ஒரு பக்கம் ஆண்டாள் இங்கு அவதனித்துக் கொண்டிருக்க பல மாதங்களாக சித்தோர்கர் ராணி பத்மாவதி வட இந்தியாவின் வழக்கம் தவறிய வன்முறைக் களத்தைக் கண்டு கொண்டிருக்கிறார். தேவதாஸ், பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்களை இயக்கிய சன்சய் பன்சாலி இப்படத்தை எடுக்கத் துவங்கியதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளை வெவ்வேறான பரிணாமங்களில் பத்மாவதி சந்தித்து வருகிறது.

ராஜபுத்திர அமைப்பைச் சேர்ந்தவர்கள், கர்னி சேனா அமைப்பினர், மேலும் பல இந்து பாஜக முகவர்கள் எனத் தொடங்கி மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், உபி முதல்வர்கள் வரை இப்படத்திற்கு நேரடியாக எதிர்ப்பு கூறியுள்ளனர். இருமுறை படப்பிடிப்பின் போது செட் எரிக்கப்பட்டு, இயக்குனர் பன்சாலியும் தாக்கப்பட்டார். பாலிவுட் திரையுலகம் இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்தபோதும் பாஜக முகவர் ஒருவர் பன்சாலி மற்றும் தீபிகாவின் தலைக்கு 10 கோடி விலை நிர்ணயித்தார். எல்லாவற்றிற்கும் மேலாகப்  பள்ளி வாகனங்களைத் தாக்குவது, உடமைகளை எரிப்பது,கல் வீச்சு எனத் தீவிரமடைந்து கிடக்கும் மதவாத வன்முறை எதற்காக நடக்கிறது?, யார் இந்த பத்மாவதி?

படம்: youtube

13 ஆம் நூற்றாண்டில் மேவார் ராஜ்ஜியத்தின் ராஜபுத்திர அரசராக இருந்த ராவல் ரத்தன் சிங்கின் மனைவிதான் பத்மாவதி. அழகு சொருபமாக இருந்த இவரது மெய்கீர்த்தி பற்றி அப்போதைய சாம்ராஜ்யங்கள் முழுதும் பரவியிருந்தது. இந்நிலையில் மன்னர் ரத்தன் சிங்கால், ஒரு தவறுக்காக அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்ட ராஜகுரு ராகவ் சேத்தன், பழிவாங்கும் திட்டத்தில் அப்போது தில்லி சுல்தானாக  இருந்த கில்ஜியைச் சந்தித்து பத்மாவதியின் அழகைப் பற்றிச் சொல்கிறான்.

பத்மாவதியின் வசியம் கொள்ளும் அழகில் ஆசை கொண்ட அலாவுதீன் கில்ஜி அவரை அடைந்துவிட எண்ணி மேவார் நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறான். மிகத் தீவிரமாகப் பல மாதங்கள் நடக்கும் போரில் அரசன் ரத்தன் சிங் இறக்க நேரிடுகிறது. படைகளை வென்ற கையோடு ராணியை அடைந்துவிட  எண்ணிக்  கோட்டையை நோக்கி விரைந்து சென்றான் கில்ஜி. அலாவுதீனின் இச்சையை அறிந்த ராணி அவன் கோட்டைக்குள் நுழையும் முன்பே தான் உட்பட 16000 ராஜபுத்திரப் பெண்களுடன் கூட்டுத்தீயிட்டு இறந்துவிட்டதாகவும் அதைக் கண்டு கில்ஜி அச்சப்பட்டுத் திரும்பிச் சென்றதாகவும் கதைகள் சொல்கின்றன. இவர் உடன்கட்டை ஏறியதாகவும் சிலர் சொல்கிறார்கள். போருக்கான ஆதாரங்கள் இருப்பின் ராஜபுத்திர வம்சம் பெருமிதம் கொள்ளும் பத்மாவதியின் கற்பும், அவரது வீரத்தின் பெருமைகளும்  வெறும் செவிவழிக்  கதையாகத்தான் தொன்றுதொட்டு வருகிறது.

படம்: livekhabre

முக்கியமாக 16 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய சூபி கவிஞர் முகமது ஜெயசி இயற்றிய ‘பத்மாவத்’ கவிதைத் தொகுப்பே இப்படத்தின் அடிப்படை. இது முழுக்க வரலாறல்ல என்றும் புனைவாகக் கூட இருக்கலாம் என்றும் சில வரலாற்றாளர்கள் எண்ணுகிறார்கள்.

ராஜபுத்திர ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் தவறாகக் காட்டப்பட்டுள்ளதாகவும், அலாவுதீன் கில்ஜிக்கும் அவருக்குமிடையே சர்ச்சைக்குரிய கனவுப் பாடல் ஒன்று இருப்பதாகவும் அவர்கள் இணைந்து நடித்திருக்கும் படத்தில் தேவையற்ற காட்சிகளை நீக்க வேண்டுமெனவும், அதுவரை படத்தை வெளியிடத்  தடை கோரி கோரிக்கை வைத்ததோடு, வழக்கும் பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் யாரும் படத்தை அதுவரை பார்த்தது கூட இல்லை.

படம்: brecorder

படக்குழு எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தபோதும் யாரும் செவி கொடுத்துக் கேட்பதாக இல்லை. பின்னர் பல ஊடகவியலாளர்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அவர்கள் கூட படத்தில் கில்ஜியும் பத்மாவதியும் இணைந்து தோன்றுமாறு எவ்வித காட்சிகளும் இல்லை எனவும். படத்தை திரையில் பார்த்தபின் எதிர்த்தவர்களை மக்கள் முட்டாள் என்பார்கள் என விமர்சனம் தந்தனர்.

எந்தக் காட்சி எனத் தெரியாமலே அதை நீக்கப் போராட்டம் நடந்தது. மிகப்பெரிய வரலாற்றுச் சான்றுகள் இல்லையெனினும் கூட்டுத் தீக்குளிப்பு சம்பவங்கள் ராஜபுத்திர கதைகளில் நிறைய உள்ளன. அதைத் தன் குலப் பெருமையாக என்னும் ராஜபுத்திர சேனா வரலாற்றைத் திரித்துப் படம் எடுப்பதால் எங்கள் குல ராணிக்கு இழிவு ஏற்படும் என முறையிடுகின்றனர். ராணி நடனமே ஆடியதில்லை எனச் சொல்கிறார்கள்.

ஒருவேளை அவர்களது நம்பிக்கைக்கு எதிராகத் தொன்மைக்கு மாற்றாக படம் உருவாகியிருந்தால் அதனை எதிர்க்க யாவர்க்கும் உரிமை உண்டு. ஆனால் அதைத்  தெரிந்துகொள்ளப்  படம் திரைக்கு வரவேண்டுமே. அதற்கு எதிராகச் செயல்படுவது கருத்துச் சுதந்திரத்திற்குதான் பாதிப்பை விளைவிக்கும். பல இந்தியப் படங்கள் எதிர்ப்பு காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியபின் திரையிடப் பட்டிருக்கின்றன.

தணிக்கைக் குழு முடிவு செய்யும் முன்பே இவர்கள் தாமாக யூகத்தால் முடிவுக்கு வந்து தடை கோரினர். தற்போது யுஏ சான்றிதழ் அளித்து படத்தைத்  திரையிட அனுமதி அளித்துள்ளது தணிக்கை குழு. பல மாநிலங்களில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டபோதும் வெளிநாடுகளில் அனுமதி தரப்பட்டது. இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது. பாகிஸ்தானில் ஒரு காட்சி கூட வெட்டப்படாமல் அங்கிருக்கும் தணிக்கை குழு படத்திற்கு முழு அனுமதி அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.

ஏனெனில் படத்தில் வில்லனாக வருவது ஒரு இஸ்லாமிய மன்னர், வரலாற்றுச் சான்றுகள் பலவும் அதற்கு ஏற்புடையதாகவே இருக்கிறது. மேலும் ஒரு வியக்கத்தக்க  செய்தி என்னவென்றால் அவர் ஓரினச்சேர்க்கையாளராகவும் இருந்திருக்கிறார். டெல்லியை ஆட்சி செய்த இஸ்லாமிய அரசரான அலாவுதீன் கில்ஜி பற்றி தவறாக குறிப்பிடுவதாகக் கூறி சில காட்சிகளை நீக்கும்படி பாகிஸ்தான் திரைப்படத் தணிக்கை வாரியம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் படக்குழு இந்த செய்தியால் நிம்மதி அடைந்து இருக்கிறது.

படம்: pepperfeed

மெர்சல் படத்திற்குக் கூட வெளியானதும் விமர்சனம் செய்து காரியங்களை திசைதிருப்பிக் கொண்டனர். அல்லது விஸ்வரூபம் படத்தைப் போல கையாண்டு இருக்கலாம். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டபின் திரையிடப்பட்டது அப்படம்.

இப்படத்தில் பத்மாவதி வேடத்தில் தீபிகா படுகோனும், ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும் நடிக்கிறார்கள். முதலில் தீபிகா படுகோன் நடனமாடும் ஒரு பாடல் வெளியானபோது ஒரு பக்கம் ரசிகர்களும், மறுபக்கம் மதவியலாளர்களும் குதிக்கத் தொடங்கி விட்டனர்.

பத்மாவதி கதாபாத்திரமாக இருக்கும் தீபிகா இடுப்பைக் காட்டி நடனமாடியிருக்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. அதன் காரணம் ஒரு ராஜபுத்திர அரசி சபையோர் மத்தியில் அப்படி ஆடியிருக்க மாட்டார் என்பதாகும். இடை தெரிய உடை அணிவது என்பது பண்டைய காலத்தில் தவறாகப் பார்க்கப்படவில்லை எனினும் அந்தக் காட்சிகளுக்கு கிராபிக்ஸ் மூலம் ஆடை மறைக்கப்பட்டுள்ளது.

படம்: india

டிசம்பர் 1ம் தேதியன்று வெளியாக வேண்டிய திரைப்படம் எதிர்வினைகளால் தற்போது பத்மாவத் என பெயர் மாற்றப்பட்டு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஜனவரி 25 ல் திரைக்கு வந்தது. அதற்குள் திரையான தேதியில் ரயில் மறிப்பு, திரையரங்குகளைத் தீயிட்டு கொளுத்துவது என வன்முறை கட்டவிழ்ந்து நிலவுகிறது. குர்ஹானில் பள்ளிச் சிறுவர்களின் பேருந்து தாக்கப்பட்ட வீடியோ பதிவுகளைப் பார்க்கும் போது எப்படியான மனப்போக்கு கொண்ட மக்கள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சந்தேகம் எழுகிறது.

தெருவெங்கும் போராட்டம் ஆங்காங்கே கிடக்கும் இரு சக்கர வாகனங்களைத் தீயிட்டுச் சாம்பலாக்குவது என அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த மாநில அரசுகள். ராஜஸ்தான், ஹரியானா, மகாராட்டிரா மாநிலங்களில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய ஆளுங்கட்சியை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சாபக் கண்ணில் காண்கின்றனர். இந்த மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இத்தனை நடந்தும் போராட்டத்திற்குக் காரணமான ராஜபுத்திர சேனா அமைப்பினர் தங்களுக்குப் படம் திரையிட்டு காட்டப்பட்ட பின்னர் “பத்மாவதி படக்குழு எங்களுக்கு அடிபணிந்து காட்சிகளைச் சரி செய்துள்ளது” என சப்பைக் கட்டு கட்டினார்கள்.

வரலாற்றைப் படமாக்க முயலும்போது அது பலர் நம்பிக்கையைக் கேள்வி கேட்கும் வகையில் அமைந்து விடக்கூடாது என்ற அச்சம் இருக்கிறது எனச் சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்திருந்தனர். முஸ்லீம்களுடன் பழைய பகையை நினைவுபடுத்துவதாக சில இந்துத்துவ ஆதாரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மதத்தின் பெயரில் வன்முறை ஆர்பாட்டம் மேற்கொண்டு இஸ்லாமிய சகோதர்களையும், தலித் மக்களையும் தாக்கியவர்கள் யார்? என்பதுதான் இங்கு முரணாக இருக்கிறது.

கில்ஜியை வில்லனாகக் காட்டும் இதே பாலிவுட் திரையுலகம்தான் ஜோதா அக்பர் படம் வழியாக அக்பரின் பெருமைகளைச் சொல்லி நம்மை ரசிக்க வைத்தது. ஹாலிவுட் திரையுலகில் வரலாற்றுப்  புனைவுப் படங்களுக்கு முழு வரவேற்பு உள்ளது. அதை அவர்கள் ரசிக்கிறார்கள், காரணம் அவர்கள் படத்தைப் படமாக பார்க்கிறார்கள். உதாரணமாக ‘டாவின்சி கோட்’ படத்தை எடுத்துக் கொண்டால் அந்தப்  படத்திற்கு வந்த சர்சையை ஒப்பிடும்போது பத்மாவதி ஒன்றுமில்லை எனத் தோன்றும். இருப்பினும் அதுவும் திரைக்கு வந்தது.

படம்: DNA India

தமிழில் பத்மாவதி படத்தைப் பார்த்த என் நண்பர்கள் “படம் நன்றாகத்தானே உள்ளது, ஆனால் எதற்காகப்  போராட்டம் நடத்தினார்கள்?” என்று கேட்கின்றனர். பதில்  சொல்வதா, சிரிப்பதா எனத்  தெரியவில்லை. அன்று தன்னையே தீக்கிரையாக்கி விட்டு பத்மாவதி தன் வம்சத்திற்குத் தந்த பெருமையை விழுங்கிக் கொண்டிருக்கிறது இன்று மதவாதிகளால் வீதியில் எரிந்து கொண்டிருக்கும் தீ. கலைகள் மீது சாதி, மத பேதங்கள் தொடுக்கின்ற  உரிமைப் போரானது என்றுமே கலைகளின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலானதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here