“தமிழ்நாட்டில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காபியைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம்”

– ஏ.கே.செட்டியார்.

எந்த இனத்தின் வரலாற்றிலும் காலனியாட்சிக் காலத்தில் நடந்த பண்பாட்டுப் பேரழிவுகள் போல் பிரிதொரு காலத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் ஒரு தேசத்தின் அரசியல் மாற்றங்கள் குறித்தும், கோட்பாடுகள் குறித்தும் பொருளாதார மற்றும் சூழலியல் சார்ந்த மாற்றங்கள் குறித்தும் சிந்திக்கும் எவரும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள எவ்வகைப் பண்பாட்டு மாற்றங்களையும் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அதுவே சமூக அழிவிற்கு ஆதாரமாக மாறிவிடுகிறது.  விடுதலை பெற்ற அனைத்துக் காலனியாட்சி நாடுகளிலும் அது பெரிதளவிலான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையிலே எத்தியோப்பியாவில் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு கால்நடை மேய்ப்பரால் எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்ட பானமான காபியும், அதன் வர்த்தகமும் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பண்பாட்டுத் தாக்கங்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

எத்தியோப்பியாவிலிருந்து அரபு தேசங்களின் வழியாக உலகெங்கும் பரவிய காபி பதினேழாம் நூற்றாண்டிலேயே இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அப்படியொரு பானம் இருப்பதே பலருக்குத் தெரியாது. அதோடு இன்றளவும் கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக ஏற்றுமதித் தடத்தில் உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் காபியின் உற்பத்தி இந்தியாவில் குறைவே. நிழவியல் சூழல் ஒரு காரணமாக இருப்பினும் அதன் பயன்பாடு இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் பார்ப்பனர்களால் தீண்டாமை அரசியல் குறியீடாகவே அமைந்தது.

தோட்டப் பயிரான காபி காலனியாதிக்கத்தோடு இணைந்தே வளர்ந்தது. அங்கே நடந்த சுரண்டலும், அதில் கூலித் தொழிலாளர்களாகச் சென்ற தமிழர்கள் பட்ட வேதனைகளையும் சொல்ல எண்ணற்ற பதிவுகள் உள்ளது. இன்று உலகின் பல மொழிகளில் ‘கூலி’ என்ற தமிழ்ச்சொல் இடம்பெற்றிருப்பதன் பின்னணி இதுவே.

படம்: thedesidiaries

பதினேழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த காபி மைசூர் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது அது முற்றிலும் இங்கிருந்த ஐரோப்பியர்களின் பானமாக மட்டுமே இருந்தது. உற்பத்தியின் பெரும்பகுதி இங்கிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேயர் மட்டுமே அருந்தும் பானமாக இருந்த காபி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிராமணர்களும், மேட்டுக்குடியினரும் அருந்தும் பானமாக உருவெடுத்தது.

காபியின் மிக விரைவான பரவலோடு தமிழ்ச் சமூகத்தில் அதற்கு ஒரு நிறுவன அமைப்பும் ஏற்பட்டது. ‘காபி ஓட்டல்’ அல்லது ‘காபி கிளப்’ என்ற இந்நிறுவனங்கள் 1920 முதல் தமிழகமெங்கும் நிலைபெறத் தொடங்கியது. இத்தகைய ஓட்டல்களெல்லாம் பார்ப்பனர்களால் நடத்தப்பட்டன என்பதோடன்றி பொது மக்கள் மனதிலே அவை பார்ப்பனர்களோடு இணைத்தும் பார்க்கப்பட்டன. இன்னும் சொல்லப்போனால் அவை ‘பிராமணாள் ஓட்டல்’ என்றே அழைக்கப்பட்டது.

படம்: nermai-endrum

“பிராமணரால் ஏற்படுத்தப்பட்ட பகிரங்கக் கள்ளுக்கடை” (நவசக்தி 29 அக்டோபர் 1926) என்று அக்காலத்திய நகைச்சுவைப் பதிவு ஒன்று கூறுகிறது. ‘காங்கிரசே தமிழைக் காத்தது’ என்று காங்கிரசு ஏடான ‘பாரத தேவி’ எழுதியபோது, அதன் பார்ப்பனச் சார்பாளர்களைச் சுட்டக் “காபிக்கடை முண்டங்கள்” என்று பாரதிதாசன் எழுதியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
1916களின் பிற்பகுதியில் இதன் சந்தை விரிவாக்கத்தைப் பற்றி விவாதித்திட்ட ஆங்கிலேயே அரசிடம் சூசகமாக மறுத்தவர்கள் அன்றைய ஆங்கிலேயே அதிகார மையத்திடம் நெருக்கமாகப் பணியாற்றிய பிராமணர்கள். ஆனால் 1920களில் தவிர்க்க முடியாமல் ஆங்கிலேயர்களுடன் காபியின் சந்தை விரிவாக்கத்துக்கு இசைந்தபோது ‘கும்பகோணம் காபி கிளப்’ உறுப்பினர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே ‘டபரா செட்’.

அதுவரை காபி அருந்த கோப்பையையும், லோட்டாவையும் பயன்படுத்தி (cup and saucer) வந்த பார்ப்பனர்கள் டபரா செட்டும், மடங்கிய விளிம்புள்ள தம்ளரும் கண்டுபிடித்ததே பிற சாதியினர் வாய் வைத்துக் குடிக்கக் கூடாது என்பதற்காகத்தான். வாய் சூப்பிக் குடிக்கக் கூடிய சமசாதியினரை மட்டுமே வீட்டிற்குள் அனுமதித்து கோப்பைகளில் காபி வழங்கினர். “தமிழ்நாட்டில் மட்டும்தான் காபியைத் தம்ளரில் வழங்கும் பழக்கம் உண்டு. அதற்குக் காரணம் தம்ளரை எச்சில் செய்யாமல் உயரத் தூக்கி அருந்தும் நல்ல பழக்கந்தான்!” (ஏ.கே. செட்டியார் – குடகு.ப.125) என்று வியப்புக் குறியோடு ஏ.கே. செட்டியார் நாசூக்காகக் குறிப்பதும் இதைத்தான்.

படம்: thedesidiaries

காபி என்பது சத்தும், பண்பாட்டு முக்கியத்துவமும் மிக்க கஞ்சி, கூழ் போன்ற பானங்களுக்கு மாற்றாக அவற்றை வெற்றிகொண்டது உணவுக் கலாச்சாரத்தின் ஒரு பரிணாமமே. தமிழரின் உடல் நலத்திற்கு உண்டாகக்கூடிய கேட்டிற்கும், காபி என்ற பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த உற்சாக பானம் எற்படுத்திய கிளர்ச்சிக்கும் இடையேயான ஊசலாட்டத்திருந்து தமிழர்கள் இன்னும் மீண்டபாடில்லை. இன்று பல இடங்களில் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயரில் கடைகளைப் பார்க்கிறோம். 1960 முதல் 1986 வரை கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில் ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்தது. இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். அது காபி கிளப் வழித்தோன்றலில் வந்த பஞ்சாமி ஐயர் காபி ஓட்டலே.

கும்பகோணம் மற்றும் அதன் அக்கம் பக்கத்தில் மட்டுமே தெரிந்திருந்த பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். இதனால் போகுமிடமெல்லாம் ‘குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்’ என்று பேச ஆரம்பித்தார்கள். இதுவே பேச்சு வழக்கில் கும்பகோணம் டிகிரி காபியாகிப் போனது.

படம்: thehindubhaskar

“காவேரி நதியே காப்பியாக ஓடினாலும் ராஜாஜிக்குப் பிரியந்தான்” என்று காந்தியவாதியான ஏ.கே. செட்டியார் குறிப்பிடுகிறார் (குடகு, ப.119)

காபி என்பது அந்தக் காலத்தில் பண்பாட்டுக் குறியீடாகவே இருந்திருக்கிறது. காந்தியடிகளிடம் ஒரு நிருபர் பின்வருமாறு குறைபட்டுக் கொண்டார்:
“சென்னையில் நமது ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றிக்கு மிகப் பெருந்தடையாக இருப்பவர்கள் நம் பெண்களே. உயர் வர்க்கப் பிராமணப் பெண்களில் பெரும்பாலானோர் மேற்கத்திய தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள். நாளொன்றுக்குக் குறைந்தது மூன்று முறைக்கு மேல் காப்பி குடிப்பதை நாகரிகமாகக் கருதுகிறார்கள்” (‘Óf Tamil women’, Young India, 25 ஆகஸ்டு 1981). “எவ்வளவு அமைதியாக, ஆனால் எவ்வளவு செயலூக்கத்தோடு இந்தக் காபி விடுதிகள் சாதி வேற்றுமையைச் சமப்படுத்தி விட்டன! கல்வியோ, சட்டங்களோ இந்த வேலையை இவ்வளவு விரைவாகச் செய்திருக்க முடியுமா? என்று பெருமையடித்துக் கொண்டார் ஜி. ஏ.நடேசன். இந்தப் பெருமைக்குப் பின்னே ஒளிந்திருந்த உண்மை ஒன்றுண்டு. அதாவது இந்த விடுதிகளில் பார்ப்பனர்களுக்கென்றே தனியாக இட ஒதுக்கீடு இருந்தது. குருகுலங்களிலேயே சாதி வேற்றுமை இருந்தபோது காபிக் கடைகளில் கேட்கவா வேண்டும்! காப்பி விடுதிகளில் சாதி வேற்றுமை கூடாதென்று 1933இல் பொள்ளாச்சி நகர்மன்றம் புதிய விதி கொண்டுவந்தபோது, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடக் கூடாதென்று வாதாடியிருக்கிறார் பி.எஸ். சிவசாமி அய்யர்.

படம்: thebetterindia

“கிறித்துவர்கள், முகமதியர்கள், பஞ்சமர்கள் ஆகிய மூவரும் உள்ளே வரக்கூடாதென்று ஓட்டல் முகப்பில் பலகை எழுதித் தொங்கவிட்டிருக்கிறார்கள். இவர்கள் கையில் சுயராஜ்ஜியம் கொடுத்தால் ஊருக்குள்ளே குழாய் நீரையும் பெற முடியாதவாறு பலகை வைத்துவிடுவார்களோ!” என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் அயோத்திதாச பண்டிதர்.

“சர்வகுண்டித் தீர்த்தம்போல் வழங்கும் காபிக் கடையில் கூடச் சமத்துவம் கிடையாது. அங்கும் ‘பிராமணம்’, ‘சூத்திரன்’ பலகை தொங்கிக்கொண்டு, பஞ்சமனும், பெருவியாதிக்காரனும், நாயும் உள்ளே வரக்கூடாதென்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கின்றதே!” என்று கடிந்து கொள்கிறார் பெரியார்.

படம்: flickr

1940களில் இந்தப் பிரிவினை நீக்கப்பட்ட பிறகும், விடுதிகளின் பெயர்களில் ‘பிராமணாள்’ என்ற பெயர் எஞ்சி இருந்ததைக் கண்டித்துப் பெரியார் ஒரு இயக்கம் நடத்தினார். இரயில்வே நிலையங்களில் இருந்த பிரிவினையும் பெரியாரின் போராட்டங்களுக்குப் பிறகே மறைந்தன. 1950 களின் தொடக்கத்தில் சென்னைத் திருவல்லிக்கேணி ‘முரளி கபே’ எதிரில் அவர் நடத்திய போராட்டம் புகழ்பெற்றது. அப்போது “சாதியின் அனுபவ ஆதிக்கமெல்லாம் பெரிதும் உணவிலேதான் வரையறுக்கப்படுகிறது; சாதியை ஒழிக்க வேண்டுமென்கிறவர்கள் அந்த உணவுத் தன்மையில்தான் ஒழிக்கப் பாடுபட வேண்டும். அப்படியிருக்க எதற்காக உணவு விடுதியில் சாதிப்பெயர் போட அரசு அனுமதிக்க வேண்டும்” (குடியரசு 3 ஜூலை 1938) என்று அவர் குரல் கொடுத்தது ஆழ்ந்த மானுடவியல் நுட்பம் செறிந்தது. 1945 ஆகஸ்டு 11 அன்று  சேலம்  மாநகராட்சியில் காங்கிரசு கட்சி  தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காத காபி ஓட்டல்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

1940களில் காபியின் சந்தை நன்கு விரிவுபடுத்தப்பட்டபோது பிராமணர்கள் ஒரு கோரிக்கையை வைக்கின்றனர். அதாவது காபிக்கு மாற்றாக தேநீரை அறிமுகப்படுத்த ஆலோசனை வைக்கின்றனர். அதாவது மேட்டுக் குடியினரின் பானத்திற்கு மாற்றாக உழைக்கும் வர்க்கத்தினருக்கான பானம். ‘Tea market Expansion board ‘ என்று தேநீர் சந்தை விரிவாக்கத்திற்காகத் துவங்கப்பட்ட அமைப்பில் அதிகாரிகளாக இருந்த பிராமணர்கள் திட்டமிட்டே தேநீரை பாட்டாளி வர்க்கத்தினருக்கான பானமாக அறிமுகப் படுத்துகின்றனர். அதற்கேற்றவாறு அமைகிறது அதன் விளம்பரங்களும். அதாவது “குறைந்த விலை! நிறைந்த குணம்!”, “குறைந்த விலை. ஒரு தம்பிடி, ஒரு கப்!” (மணிக்கொடி 2 பிப்ரவரி 1936)

படம்: streetviewphotography

“ஒரு பைசா செலவில் ஐந்து குவளை பருகலாம்!” (Stri- Dharma , ஆகஸ்டு-செப்டம்பர், 1935)
இன்றளவும் தேநீர் என்பது தமிழகத்தில் உழைக்கும் மக்களின் பானமாக விளங்குவதைக் காணலாம். 1940களில் இந்த நிலை நிறுவனமயப் படுத்தப்பட்டது என்றே சொல்லலாம். சென்னையின் பின்னி ஆலைகளின் நிர்வாகம் இந்தியத் தேயிலைச் சந்தை விரிவாக்க வாரியத்துடன் இணைந்து ஆலைத் தொழிலாளர்களுக்கு நாலணா மாதக் கட்டணத்தில் நாளுக்கு ஒரு குவளைத் தேநீர் வழங்கியுள்ளது (அரசாணை எண் 1527 , பொதுப்பணி (தொழிலாளர்), 30 ஜூலை 1943, சென்னை அரசாங்கம்.) இன்றளவும் தெருவோரத்தில் உள்ளதெல்லாம் ‘டீக்கடை’ என்று அழைக்கப்படுவதே இதற்கான சாட்சி.

அதிலும் “சிறந்த காபி பசும்பாலில் மட்டுமே தயாரிக்க முடியும் என்ற சொல்லாடல் இருந்தது. எருமைப் பாலில் தயாரிக்கப்பட்ட காபி கேவலமாகக் கருதப்பட்டது. (நவசக்தி, 2 நவம்பர் 1923).
காபியிலிருந்து தேநீர் வரையிலான இந்தச் சந்தை மிகுதியான வர்க்கப் பாகுபாட்டை விடுதலை இந்தியாவில் வேரூன்ற வைத்துவிட்டது. தீண்டாமை எந்த வகையில் சமூகப் பயன்பாட்டில் இருந்தாலும் அது களையப் படவேண்டியதே. வர்க்கப் பாகுபாட்டின் மூலமே சாதியப் பாகுபாடாகத்தான் இருக்கிறது இந்தியாவில். காபியும், தேநீரும் அதற்கு ஒரு உதாரணம் மட்டுமே. இதை நன்கு புரிந்துகொண்ட முதலாளித்துவமும் பாட்டாளி வர்கத்தினரிடமிருந்த சத்தான உணவுக் கலாச்சாரத்தை அழித்து அதற்கு மாற்றாக உடலுக்குக் கேடு விளைவிக்கின்ற பானங்களையும், உணவுகளையும் மலிவான விளம்பரங்கள் மூலம் சந்தை விரிவாக்கத்தில் சாதித்தனர். முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த உணவுக் கலாச்சாரத்தில் உள்ள வர்க்கப் பாகுபாட்டைக் களைய வேண்டும். அப்போதுதான் பாரம்பரிய சத்தான உணவிற்கு மாற்றாக உள்ள அனைத்தையும் இந்த மண்ணை விட்டு விரட்ட முடியும்..

Featured Image Credit: youtube

2 COMMENTS

  1. I’m not that much of a internet reader to be honest but your sites really nice,
    keep it up! I’ll go ahead and bookmark your site to come back in the future.

    Many thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here