அடிமைத்தனமான, இழிவான வேலைகளைச் செய்யும் மக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்தது ஆதிக்கச் சமூகம். ஜப்பானிலுள்ள புராகுமின்கள், அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவிலுள்ள கறுப்பின மக்கள், ருவாண்டாவைச் சேர்ந்த ஹுது மற்றும் துவா இனத்தவர்கள் என்று உலகெங்கிலும் பல்வேறு வகையான மக்கள் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டு வந்தாலும் இந்து மதத்தின் சாதிய அடிப்படையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவது இந்தியாவில் மட்டும்தான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூக அமைப்பு முறையைக் கொண்டு இந்து மதத்தின் புனித நூல்களுள் ஒன்றான ரிக் வேதம் பிராமணர்கள், சத்திரியர்கள், வைஷ்யர்கள், சூத்திரர்கள் என்று நான்கு வர்ணங்களாக முறையே மக்களை வகைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மனு தர்மமும் அதை வளர்த்தெடுத்தது. ஒவ்வொரு வர்ணங்களுக்குள்ளும் நூற்றுக்கணக்கான சாதிகள் இருக்கிறது. இந்த நான்கு வர்ண வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு சூத்திரர்களுக்கும் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்தான் தீண்டத்தகாத இனத்தவர்கள். இவர்கள் சூத்திர இன ஆண்களுக்கும், பிராமணப் பெண்களுக்கும் களங்கப்பட்ட உறவின் மூலம் பிறந்தவர்களாக ஆரம்பகால பௌத்த இலக்கியங்கள் கூறுகிறது. வர்ண வேறுபாடுகளுக்கு இணையான புனித நூல்களுக்கு அப்பாற்பட்டு ஏற்படுத்தப்பட்ட பிழவுதான் சாதிகள் (பிறப்பால் என்று பொருள்) .

மகராஷ்டிராவில் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தை வழிநடத்தியவர்களுள் மிக முக்கியமானவரான ஜோதிராவ் ஃபூலே தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து 1873 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி உருவாக்கிய ‘சத்திய சோதக் சமாஜ்’ என்ற அமைப்புதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமைகளை மீட்பதற்கான முதல் முயற்சியாகக் கருதப்பட்டது. ‘உடைந்து போனவர்கள்’ அல்லது ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ என்று பொருள்படும் ‘தலித்’ என்ற மராத்திச் சொல்லை அறிமுகப்படுத்தியவரும் இவரே. அதன் தொடர்ச்சியாகத்தான் எழுபதுகளில் மராட்டியத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், இந்திய வரலாற்றில் சாதி முறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில் சிலரும், தங்களைத் ‘தலித்’ என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கினர். அதிலிருந்துதான் இந்தப் பெயர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலைத்துவிட்டது என்று ‘பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம்’ கூறுகிறது.

இந்து மதத்தின் சாதி வேறுபாடுகளான நான்கு வகை வர்ண வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இவர்கள் ‘பஞ்சமர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், அரசியல் அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் சுரண்டப்படும் மக்கள் ஆகியோரைப் பற்றிய நாவல், சிறுகதை, கவிதை, சுயசரிதை போன்ற இலக்கிய வகைகளே தலித் இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பிறகு 1927 இல் அம்பேத்கரின் தலைமையில் மனுதர்ம விதிகள் கூறும் தீண்டாமைக்கு எதிரான இயக்கம் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது. அதன் விளைவாகவே மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் தலித் மக்களைப் பற்றிய இலக்கியங்கள் ‘தலித் இலக்கியம்’ என்ற பெயரில் உருவாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வகையிலே 1978 ஆம் ஆண்டு தயா பவாரால் எழுதுப்பட்டு வெளியான பலூட்டா மராத்தி மொழியின் முதல் தலித் சுயசரிதை நூல்.

சாதி என்னென்ன விதமாக இருக்கிறது, அது எந்தெந்த வடிவங்களில் இயங்குகிறது, நடைமுறை வாழ்வில் அதை எவ்வாறெல்லாம் செயல்படுத்துகிறார்கள் என்பதை, காலங்காலமாகச் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை மட்டும் அது எப்படியெல்லாம் வதைத்து வந்திருக்கிறது என்பதைச் சொல்கிற இலக்கியமே தலித் இலக்கியம். தனது சுயசரிதை மூலம் சமூகத்தால் தாழ்த்தப்பட்ட தனது இனமான மகர்களின் சமூக அடையாளத்தைத் தெளிவாகப் புரிய வைக்கிறார் தயா பவார். மாடுகளின் தோல்களை உரிப்பது முதல் இறந்த உடல்களைப் புதைப்பது வரை `செய்துவரும் மகர் சமூகம் பெரும் அங்கீகாரங்கள், அதன் உணர்வுகள், மிகவும் ஆழமாக அதனுள் வேரூன்றிய ஆணாதிக்கம் முதலிய பலவற்றையும் விரிவாகக் கூறுகிறது பலூட்டா.

படம்: commonfolks

துப்புரவுப் பணி செய்து, சாக்கடைகளில் இறங்கித் தூய்மைப்படுத்தி, நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், இரயில் தண்டவாளங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடும் மக்களைப் பார்த்து தூய்மையற்றவர்கள், தீண்டத் தகாதவர்கள் என்று கூறுவது உயிர்நீர் சுரக்கும் தாயின் மடியைப் பார்த்து முடை நாற்றம் வீசுகிறதென்று களங்கப் படுத்துவதற்குச் சமம்.
ஆளுமைப்படுத்தும், பொருளாதார முன்னேற்றமடையச் செய்யும், தனியுரிமையைக் கைப்பற்றி அனைத்துச் சுகபோகங்களையும் அனுபவிக்கும் அதிகாரம்தான் சாதியையும், தீண்டாமையையும் வளர்க்கிறது. இந்த அதிகார வர்க்கத்தினரின் ஒடுக்குமுறைகளை அரசியல் மற்றும் சட்ட விதிமுறைகளில் ஏற்படுத்தப்படும் மாறுதல்கள் ஓரளவிற்குக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் இந்த அதிகாரம்தான் ஒரு பெண் சாதி மறுப்பை ஏற்று தாழ்த்தப்பட்ட இளைஞனைத் திருமணம் செய்கையில் அவளைக் கௌரவக் கொலை செய்யத் தூண்டுகிறதென்றால், இந்த அதிகாரம்தான் சகமனிதனை மலம் அள்ளச் சொல்லுகிறதென்றால், இந்த அதிகாரம்தான் சக மனிதனின் பிறப்புரிமைகளைத் தட்டிப் பறிக்கிறதென்றால் அதன் பொறாமைக்கும், பேராசைக்கும், அதற்காகவே போதிக்கப்படும் மத நம்பிக்கைகளுக்கும் பலியாகாமல் இருக்க அதற்கான மாற்றுக் கருத்தை எழுத்து வடிவிலே வரலாற்றுப் பதிவாக்குவது நமது தலையாய கடமையாகிறது.

ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் முந்தைய மற்றும் ஆதி கால வரலாற்றிற்கான கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து தீண்டாமை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்து பதிவிடத் தவறிவிட்டார்கள். எனவே கல்வியும், வேலைவாய்ப்பும், அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு சமூக அவலங்களுக்கு ஆட்படுத்தப்படும் பெரும்பான்மைச் சமூகத்தின் இழிநிலை இலக்கியப் பதிவாக்கப்பட்டதில் தயா பவாரின் இந்த பலூட்டா ஒரு முன்னோடி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு” தனது அறிவுத் திறனையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. அடிப்படைக் கட்டமைப்பில் சாதியின் பெயரால் சக மனிதருக்கு மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி காப்பற்றப்பட வேண்டும் என்ற சீரிய சிந்தனையோடு எழுதப்பட்டது. அந்த வகையிலே இன்றைய காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ற பண்பாட்டு வளர்ச்சியில் ஒடுக்கப்பட்ட மக்களின் சக்தியும், படைப்பாற்றலும் முழுமையாகப் பயன்படுத்தப்படவும், அவர்களுக்கான சுயமரியாதையை மனித நேயத்தோடு காப்பாற்றவும் ‘பலூட்டா’ போன்ற படைப்புகள் வழிவகுக்கும்.

‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்பாலொருவன்’ என்று புறநானூறும், ‘வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மலையும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கில்லை’ என்று தொல்காப்பியமும், ‘மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும் விழிக்கொரு பகட்டும் ஆய்’ என்று குற்றாலக்குறவஞ்சியும், ‘நால்வகைப்பாவும் நால்வகைக்குலத்தின் பால் வகைப்படும்’ என்று சிலப்பதிகாரமும், முற்போக்குச் சிந்தனையோடு ‘பறைச்சியாவது ஏதடா பனத்தியாவது ஏதடா இறைச்சித்தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ’ என்று சிவவாக்கியரும் சாதிய வேறுபாடுகளை அடையாளம் கண்டு பதிவிட்டிருந்தாலும் 1990களுக்குப் பிறகுதான் முழுமையான தலித் இலக்கியம் வளரத் தொடங்கியது. கோவை விடியல் பதிப்பகத்தின் வெளியீடுகளை ஒற்றைத் தளத்தில் சுருக்கிக் கூறிவிட முடியாது. 1990களில் தொடங்கி தலித் சொல்லாடல்களின் பயணம் விடியல் வெளியீடுகளின் வழியேதான் நீண்டு கொண்டிருக்கிறது.
அ.மார்க்ஸும், ரவிக்குமாரும், ஆசிரியர் குழுவில் இருந்த நிறப்பிரிகையின் பதிப்பு, அம்பேத்கர் சிந்தனைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு, பிறமொழி தலித் படைப்புகளில் குறிப்பாகப் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் கன்னடத் தலித் இலக்கியங்களை வெளியிட்டு முன்மாதிரிகளை உருவாக்குதல், பின் நவீனத்துவ விமர்சன நூல்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், கொஞ்சம் தமிழ் தலித் படைப்பிலக்கியங்களின் அச்சாக்கம் என விடியல் பதிப்பகம், இந்தப் பத்தாண்டுகளில் தமிழ் வாசக மூளைக்குள் நுழைத்தவை பலதரமானவை. அந்த வரிசையில் விடியல் பதிப்பகம்  வெளியிட்டிருக்கும் இந்நூல் அடிமையாக உழைத்து அறுவடையில் பங்கு பெறுவதை உரிமையாக நினைக்கும் மகர் சமூகத்திற்கு உண்மையில் அதுதான் உரிமையா? என்பதையும், அதன் அடிப்படை உரிமைகளைப் பெறுகிறதா? போன்ற கேள்விகளை ஆராய வைக்கிறது இந்நூல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here