ndtv

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்” – அய்யன் திருவள்ளுவர்.

‘விவசாயம்’ என்பதும் ‘உணவு’ என்பதும் வாழ்வியல் தேவை. அதுவே மற்ற தொழில்கள் அனைத்திற்குமான பிரதானம். தொடர்ந்தாற்போல் இந்த கார்ப்பரேட் டெமாக்ரஸி அசாத்திய பெரும் பணக்காரர்களின் வங்கிக் கடன்களைக் கண்டு கொள்ளாததுபோல் சாமானிய மனிதர்களின் தேவைகளையும் கணக்கில் கொள்வதில்லை. ஆனால் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றோம் என்று அறிந்த பின் சாமானியன் என்ன செய்வான். தனக்கென இருக்கும் குரலின் பலத்தினை  ஒருங்கிணைக்கவும், அதிகரிக்கவும் தொடங்குவான். இங்கு அவன் இழப்பதற்கென்று என்ன இருக்கின்றது? உயிரைத் தவிர என்ற நிலையே வந்துவிட்டது. எங்கும், எதற்கும் போராட்டங்கள். என்னதான் பெரும்வாரியாக மேற்கத்திய மோகத்திற்குப் பழகிப் போயிருந்தாலும், உணவிற்காக நாம் உழவனைத்தான் வேண்டி நிற்கின்றோம். ஆனால் அவன் வாழ்வில் மாற்றங்கள் என்று ஒன்றுமே இல்லை. சரி அதிகமான அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

என்ன நடக்கின்றது என்று பார்த்தால் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா எங்கும் போராட்டங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. தீர்வுகள் கிடைக்கின்றதோ, இல்லையோ தன் நிலையினை உறுதிபடுத்த எங்கும் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இன்று மராட்டிய மாநிலத்தில் நடைபெறும் இந்தப் போராட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமே சாராமல், உணவுண்ணும் அனைவருக்குமான வாழ்வாதாரத்தைக் கேள்வி கேட்கும் வகையில் அமைந்திருக்கின்றது. பயிர்க்கடன் தள்ளுபடி, பென்சன், விலை நிர்ணயம் என்று தொடர்ந்து பல்வேறு தேவைகளும் மராத்திய அரசு தக்க முறையில் விவசாயிகளுக்கு அமைத்துத் தராததைக் கண்டித்து 180 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் மும்பையை நிலைகுலைய வைத்திருக்கின்றார்கள் மராத்திய விவசாயிகள்.

படம்: dnaindia

இது மாராட்டிய விவசாயிகளின் பிரச்சினையாகவும், இடதுசாரிகளின் எதிர்ப்பு அரசியலாகவும் சுருக்கிவிட முனைகிறது நடுவண் அரசு. விவசாயிகளுக்கான அரசாகவும், அவர்களுக்காகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததாகவும் பெருமையடித்தவர்கள் இன்று விழி பிதுங்கி நிற்பது ஏன்? ஒரு வேலை தலைநகர் டெல்லியை நோக்கி அனைத்து விவசாயிகளும் பேரணி சென்றால் பதிலுரைக்க வாய்ப்பிருக்குமோ என்னவோ! இதில் எதிர் கட்சிகளின் மௌனம் வேறு சகிக்கவே முடியவில்லை. மேலும் இது நேற்று மராட்டியத்தில் மட்டும் அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கிய பிரச்சனை அல்ல. காவிரி நதி நீர் பங்கீட்டில் இன்று வரை தீர்வு எட்டப்படாத ஒரு நூற்றாண்டு காலத்திய தென்மாநிலங்களின் பிரச்சனை, நீர் வளம் குறைந்ததாலும், விவசாயக் கடன் சுமையாலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஆயிரக்கணக்கான விதர்பா விவசாயிகளின் பிரச்சனை, காலங்காலமாக விவசாய நிலங்களில் கூலிக்குப் போராடி மடியும் அடிமைகளின் பிரச்சனை.

ஆறு மாதங்களாக டெல்லியில் முகாமிட்டுத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த தமிழக விவசாயிகளைக் காதுகொடுத்துக் கேட்டிருந்தால் ஒரு வேலை இதற்கான தீர்வை யோசித்திருக்கலாம். ஆனால் வங்கிகளின் புறவாசல் வழியாக வைர வியாபாரிகளுக்கும், சாராய ஆலை அதிபர்களுக்கும் கட்டுக் கட்டாகப் பணத்தை வாரிக் கொடுத்துவிட்டு, பயிர்கடன் வசூலிக்க ஏழை விவசாயியின் கோவணத்தை உருவும் கார்ப்பரேட் கைக்கூலி அரசு அப்படி யோசிக்கவும் வாய்ப்பில்லை.

 

படம்: dnaindia

‘அகில இந்திய விவசாயிகள் சபை’ மற்றும் ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்’ கட்சியின் அழைப்பினை ஏற்றுக் கடந்த செவ்வாயன்று நாசிக்கில் இருந்து இந்தப் போராட்டம் தொடங்கியது. ஒருவார காலமாக நடந்து இறுதியில் இன்று மும்பையை அடைந்துவிட்டார்கள். எந்த ஒரு ஊடகமும் ஆரம்பத்தில் பெரிதாக இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவில்லை என்பது பட்டவர்த்தனம். கார்ப்பரேட்டுக் கலாச்சாரத்தில் மலிந்து போன மக்களிடத்தே  ஸ்ரீ தேவியின் மரணமும், நயன்தாராவின் திருமணமும் தந்துவிடாத வரவேற்பை உழவர் போராட்டம்  பற்றிய செய்திகள்  தந்துவிடப் போவதில்லை என்பதை உணர்ந்த ஊடகங்களின் சமூக அக்கறையை இங்கே பெரிதுபடுத்தியும் யாதொரு பலனுமில்லை.

படம்: ndtv

ஆனால் பேரணியாக வந்த விவசாயிகள் மும்பையை அடைந்தவுடன்தான்  அதன் தீவிரத்தினை உணர்ந்திருக்கின்றார்கள் அனைவரும். அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலையினைக் கண்டும் காணாமல் நகர்ந்துவிடத் துணிந்த நம் துணிச்சலின் வேரினை அசைத்துப் பார்த்திருக்கின்றார்கள் 35000 விவசாயிகள். இவர்களுக்கு, இந்த நிலத்தினை உரிமை கொண்டாட உரிமை அளிக்க மறுக்கின்றது அரசாங்கமும், மக்களுக்கென இயற்றப்பட்ட சட்டங்களும். காடுகளின் மீதான உரிமைகளை அங்கீரிக்கும் வனச்சட்டம் 2006-த்தின் மாற்றத்தினையும் எதிர்பார்த்து இவர்கள் இந்த அறப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த மாபெரும் நடைப் பயணத்தில் பங்குகொண்டவர்களில் ஏராளமானோர் மலையினைச் சார்ந்து வாழும் ஆதிகுடிகள். அவர்களுக்கான நிலமானது அவர்கள் ஆதிகாலத்தில் இருந்து பயன்படுத்தி வரும் நிலம். இருந்தாலும், இங்கு வனத்துறையின் ஆதரவு இல்லாமல் முறையாக விவசாயம் செய்ய இயலாது என்று கூறுகின்றார்கள். தமக்கே உரிய நிலமானாலும் அதில் உரிமை கொண்டாட இயலாத நிலையே இச்சட்டத்தினால் வலுப்பெற்றிருக்கின்றது. வனத்தினை ஆதிகுடிகளில் இருந்து கைப்பற்றி, அரசாங்கத்தின் கண்காணிப்பில் கொண்டு வந்தபின் ஏற்பட்டிருக்கும் வனச் சுரண்டல்களும், வன நிலங்களின் பரப்பு குறைவும் நம் அனைவரும் அறிந்ததே.

உழைப்புக்கேற்ற கூலி என்பது எவ்விடம் சாத்தியப் பட்டாலும் விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட இந்திய விவசாயிகளுக்கு மட்டும் என்றுமே அது சாத்தியமற்ற இலக்காகவே இருக்கிறது.  குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் என்று அரிசிக்கு விலை நிர்ணயம் செய்திருக்கின்றது அரசாங்கம். ஆனால், ஒரு ஏக்கர் நிலத்திற்கு, நல்ல மழையினைப் பொறுத்து சுமார் 15 குவிண்டால் விளைவிக்கப்படுகின்றது. அதற்கு ஆகும் செலவு 12000 ரூபாய். ஆக, இங்கு லாபமும், நட்டமும் இன்றி உழைத்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும் என்றுதான் தோன்றுகின்றது. ஆயிரக்கணக்கானோர் கம்யூனிஸ்ட் கொடியினை எடுத்துவர, சிலர் கூறியதைப் போலவே லெனின் சிலை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் பலம் செங்கொடி என்பதை இவர்கள் அறிந்து செயல்படுகின்றார்கள் என்றே இந்நிகழ்வு நம்மை யோசிக்க வைக்கின்றது.

படம்: indianexpress

நிலம் வைத்திருப்பவர்கள் அன்றியும், விவசாயக் கூலிகள் பலரும் இப்போராட்டத்திற்கு ஆதரவினைத் தெரிவித்து நடைபயணம் மேற்கொண்டிருக்கின்றார்கள். ஒரு கிலோ பூசணிக்காயை இரண்டு ரூபாய்க்கும், ஒரு கிலோ அரிசியினை பத்து ரூபாய்க்கும் விற்று வரும் பணத்தில் அடிப்படைத் தேவைகளே பூர்த்தி செய்ய இயலாத நிலையில், படிப்பு, மருத்துவம் என்பதெல்லாம் அவர்களின் பகற்கனவுகளில் ஒன்றாகிவிடத்தான் வாய்ப்பிருக்கின்றது. அவர்களின் முதுகில் தொங்கிக்கொண்டிருக்கும் பையில் சப்பாத்திகளும், அவர்களின் கண்களில் ஏமாற்றத்தின் பிரதிபலிப்பும், அவர்களின் புன்னகையில் நம்பிக்கையினையும் காண முடிகின்றது. அவர்களின் நடவுப் பாடல்களை, ஆடல்களை, இறை வணக்கத்தினை மராத்திய தேசமெங்கும் காற்றில் பறக்கவிட்டிருக்கின்றார்கள். மும்பையை நெருங்கிய அவர்களை மும்பை வாசிகள் உற்சாகத்துடன் வரவேற்று உணவு, காலணிகள், தண்ணீர் ஆகியவை கொடுத்து உதவியிருக்கின்றார்கள். மும்பை டப்பாவாலாக்கள் அமைப்பு மற்றும் மும்பை ரொட்டி பேங்க் இரண்டு அமைப்புகளும் அவர்களின் உணவுத் தேவையினை இன்று மதியத்தில் இருந்து மேற்கொண்டு வருகின்றது. ஒரு கூட்டு சக்தியாக செயல்பட்டால் என்னென்ன நிகழும் என்பதற்கு இவர்கள் ஒரு சான்று.

ஆனால் ஓட்டு அரசியல் நிறுவனமயப்பட்டுப்போன மாநில அரசும், காவேரி மேலாண்மை வாரியத்திற்கே கள்ள மௌனம் சாதிக்கும் , காலங்காலமாக உழைப்புச் சுரண்டலில் விவசாயிகளை நசுக்கும் நடுவண் அரசும் சுரண்டலுக்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான இந்தக் குரலை எப்படியேனும் அடக்கி ஓடுக்கவே முயற்சிக்கும்.1968லேயே கிசான் போலீஸ் உதவியோடு  தஞ்சை கீழ்வெண்மணி விவசாயிகளை அடக்கி, ஒடுக்கிய அதிகார வர்க்கத்தின் கொடுஞ்செயல் இன்றும் நம் நெஞ்சில் நெருஞ்சியாய்க் குத்திக் கிழிக்கிறது.  அன்றும் அரைப்படி நெல் இரிஞ்சூர் கோபால்கிருஷ்ண நாயுடுவுக்கு பெரிய பிரச்சனை அல்ல. சங்கம் அமைத்ததும், ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் கிளர்ந்தெழுந்து கேள்வி எழுப்பியதும்தான் பிரச்சனையாக இருந்தது நிலச்சுவாந்தார்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற அதிகார வரக்கத்திற்கும். அப்படி இந்த மராட்டிய விவசாயிகளின்  போராட்ட வடிவத்தைக் கொச்சைப் படுத்தவும், பலகீனப் படுத்தவும் எத்தகைய முயற்சியிலும் அரசு ஈடுபடும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் முதல் போராடி வந்த நம் விவசாயிகள், நம் மறதியின் பிரதிபலிப்பு. ஆனாலும் வரலாறு ஒன்றை மட்டுமே உறுதியாக நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. எத்தகைய அடக்குமுறைக்கும் அஞ்சாது திரளும் போராட்டத்தை வடிவமைப்பதே விடுதலைக்கான ஒரே வழி. அவ்வாறு பெருந்திரளாய்க் கூடியிருக்கும் மராட்டிய விவசாயிகளின் கனவு நிறைவேறட்டும்,போராட்டம் வெற்றி அடையட்டும். அதுவரை பேராசான் மார்க்ஸ் கூறியதுபோல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்”.

Featured Image credit: Oneindia

Reference:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here