“ஆண்மை ஒழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம்”

                                                                                         -தந்தை பெரியார்.

நாடு முழுவதும் 30 இலட்சம் தொழிலாளர்கள். அனுபவம் குறைந்தவர்களுக்கே பணியில் முன்னுரிமையும், அதிகமான ஊதியமும். நூறு ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை விலைபோகும் பொருட்கள், ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி முதல் ஒரு இலட்சம் கோடி வரை வருமானம் ஈட்டும் சந்தை. எதுவென்று வியப்பாக உள்ளதா? “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று புகழ்ந்தோமே அதே பெண்கள் செய்யும் பாலியல் தொழில்தான் இன்று மாபெரும் சந்தையாக வளர்ந்திருக்கிறது.

இந்த முப்பது இலட்சம் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 18 வயதிற்கும் குறைவான இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள். இந்த அறிக்கையை வெளியிட்டது இந்திய அரசின் ‘குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்’. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDB) தற்போது வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி உலக அளவில் கல்வியறிவற்ற 77.4 கோடி மக்களில் மூன்றில் இரண்டு மடங்கு பெண்கள் என்றும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் 131வது இடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவில் பெண்களின் மனிதவளக் குறியீடு சிறிதும் மேம்பாடு அடையவில்லை என்றும், பெண்களுக்குக் குறைந்த அளவே வேலைவாய்ப்பும், குறைந்தளவு ஊதியமுமே கிடைக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

படம்: india

வடக்கே காளியும், துர்கையும் தொடங்கி தெற்கே பகவதியும், மாரியம்மனும் வரை ஏராளமான உருவங்களைக் கொண்ட பெண்களை வழிபடும் சமூகம்தான் அவர்களுக்கெதிரான அநீதிகளுக்கும், பாலியல் வன்புணர்வுகளுக்கும் வாய்மூடி நிற்கிறது. டிஜிட்டல் இந்தியா இங்கே எத்தகைய மாற்றத்தைச் செய்துவிட்டது அல்லது செய்துவிடத்தான் போகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை சாதியும், மதமும் வளர்த்தெடுத்த அடிமைத்தனத்தின் உச்சம்தான் பாலியல் தொழில். எனவே இந்த நாட்டில் நூற்றாண்டுகளைக் கடந்து கொண்டாடப்பட்டிருக்கும் ‘அனைத்துலக உழைக்கும் மகளிர் தினம்’ உண்மையில் அதற்கான பெருமிதத்தை அடைந்திருக்கிறதா? என்பதை ஆய்வு செய்துதான் ஆகவேண்டும்.

படம்: npr

சமூக வளர்ச்சியை பழங்குடி அல்லது இனக்குழு, நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவச் சமூகம் என முறையே வரையறைப் படுத்துகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இனப் பெருக்கத்தின் மூலமாக விளங்குவதால் சமூக அமைப்பின் ஒழுங்கினை வளர்ப்பதில் பெண்களை முன்னிலைப்படுத்தி தாய்வழிச் சமூகமாக இருந்து வந்தது இனக்குழுச் சமூகம்.

“வரலாற்றுக்கு முந்திய புராதனமான சமூகங்களிலும் பெண்ணுக்குச் செயலூக்கமான பங்கிருந்தது. ஆனால் நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெற்ற பின்பு குடும்பம், பொருளாதாரம், அரசு நிறுவன அமைப்பு ஆகியவற்றில் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலைமையே பெண்ணுக்கான முழு வாழ்வாக அமையலாயிற்று” என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.

நிலவுடைமைச் சமூகத்தின் பிற்பகுதியில் மதங்களும், கடவுளும் தோன்றிய பின்னர் மூட நம்பிக்கைகள் வளர்த்தெடுக்கப்பட்டு பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் உழைப்புச் சுரண்டப்பட ஆரம்பித்த காலத்தில்தான் பாலியல் தொழில் வளர்ந்தது.
நவீன முதலாளித்துவத்தில் அது மேலும் வளர்ந்தது. முதலாளித்துவம் பெற்றெடுத்த குழந்தையாக விபச்சாரத்தைப் பார்க்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். பொருளாதாரச் சுரண்டல் அடிப்படையில் இந்த விளக்கம் பொருந்தும் என்றாலும், மதங்களும் அவை இப்புவியில் விதைத்துள்ள மூட நம்பிக்கைகளுமே பாலியல் தொழிலைப் பெற்றெடுத்தன என்பதே உண்மை.
இந்தியாவில் பாலியல் தொழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டதாகக் கூறுகின்றன வரலாற்றுக் குறிப்புகள். ஆனால் பாலியல் தொழிலுக்கான இன்றைய இந்தியச் சந்தை பிரிட்டிஷ் இந்தியாவில் கிழக்கிந்தியக் கப்பல்களில் பணியாற்றிய தெற்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த டோபாசுகள் (TOPAZ) என்றழைக்கப்பட்ட லஸ்கர்ஸ் (LASKARS) எனப்படும் கப்பல் பணியாளர்களையும், பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களையும் மகிழ்விக்க அப்போது இந்தியாவை ஆண்டுவந்த பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டது.

படம்: forbesindia

ஆரம்பத்தில் ஜப்பானிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பாலியல் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிறகு உயர் சாதியினரின் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்திய பெண்களும் இதில் தள்ளப்பட்டார்கள். அதன் பிறகு வறுமை, கல்வி பெரும் உரிமை மறுப்பு போன்ற பல காரணங்கள் இந்தியப் பெண்களை இதில் ஈடுபடுத்தியது. இந்நிலையில் இந்திய சாதியச் சூழலில் வறுமைக்குப் பிறந்த குழந்தைகளாகவும், கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாகவும், வாழ்வியல் தரம் உயராதவர்களாகவும் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், மிக வெளிப்படையாக அது ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.
முந்தைய காலங்களில் பாலியல் தொழிலாளர்களை ‘தேவதாசி’கள் என அழைத்தனர் இந்தியர்கள்.

பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கி.பி. 1000 ஆவது ஆண்டிற்குப் பிறகுதான் தேவதாசி வழக்கம் உருவாகியிருக்கிறது. பவுத்தம் வீழ்ந்து இந்து மதம் தழைத்தோங்கத் தொடங்கிய காலகட்டத்தில், பவுத்த தலங்களை இந்து கோயில்களாக மாற்றும் வேலை தீவிரமாக நடந்தேறியது. தங்கள் கோயில்களை இழந்த நிலையில் பவுத்தத் தலங்களில் தொண்டாற்றிய பெண் துறவிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு தேவதாசிகளாக்கியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

பிறகு சாதியக் கட்டமைப்பு நிலைக்கத் தொடங்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை அடிமைகளாக்கிவிட்டுப் பெண்களை கோயில்களில் தாசிகளாக்கினர். கோயில்களில் நடனமாடுவதுதான் தேவதாசிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணி எனினும், ஆதிக்க சாதி ஆண்கள் தங்கள் இச்சைகளைத் தீர்க்கவே இப்பெண்களை பயன்படுத்திக் கொண்டனர். பெண்களை இந்து கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கும் தேவதாசி வழக்கம், வெளிப்படையான விபச்சாரமாக வளர்ந்தது. ஆதிக்க சாதி ஆண்களுக்காக விபச்சாரம் செய்வது, கடவுளோடு இருப்பதற்கு சமம் என்ற நம்பிக்கை வளர்த்தெடுக்கப்பட்டது.

படம்: theekkathir

அதனால், பெண்கள் மீதான அப்பட்டமான இந்த உரிமை மீறல் பெரும் பேராகவும், புனிதமாகவும் போற்றப்பட்டது. உயர் சாதி இந்துக்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது நிகழ்த்திய மற்றுமொரு வன்கொடுமைதான் இந்த தேவதாசி முறை. ‘கடவுளின் சேவகர்கள்’ என்ற கவுரவமான பெயரில் தேவதாசிகள் அனுபவித்ததெல்லாம் சாதிய வன்கொடுமைகளையும், பாலியல் துன்புறுத்தல்களையுமே. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களைப் பருவம் எய்தும் முன்பே கோயில்களுக்கு அர்ப்பணித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. அர்ப்பணிக்கப்படும் சிறுமிகளுக்கு கடவுளர்களோடு திருமணம் முடிந்துவிட்டதாகப் பொருள். தேவதாசிப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதியில்லை. பருவம் எய்தியபின் தங்களின் கடைசி காலம் வரையிலும் ஆதிக்க சாதி ஆண்களால் சூறையாடப்பட்டுக் கோயில்களிலேயே மடிந்து முடிந்தது தேவதாசிகளின் வாழ்க்கை.

1934 இல் உருவாக்கப்பட்ட தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம், இந்த கொடிய வழக்கத்தை தடை செய்தது என்றாலும், ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது செலுத்தும் அதிகாரத்தை தடுக்க முடியாததால், தேவதாசி வழக்கமும் தொடர்ந்தது. 1980இல் இச்சட்டம் மறுபடியும் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் அது பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை பாலியல் தொழில் என்னும் படுகுழியில் தள்ளுவதை இன்றுவரை எவராலும் தடுக்க முடியவில்லை.

ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு இந்திய தேவதாசிகளும், பாலியல் தொழிலாளர்களும் மும்பை காமத்திபுராவை நிரப்பினர். இன்று காமாத்திபுராவில் மட்டும் இரண்டு லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. குறுகிய அறைகளின் வாசல்களிலும், தெருக்களிலும் அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை அலங்கரிக்கப்பட்ட விளக்குகளைப் போலக் காத்திருக்கும் பெண்கள் பெரும்பாலும் கடத்தி வரப்பட்டவர்கள். குழந்தையைப் புணர்ந்தால் ஆயுள் நீடிக்கும், நோய் தீரும் என்பது போன்ற வக்கிரமான மூட நம்பிக்கைகளின் பலனாக ஆறேழு வயது சிறுமிகளெல்லாம் சிவப்பு விளக்குப் பகுதிகளில் சிதைக்கப்படுகின்றனர்.

படம்: cinema2news

ஒவ்வொரு நாளும் இப்பெண்கள் சந்திக்கும் உரிமை மீறல்கள் கற்பனைக்கும் எட்டாதவை. மேலும் பால்வினை நோய் வாய்ப்பு குறைவு என்பதாலும் 14 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதனால்தான் முதல் ஒரு சில உறவுகளுக்கு மட்டும் லட்சங்களில் விலைபோகிறார்கள் இளம் பெண்கள். பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள், குறிப்பாகப் பெண்குழந்தைகளின் பாடு திண்டாட்டம்தான். பொது இடங்களில் செல்ல முடியாது, பள்ளி செல்ல முடியாது. வேறு தொழிலுக்கு செல்ல முடியாது. தானும் அதே தொழிலுக்கு வர வேண்டும் அல்லது அந்த தொழிலுக்கு உதவியாக ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட நேரிடும்.

எந்த சமூகத்தில் பெண்களுக்கெதிரான ஒழுக்க விதிகள் அதிகம் இருக்கிறதோ, அந்த சமூகத்தில்தான் பெண்கள் மீதான உரிமை மீறல்களும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. அரபு நாடுகள் முதல் இந்தியா வரை இதே நிலைதான். முதலாளித்துவ சமூகத்தின் ஆகப்பெரிய சந்தைப் பொருளாக பெண்ணின் உடல் இருப்பது பற்றி நாம் பெரிதாக கவனிக்கத் தவறுகிறோம். சமூக அவலங்களையும், அநீதிகளையும் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் புனிதமாக்கும் வேலையைக் காலங்காலமாகச் செய்து கொண்டேயிருக்கிறது இந்தியப் பண்பாட்டுக் கூறுகள். சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அநீதிகளைச் சட்டத்தால் ஒருபோதும் அழித்துவிட முடியாது. பாலியல் தொழில் செய்யும் இந்தியப் பெண்களும் அந்த வகையில் அநீதி இழைக்கப்பட்டவர்களே.

சாதியும், மதமும் அரங்கேற்றுகிற இந்த அடக்குமுறையை, சமூக அவலத்தை டிஜிட்டல் இந்தியா புதிதாகச் செயலிகள் வைத்து வளர்த்தாலும் வியப்பதற்கு ஏதுமில்லை. மாதர் தம்மை இழிவு செய்யும் இந்த மடமையைக் கொழுத்திட சுடரேந்தும் நாள் எந்நாளோ? அனைத்துலக மகளிர் தின வாழ்த்துகள்.

Featured Image credit: fountainink

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here