படம்: tricityevents

இந்தி மொழித் திணிப்பு பற்றி வெகு நாட்களாகவே எழுத எத்தனித்தும் சரியான தருணம் அமையவில்லை. உலக தாய்மொழி தினமான இன்று அதற்கேற்ற சரியான நேரமாகக் கருதவே எழுதி முடிக்கப்பட்டது இந்தக் கட்டுரை. முதலில் “நான் ஏன் இந்தி படிக்க வேண்டும்” என்று கேட்டால்போதும் என்னை தேசத் துரோகி என்று கருதி ‘ஆன்டி இந்தியன்’ என்று சொல்லும் முதல் குரல் எனது நண்பராகவோ, அண்டை வீட்டுக்காரராகவோ அல்லது உறவுக்காரராகவோ இருப்பதுதான் வேதனை. என் அன்பார்ந்த உறவுகளே! முதலில் மானுடம் எத்தகைய நிலவியல் ஆபத்துகளை நோக்கி நகர்கிறது? ஏன்? என்றெல்லாம் கூட அறிந்துகொள்ளாமல் எதற்கோ மயங்கி, யாருக்கோ கொடி பிடித்து,  எதையோ தேடி, எதையோ உண்டு, எதையோ குடித்து, எதையோ களித்து, எதைச் சாதிக்க நோயாளிகளாக அலைந்து எங்கே ஓடுகிறீர்கள்? என்பதை முதலில் கவனியுங்கள்.

உலகம் முழுவதிலுமே பொதுவாக அதிகார அமைப்பு என்றுமே தன் கொள்கைகளுக்கு எதிரான ஒன்றை எப்படியேனும் அடக்கி ஒடுக்கவே முயற்சிக்கும். ஆட்சி முறையின் மாற்றங்களில் இந்த உலகம் எத்தனை பரிணாம வளர்சிகளைக் கண்டிருந்தாலும் சரி இதுவே நிதர்சனம். ஆக ஜனநாயக அரசு என்பதும், ஜனநாயக அமைப்பு என்பதும் இன்றும் பெயரளவிலேயே உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அதற்கு எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965.
படம்: outlookindia

மக்களின் தேவை நியாயமானதாகவே  இருப்பினும் அதிகார அமைப்பின் தனிப்பட்ட கொள்கைக்கு எதிர்கொண்டதாக உயர்ந்து ஒலிக்கப்படும்போது அது பல அடக்குமுறைகளைச் சந்தித்து, உயிர்த் தியாகம் செய்து புரட்சிப் பாதையில் அதிகார அமைப்பை நிலைகுலையச் செய்துதான் தனக்கான தேவையை வெற்றிகொள்ள முடிகிறது. அதிகார அமைப்பும்  எத்தகைய முயற்சிகளைக் கைக்கொண்டேனும் அந்த அமைப்பின் கீழ் வாழும் மக்களை அடக்கி ஒடுக்கிடவே முயலும். அவ்வாறு நடந்ததற்கான சான்றுகளை உலகம் முழுவதிலும் காணலாம்.

ஆக மக்களின் தேவையும், விருப்பமும் அதிகார அமைப்பிடம் ஓங்கி ஒலிக்கும்போது மட்டுமே கருத்தியல் அடிப்படையிலான ஜனநாயகத்தை வென்றிட முடியும் என்பதை வரலாறு நமக்குத் தெளிவாகக் கற்றுத் தந்திருக்கிறது. இன்று தனி மனித விடுதலை விரும்பிய கருத்தியல் வென்றதாக நாம் கொண்டாடும் பல வெற்றிகளுக்குப் பிறகு அப்படி எண்ணற்ற போராட்டக் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

படம்: maximusit

அந்த வகையிலே கடந்த, 1948இல், உருதுமொழியை அலுவல் மொழியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் (வங்காளதேசம்) பெரும்பான்மையாக இருந்த வங்காளிகள், வங்க மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1952இல் போராட்டத்தில் குதித்தனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், இந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினர். தாய்மொழி காக்கத் திரண்ட மாணவர்கள் மீது 1952 பிப்ரவரி 21-ஆம் நாள் பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதையடுத்து, உருது மற்றும் வங்காளம் ஆகிய இரு மொழிகளும், அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்காளதேசம் உருவானது. வங்க மொழி காக்க உயிர் நீத்த மாணவர்களின் நினைவு நாளான பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி நாளாகக் கொண்டாட வேண்டும் என வங்கதேசம் 28 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா., சபையில் கோரிக்கை வைத்தது. கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

படம்: currentaffairsbd

இன்றைய நாளில்தான் தமிழர்கள் மட்டும் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்றோ, ஏன் எதிர்க்க வேண்டும் என்றோ? புரியாமல் கேள்வி கேட்கும் அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது மொழியும், மானுட மீட்சியும் எவ்வாறு தொடர்புடையது என்பதற்கான உளவியலும், அறிவியலும் ஆகும். அதோடு இதை நன்கு புரிந்துகொண்ட தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை முழுமையாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்வதும் அடங்கும்.

ஒரு சமூகம் பண்படுத்தப்பட மொழியும், அதன் வளர்ச்சியும் இன்றியமையாதது. மொழியின் ஊடாகத்தான் ஒட்டுமொத்தச் சமூகமும் உறவாடிக் கொள்கிறது. அறிவைப் பெருக்குவதற்கும், பண்பாட்டை வளப்படுத்துவதற்கும் மொழி இன்றியமையாததாகிறது. அதற்குத் தாய்மொழியை விடச் சிறந்த பங்களிப்பைத் தர வேறு எந்தவொரு மொழியாலும் முடியாது. நேரடியாக ஒரு மனிதனின் சிந்தனையைக் கிளப்பிவிடுவது தாய்மொழி மட்டுமே. இதைத்தான் “புதிதாக ஒரு மொழியைக் கற்க ஆரம்பித்திருப்பவர் எப்போதும் தன்னுடைய தாய்மொழியில் அதை மொழிபெயர்த்துக்கொள்வார்” என்கிறார் காரல் மார்க்ஸ்.

படம்: azquotes

உலகில் பேசப்படும் மொழிகள் பொதுமொழி, தாய்மொழி என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6200 ஆக இருந்த மொழிகள் இன்று 3000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். செம்மொழியாகப் பல நூற்றாண்டுகள் வளர்ந்த மொழிகளும் இதில் அடக்கம். படையெடுப்புகளும், அதிகார அமைப்பிற்கு நெருக்கமான மொழி ஏற்படுத்திய ஆதிக்கமுமே இதற்குக் காரணம். அழிந்து போன சில செம்மொழிகளுக்கு இடையிலேயும் இத்தனை படையெடுப்புகளையும், திணிப்புகளையும் தாண்டி தமிழ் உயிர்ப்போடு வளர்கிறது என்றால் இந்த மொழியின் தன்மை அத்தகைய சிறப்பு வாய்ந்தது.

“மொழி பன்மைத்துவமும், தாய்மொழியை முதன்மையாகக் கொண்ட பன்மொழிக் கற்றலும் நீடித்த வளர்ச்சிக்கு அவசியமானவை” என்று வலியுறுத்தியிருக்கிறது யுனெஸ்கோ. இன்று என்னுடைய பிள்ளை எப்படியாவது இந்தி படிக்க வேண்டும் என்று எங்கும் பல பெற்றோர்கள் யுனெஸ்கோ தெரிவித்திருக்கும் இக்கருத்தை முதலில் சிந்திக்க வேண்டும்.

தாய் மொழியின் அவசியம் இவ்வாறிருக்க ஏன் மொழித் திணிப்பைத் தொடர்ந்து ஆட்சியாளர்கள் அரங்கேற்றி வருகிறார்கள் என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்தியிருக்கிறது. மேற்கூறியது போலவே அதிகார அமைப்பு தனது கொள்கைகளை அரசியலமைப்பின் மூலம் வென்றெடுக்க மக்களின் நம்பிக்கை அவசியமாகிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற பண்பாட்டுப் படையெடுப்பு அவசியமாகிறது. பண்பாட்டுப் படையெடுப்பின் எதிர்மறை ஆதாரமாக விளங்குவது தாய்மொழி. ஆகத் தாய்மொழியின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து மக்களை விலகச் செய்து அதிகார அமைப்பிற்கு இணக்கமாக உள்ள மொழியைத் திணிப்பதன் மூலமாகவே அதிகார அமைப்பின் ஒட்டுமொத்தக் கனவையும் நடைமுறைப்படுத்த முடியும். அதனால்தான் தாய்மொழி மீதுள்ள நம்பிக்கையைக் கொச்சைப் படுத்தும் நோக்கில் செயல்படுகிறது அரசு.

இந்தியா என்ற இந்த மாபெரும் பன்முகத்தன்மை வாய்ந்த கூட்டமைப்பில் ஒவ்வொரு தேசிய இனமும், அவர்தம் தாய் மொழியும் வளர்த்தெடுப்பதே முன்னேற்றத்துக்கான ஒரே வழி. ஆனால் விடுதலை இந்தியாவில் இடம்பெற்ற அதிகார அமைப்புகள் தொடர்ந்து இந்தித் திணிப்பு எனும் முயற்சியில் இறங்கி இன்று இந்த நாட்டின் மனித வளத்தைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது. ஆக இந்தியாவில் எந்தவொரு தேசிய இனமும் தனது தாய்மொழியை மறுத்துவிட்டு முன்னேறுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. இந்நிலையில் தற்போதுவரை நடத்தப்பட்ட பல அகழாய்வுகளின்படியும் பழம்பெரும் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட தமிழினம் எவ்வாறு தன் தாய்மொழியை விடுத்து முன்னேற முடியும்?

படம்: karaitivurep

மொழி மற்றும் பண்பாட்டுப் படையெடுப்பில் இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த அதிகார அமைப்பின் நோக்கங்கள் வேறு அதுவே ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டில் இயங்க ஆரம்பித்த பிறகு அதன் நோக்கம் வேறாக மாறிவிட்டது. இது ஒட்டுமொத்த நிலவியலையும் வாழத் தகுதியற்றதாக்கிவிடும் ஆபத்தான சூழலை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்ட காலத்திற்கு முன்பிருந்த தற்சார்பு உணர்வைக் காட்டிலும் இன்றுதான் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் முதலாளித்துவத்திற்கு பலியான சமூகமே மிஞ்சியிருக்கிறது. அதன் விளைவுதான் “எங்கள் பிள்ளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வேண்டும்”, “எங்கள் பிள்ளை கட்டாயம் இந்தி படிக்க வேண்டும்” என்றெல்லாம் பிதற்றும் பெற்றோர்களையே பெரும்பாலும் நாம் காண முடிகிறது.

மனித சமூகத்தை முன்னேற்ற விடாமல் தடை செய்யும் அமைப்பு எதுவாயினும் சரி, அது யாருடைய நோக்கமானாலும் சரி, அது எந்த வடிவிலானாலும் சரி ஜனநாயகமும், அதன் நோக்கமும் வென்றிட வழி ஒன்றுதான். மானுடம் காப்பற்றப் பட வேண்டிய அடிப்படை ஆதாரங்கள் அனைத்திலும் உரிமைக்காக எதிர்குரல் எழுப்புவது நம் அனைவரது கடமை. அந்த வகையிலே நம் தாய் மொழியான தமிழ் மொழியின் மீதும் அதன் அடையாளங்கள் மீதும் எப்போதெல்லாம் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் முயல்கிறதோ அப்போதெல்லாம் தாய் மொழியின் துணைகொண்டு அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டிய முயற்சியில் அசுரத்தனமாக ஈடுபட வேண்டும்.
தமிழர்களாகிய நாம் கலைகளை, அறிவியலை தமிழ் மொழியில் வளர்த்திட வேண்டும். ஆய்வுகள் அனைத்தும் தாய் மொழியில் நடத்திட முயன்றிட வேண்டும், ஆட்சி மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் தமிழைக் கொண்டுவந்திட அரசியல் தீர்வு நோக்கிய நகர்வுகளை அமைப்புகளின் வாயிலாக முயன்றிட வேண்டும். தற்சார்பு நோக்கி நகர்ந்திட, வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போட்டிட தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தியபடியே முன்னேற வேண்டும்.

 

Featured Image credit: Tricityevents

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here