத்கரின் தலைமையில் மனுதர்ம விதிகள் கூறும் தீண்டாமைக்கு எதிரான இயக்கம் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது. சாதி என்னென்ன விதமாக இருக்கிறது, அது எந்தெந்த வடிவங்களில் இயங்குகிறது, நடைமுறை வாழ்வில் அதை எவ்வாறெல்லாம் செயல்படுத்துகிறார்கள் என்பதை, காலங்காலமாகச் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை மட்டும் அது எப்படியெல்லாம் வதைத்து வந்திருக்கிறது என்பதைச் சொல்வதற்கான ஒரு இயக்கமாக அதைத் தோற்றுவித்தார் அம்பேத்கர். அதன் விளைவாகவே மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் தலித் மக்களைப் பற்றிய இலக்கியங்கள் ‘தலித் இலக்கியம்’ என்ற பெயரில் உருவாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை.  நாய்கள், பூனைகளை விட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகம்,  யுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது” என்று 1931 இல் காந்தியைச் சந்தித்தபோது அம்பேத்கர் கூறினார்.

படம்: youtube

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு” தனது அறிவுத் திறனையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. அடிப்படைக் கட்டமைப்பில் சாதியின் பெயரால் சக மனிதருக்கு மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி காப்பற்றப்பட வேண்டும் என்ற சீரிய சிந்தனையோடு எழுதப்பட்டது. ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் முந்தைய மற்றும் ஆதி கால வரலாற்றிற்கான கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து தீண்டாமை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்து பதிவிடத் தவறிவிட்டார்கள். ஆகவேதான் கல்வியும், வேலைவாய்ப்பும், அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு சமூக அவலங்களுக்கு ஆட்படுத்தப்படும் பெரும்பான்மைச் சமூகத்தின் இழிநிலையைப் போக்கப் பாடுபட்ட அண்ணல். அம்பேத்கர், தந்தை. பெரியார் போன்ற தலைவர்களின் தேவை இன்றும் உள்ளது.

துப்புரவுப் பணி செய்து, சாக்கடைகளில் இறங்கித் தூய்மைப்படுத்தி, நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், இரயில் தண்டவாளங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடும் மக்களைப் பார்த்து தூய்மையற்றவர்கள், தீண்டத் தகாதவர்கள் என்று கூறுவது உயிர்நீர் சுரக்கும் தாயின் மடியைப் பார்த்து முடை நாற்றம் வீசுகிறதென்று களங்கப் படுத்துவதற்குச் சமம். ஆனால் அதை இன்றளவும் கூச்சமேயில்லாமல் தெளிவாகச் செய்து வருகிறது அதிகாரப் பெரும்பலத்தைத் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் ஆதிக்கச் சாதி வர்க்கம். அதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடை விதிக்க வேண்டிய முனைப்பில் மிகவும் கவனமாகப் செயல்படுகிறது. வர்க்கப் பாகுபாடு முதலாளித்துவத்திற்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதால் பெருமுதலாளித்துவ சமூகம் அதிகார வர்க்கத்தின் மூலம் இப்பாகுபாட்டை நிலைத்திருக்கச் செய்வதற்கான எரிபொருளை நிரப்பிக் கொண்டேயிருக்கிறது. அதன் எண்ணற்ற வழிகளில் ஒன்றுதான் கல்வியிலும், கல்விச் சூழலிலும் அவை முன்வைக்கும் சாதியப் பாகுபாடுகள். இன்றளவும் 60 %  நிலமற்ற ஏழை மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் அதன் விளைவாகத்தான். இந்த இழிவான நிலையை அகற்றிடவும், சமதர்ம சமுதாயம் படைத்திடவும்  சாதி வாரியான இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வாகிறது.

படம்: yourarticlelibrary

ஆளுமைப்படுத்தும், பொருளாதார முன்னேற்றமடையச் செய்யும், தனியுரிமையைக் கைப்பற்றி அனைத்துச் சுகபோகங்களையும் அனுபவிக்கும் அதிகாரம்தான் சாதியையும், தீண்டாமையையும் வளர்க்கிறது. இந்த அதிகார வர்க்கத்தினரின் ஒடுக்குமுறைகளை அரசியல் மற்றும் சட்ட விதிமுறைகளில் ஏற்படுத்தப்படும் மாறுதல்கள் ஓரளவிற்குக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் இந்த அதிகாரம்தான் ஒரு பெண் சாதி மறுப்பை ஏற்று தாழ்த்தப்பட்ட இளைஞனைத் திருமணம் செய்கையில் அவளைக் கௌரவக் கொலை செய்யத் தூண்டுகிறதென்றால்,  இந்த அதிகாரம்தான் சகமனிதனை மலம் அள்ளச் சொல்லுகிறதென்றால்,  இந்த அதிகாரம்தான் சக மனிதனின் பிறப்புரிமைகளைத் தட்டிப் பறிக்கிறதென்றால் அதன் பொறாமைக்கும், பேராசைக்கும், அதற்காகவே போதிக்கப்படும் மத நம்பிக்கைகளுக்கும் பலியாகாமல் இருக்க அதற்கான மாற்றுக் கருத்தை எழுத்து வடிவிலே வரலாற்றுப் பதிவாக்குவது நமது தலையாய கடமையாகிறது.

Reference:

  • Annihilation of caste- B.R.Ambedkar
  • இந்தியாவில் சாதிகள் – அம்பேத்கர்
  • டாக்டரும் புனிதரும்- அருந்ததி ராய்.
  • india.com
  • times of india
  • ndtv

1 COMMENT

  1. meendum oru ambedkar kandipa intha generation la vendum. appotha intha gowrava kolaikal oliyum. school ah pinchu kuzhathaikal bathroom suththam seira nilamaiyum maraiyum. appokuda ippa irukavanga avaraiyum mathituvangalo????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here