மச்சான் குமாரூ, சேகர், பீர், மாடுலாம் எங்கடா ? ராஜாவோட குரல்ல ஒரு பதட்டம் இருந்துச்சு.

நம்ம எப்பவும் டெண்டடிக்கிற இடத்துல தான்டா இருப்பான்ங்க. ஏன்டா என்னாச்சு? சரி நீயும் அங்க வந்துரு நான் இப்ப அங்க வரேன். போன் அணைக்கப்பட்டது.

ராஜா, குமார், சேகர், பீர், மாடு (ராஜ்குமார்) ஐவரும் சிறுவயது முதல் நண்பர்கள் வெவ்வேறு பிரிவில் பொறியியல் படித்தார்கள். ராஜாவைத் தவிர அத்தனை பேரும் கிடைத்த வேலைக்குச் செல்ல ராஜா மட்டும் பிடிவாதமாய் மூன்று ஆண்டுகள் வேலை தேடிக் கொண்டிருகிறான்.

நண்பன் ரசூலுடைய வெல்டிங் கடைக்கு அருகில் இருக்கும் பாலம்தான் பெரும்பாலும் அவர்கள் அமர்ந்து கதையளக்கும் இடம். அங்கு அவர்களை யாரும் எதுவும் கேட்க மாட்டர்கள் என்பதால் அதுவே அவர்களின் நிரந்தர இடமானது.

ராஜாவுக்கு முன்பே பாலத்திற்குச் சென்ற குமார் அவன் பதட்டமாகப் பேசியதை நண்பர்களிடம் சொல்ல ராஜாவுக்காகக் காத்திருந்தது நண்பர்கள் குழு. எந்தப் பதட்டமும் இல்லாமல் எப்போதும் போல வந்து குமார் முதுகில் ஒரு அடி அடித்து விட்டு அருகில் அமர்ந்து கைபேசியை நோட்டமிட ஆரம்பித்துவிட்டான் ராஜா .

“டேய் ! ஏதோ பதட்டமா எல்லாரையும் எங்க இருக்காங்கனு கேட்ட, இங்க வந்து நீ பாட்டுக்கு போன நோண்டிக்கிட்டு இருக்க!” குமார்தான் முதலில் கேட்டான்.

“இல்ல மச்சான் ஒரு கனவுடா அப்படியே நெஜமா நடக்குற மாதிரி இருந்துச்சு பயந்துட்டேன் அதான்!… உங்ககிட்ட  சொல்லலாம்னு பார்த்தேன், அப்புறமா சரி கனவு தானேன்னு விட்டேன் மச்சான் ஃபிரியா விடு” வாட்ஸப்பில்  எதையோ நோண்டிக் கொண்டே பதிலளித்தான் ராஜா.

“என்ன கனவு மச்சான் தலைவி சன்னி லியோன்-ஆ இல்ல மியா கலீபா வா?” வாய் நிறைய பற்களோடு கேட்டான் பீர்.

“சீ அதெல்லாம் இல்லடா”.

“ஒழுங்காச் சொல்லு, இல்ல ஃபோனப்  புடிங்கித் தூக்கிப்  போட்டுருவேன்  பாத்துக்கோ ” இது சேகர்.

“இல்லைடா, நம்ம தெரு பெட்டிக்கடை செல்வம் பொண்டாட்டி தூக்குல தொங்குற மாதிரி கனவு கண்டேன்டா அதுவும் நாம அங்க நிக்கிறமாதிரி !”.

“ஹா ஹா ஹா அந்தாளு கடன் கேட்டாத் தரவே மாட்டேங்குறான். அதுக்கு அந்தாளப் போட்டுத்தள்ளுனாலும் ஒரு நியாயம் இருக்கு. ஏன்டா அந்தாளு பொண்டாட்டியப் போய் சாகுறமாதிரி கனவு கண்ட” சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தான் ராஜ்குமார்.

“வெட்டியா இருக்குறது பத்தாதுன்னு வெறும் கொரியன் படமா பார்த்தா இப்படித்தான் கனவுவரும். போய் தலைவி சன்னிலியோன் படம் பார்த்துட்டு தூங்கு. கெட்ட கனவு எதுவும் வராது”. நடக்கப் போகும் விபரீதம் புரியாமல் அனைவரும் சிரித்தனர்.

“குடும்பப் பிரச்சனை எதுவுமா ?, லெட்டர் எதுவும் கெடச்சுதா ?, பொண்ணோட பேரண்ட்ஸ் வந்தாதான் சரியான ரீசன் கெடைக்கும் சும்மா தற்கொலைன்னு கேஸ மூடிட முடியாதுயா” இன்ஸ்பெக்டர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார் ஜூனியர் ஆபீசர்.

பெட்டிக்கடை செல்வம் மனைவி தூக்கில் தொங்கிய தகவல் ஏரியா முழுவதும் பரவியது. குமார்தான் நண்பர்களுக்குத் தகவல் சொல்லி அனைவரையும் உடனே வரச் சொன்னான்.

“டேய் ராஜா சொன்ன மாதிரியே செல்வம் பொண்டாட்டி தொங்கிருச்சுடா !” முகம் வேர்க்கக் குமார் சொல்ல மீதம் இருந்தவர்கள் யார் முகத்திலும் ஈ ஆடவில்லை .

“மச்சான் போலீஸ்ல போய் எனக்கு வந்த கனவப்பத்திச் சொல்லவா ?” , தயங்கியபடி கேட்டான் ராஜா .

“என்னது ! கொன்னுடுவேன் உன்ன. ரெண்டு நாளைக்கு முன்னாடி நாங்க அஞ்சு பேரும் அந்த அக்காவத் தூக்குல தொங்கவிடுற மாதிரி  கனவு கண்டோம், அதே மாதிரி அது தொங்கிருச்சுனு சொன்னா நம்மளையும் பக்கத்துலையே தொங்க விட்டுருவானுங்கடா!”  கோபத்தில் கத்தினான் குமார்.

மச்சான் இது வந்து கோ-இன்சிடன்ட்டா அவ்ளோதான் விடு, இத யார்கிட்டேயும் போய்ச் சொல்லாத சரியா. அப்படியே  விட்டுறலாம்டா. பீர் மிகவும் பொறுமையாகச் சொன்னான். எல்லாரும் அரை மனதாகக் களைந்து சென்றனர்.

“மச்சான்… இன்னொரு கனவுடா..”

உன்ன கொன்னேபுடுவேன் பாத்துக்க. சாயந்தரமா டாப்புக்கு வந்ததும் சொல்லு கைகள் நடுங்க ராஜாவின் அலைப்பைத் துண்டித்தான் சேகர்.

“டேய், இந்தக் கனவுல யாரும் சாவுலேல ?” பீர்தான் தயங்கியபடி கேட்டான்.

“சாவுலைனா நான் ஏன்டா உங்ககிட்டச் சொல்லப் சொல்றேன்.”

“இப்போ யார்டா ?” இந்த முறை குமார் கேட்டான்.

“நம்ம கவுன்சிலர் அம்மாடா” .

“டேய் , அது கிழவிடா !” என்றான் ராஜ்குமார் வியப்பாக.

“நான் என்னடா பண்ணேன்? எல்லாரும் என்னையவே திட்டுறீங்க!”

“இதையாவது போய் போலீஸ்ல சொல்லலாம்டா.” ராஜா நிதானமாகச் சொன்னான்.

“ஒன்னும் புடுங்க வேண்டாம். போன தடவ ஏன் சொல்லலன்னு கேட்டா என்ன சொல்லுவா ? இது கண்டிப்பா நடக்காது . அப்படி  நடந்தாப் பிறகு  பாத்துக்கலாம் . ஆமா எப்படி அந்தக் கிழவி செத்துச்சு ?”

“என்னையா இந்த ஏரியாவுல வாரத்துக்கு ஒரு எழவு விழுது . கேஸ் அடுப்பு வெடுச்சு செத்துருக்கறாங்க சார். யார்மேலயும் எந்தச் சந்தேகமும் இல்ல. அவுங்க பையன், பொண்டாட்டியோட மாமியார் வீட்டுக்குப் போனப்ப நடந்துருக்கு. அவர் பேர்லதான் சொத்து எல்லாம் இருக்கு மோடிவ் எல்லாம்  ஒன்னும் இல்ல. பக்கத்துல விசாரிச்சுட்டோம். மாமியார், மருமக பிரச்சனையும் இல்ல”.

“ஆகத் தெளிவாவே ‘ஆக்சிடென்ட் டெத்’ அப்படிங்கறதுதான உங்க முடிவு. பின்னாடி ஏதும் பிரச்சனை வந்துடாம பார்த்து ஃபார்மாலிட்டி  எல்லாம் முடுச்சுட்டு கேச முடிங்கயா” என்று கூறிவிட்டு வேறு ஏதோ ஒரு வழக்கின் நினைவில் எழுந்து சென்றார் இன்ஸ்பெக்டர்.

ஐந்து பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்களே தவிர யாரும் பேசவில்லை. “மச்சான் ‘பைனல் டெஸ்டிநேசன்’ படத்துல  வரமாதிரியே ஏதோ சக்தி உனக்கு வந்துருச்சுன்னு நினைக்கிறேன்” என்று ராஜ்குமார் சொன்னதும் “டேய் ‘அழகிய தமிழ்மகன்’ விஜய்டா” எனச் சொல்லிவிட்டு ராஜாவின் கன்னத்தைக் கில்லி முத்தம் கொடுத்தான் பங்காளி சேகர்.

“டேய் , லூசுப் பக்கிகளா! உங்களுக்குக் கொஞ்சங்கூட பயமா இல்லையா அவன் சொன்ன மாதிரி ரெண்டு பேர் செத்து போய்டாங்கனு எனக்கு வயித்த கலக்குது நீங்க என்னன்னா சினிமா பேராச் சொல்லி விளையாடிக்கிட்டு  இருக்கீங்க? ” என்று வழக்கம் போலவே ஆத்திரத்தில் கத்தினான் குமார்.

இந்த சலசலப்புக்கு நடுவில் மெல்ல “நம்ம என்ன பண்றது ?” என்று கேட்டான் ராஜா.

“எனக்கு ராஜா மேலதான் சந்தேகமா இருக்கு” என்று குமார் சொன்னதும் எல்லோரும் ராஜாவையே பார்த்தார்கள்.

“டேய், நான் முன்னாடியே போலீஸ்கிட்ட போலாம்னு சொன்னேன். நீதான் கேக்கல. அதுக்குனு நீதான் கொன்னணு நான் சொல்லவா !” என்று ராஜா சொன்னதும் மூவரும் குமாரைப் பார்த்தனர்.

“சரிடா, நமக்குள்ள எதுக்குச்  சண்டை. மச்சான் கிட்ட இருக்க பவர வச்சு எப்படியாவது பெரிய ஆளாகுற வழிய பார்ப்போம்”, என்று சொல்லிவிட்டுச்  சிரித்தான் பீர். எப்படியோ போய்த் தொலைங்க நான் வரல இந்த ஆட்டைக்கு”, என்று சொல்லிவிட்டுக் குமார் சென்றுவிட்டான்.

“மச்சான் உன்னோட அடுத்த கனவுல எங்க அப்பன போடுற மாதிரி பாருடா. தொல்ல தாங்கல”  என்று ராஜ்குமார் சொன்னதும் நால்வரும் சிரித்தனர்.

“மச்சான், டேய்! தயவு செஞ்சு கனவு வந்துச்சுன்னு மட்டும் என்கிட்ட பேசாத”. ராஜாவின் போனை எடுத்தவுடன் ஹலோ கூடச் சொல்லாமல் முதல் வார்த்தையாக இதைத்தான் சொன்னான் குமார்.

“இல்லடா இருபது நாளா எந்த கனவும் வரமா நிம்மதியா இருந்தேன். ஆனா இந்தக் கனவா உங்கிட்டச் சொல்லித்தான் ஆகணும் மச்சான்”.

“ஏன்டா பயமுறுத்துற, யாருக்கு என்னாச்சு இந்தக் கனவுல?

“மச்சான் உங்க அம்மாவ யாரோ கத்தில குத்துற மாதிரி கனவு கண்டேன்டா”, பாதி வார்த்தையை முழுங்கியபடி சொன்னான் ராஜா .

“ங்கோத்தா உன்ன நெசமாலுமே கொல்லப் போறேன் பாரு!”

“டேய் , அம்மாவ பத்திரமா பார்த்துக்கோனு சொல்லத்தான்டா  கூப்பிட்டேன். என்ன ஏன்டா திட்டுற. அவுங்க எனக்கும் அம்மாதானேடா ?”

“சரி ஃபோன வை “.

மூன்று நாட்கள் வெறித்தனமாக வீட்டைச் சுற்றி வந்தான். அம்மாவுக்கே  தெரியாமல் அவர்களைப்  பின் தொடர்ந்தான் குமார். எதுவும் நடக்கவில்லை.

நான்காம் நாள் இரவு, அடுப்படியில் ஏதோ சத்தம் கேட்டு ஓடிப்போய்ப் பார்த்த குமாருக்கு அதிர்ச்சி. கத்தியில் குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவனது அம்மா கிடந்தார்கள். யாரோ ஓடுவதுபோல் தெரிய பின்புறம் ஓடிச்சென்றான் குமார். கழுத்தில் ஆழமாக ஒரு கத்திக் குத்து. கண்கள் மயங்கச் சரிந்தான் குமார். கடைசியாக அவன் காதில் விழுந்த வார்த்தை . “நான்தான் அப்பவே போலீசுக்குப் போவோம்னு சொன்னேன்ல”.

“டேய், எந்திரிடா ராத்திரி முழுக்க லேப்டாப்ல கண்ட படத்தையும் பார்க்க வேண்டியது, 11 மணிவரை தூங்க வேண்டியது. தன் அம்மா எழுப்பியதும் திடுக்கிட்டு எழுந்தான் ராஜா.

“மச்சான், மச்சான் வேகமாக ராஜாவின் அருகில் வந்தான் ராஜ்குமார். நீ சொன்ன மாதிரியே அந்தப் பெட்டிக்கடை செல்வம் பொண்டாட்டி தூக்குல தொங்கிருச்சுடா”.

கைகள் நடுங்கத் தன் கைகளில் ஏதும் ரத்தக் கரை இருக்கிறதா என்று பார்த்தான் ராஜா ….

Featured image credit: wiki

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here