ஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்

0
506
views
படம்: You tube

சிங்கம் முதல் சிற்றெறும்பு வரை பசித்திருக்கச் செய்துவிட்டு அடங்காத பெரும்பசியில் காட்டையே வேட்டையாடி வந்த இரண்டு ஒநாய்கள் கூட்டம் இப்போது எஞ்சியிருக்கும் அத்தனையும் தனக்கே சொந்தம் என்ற பேராசையில் மோதிக் கொள்கிறது. அதுதான் அமெரிக்கா சீனா இடையே நடந்துவரும் வர்த்தகப் போர். உலகமயமாக்கலின் பின்னால் உலகையே தனது வர்த்தகச் சந்தைக்குள் பீடிக்கச் செய்து சுரண்டி வரும் அமெரிக்காவும், அதற்கு நிகரான முதலாளித்துவச் சந்தையை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தில் அதற்கும் மேலே வளர்ந்துவிட்ட சீனாவும் இப்போது நேரடியாக மோதத் தொடங்கியிருக்கிறது.

ஆம் கடந்த சில தினங்களுக்கு முன்பு 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10இல் இருந்து 25 சதவிதமாக அதிகரிக்கப் போவதாகவும், அது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சீனாவில் தயாரிக்கப்படும் அமெரிக்கப் பொருட்களுக்கான உற்பத்தி வரியை அதிகரித்தது சீனா. தொடர்ந்து கடந்த செப்டம்பர்  மாதம் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் இறக்குமதி வரியை விதித்தது. பின்னர் அமெரிக்காவின் இந்த இறக்குமதி வரி உயர்வுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரியைக் கணிசமாக உயர்த்தியது.

இந்த வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக கடந்த டிசம்பர் மாதம், இருநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த திடீர் அறிவிப்பு அமைந்திருக்கிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களின் வரி உயர்த்தப்படும் என்று சீனாவும் அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட கடுமையான இழப்புகளுக்குப் பின் ஏகாதிபத்திய நாடுகள் ஜனநாயக அரசுகளைக் கட்டமைக்கும் பாதையில் அமெரிக்க ஆதரவு வலதுசாரி நாடுகள், சோவியத் ஆதரவு இடதுசாரி நாடுகள் என்று பிளவுபட்டு நின்றது. வலதுசாரி நாடுகளின் சூழ்ச்சியால் சோவியத் ஒன்றியம் வீழ்த்தப்பட்ட பிறகு வலதுசாரி முதலாளித்துவ ஜனநாயகம் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வலுப்பெற்றது. அதுவரை தன்னை ஒரு பொதுவுடைமைவாத அரசாகக் கட்டமைத்துக் கொண்ட சீனாவும் அங்குள்ள மூலதன முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்க ஆரம்பித்து வலதுசாரி ஜனநாயகப் பொருளாதாரக் கொள்கையை ஏற்று உலக வர்த்தகத்தில் அமெரிக்காவிற்குப் போட்டியாகத் தன்னை உருவாக்கிக் கொண்டது.

கடந்த 10 அண்டுகளில் உலக வர்த்த்கத்தில் சீனாவின் பங்கீடு என்பது அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. அமெரிக்காவே மொத்தம் 540 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. அதாவது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவின் இறக்குமதிப் பட்டியலிலும் முதலிடம் வகிக்கும் நாடு சீனாதான் என்ற அளவிற்கு சீன உற்பத்தி சர்வதேசச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. உலகம் முழுவதிலுமிருந்தும் மூலப்பொருட்களை வாங்கிப் பொருட்களைத் தயாரித்து விற்பதில் உலகிலேயே ஜெர்மனிக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று உலகளாவிய வர்த்தக அமைப்பு (WTO) தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் சீனாவின் ஆக்கிரமிப்பால் நிகழும் அமெரிக்க டாலரின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் என்றுமே அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலே இயங்கிட வேண்டும் என்றும் விரும்பியே சீனா மீது இத்தகைய வர்த்தகப் போரைத் துவங்கியிருக்கிறது அமெரிக்கா.

படம்: scmp

மேலும் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கும் இதேபோன்ற வரி உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு நாடுகளிடையிலான வர்த்தகப் போரால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் பாதிப்படைந்துள்ளன. இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை எனவும் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் டாப் 5 பொருட்கள் மற்றும் மதிப்பு

உலோகங்கள்          –    10.5 மில்லியன்

மருந்து வகைகள்   –    5 மில்லியன்

இயந்திரங்கள்         –   3.7 மில்லியன்

வாகனங்கள்            –    2.8 மில்லியன்

ஆடைகள்                –    2.5 மில்லியன்

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் டாப் 5 பொருட்கள் மற்றும் மதிப்பு

மின்னனு உபகரண்ங்கள்  – 23.3 மில்லியன்

இயந்திரங்கள்                      – 13.6 மில்லியன்

கரிம ரசாயணங்கள்           – 8.5 மில்லியன்

நெகிழி                                   –  2.7 மில்லியன்

இரும்பு                                  –  1.7 மில்லியன்

மேலும் இருநாடுகள் இடையேயான வர்த்தகப் போரைத் தொடர்ந்து முதல் முறையாக ஆசிய – பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு (Asia-Pacific Economic Cooperation) உச்சிமாநாடு, அதில் பங்கேற்ற தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்படாமலேயே முடிவடைந்துள்ளது. தலைவர்களின் கூட்டறிக்கை இல்லாமல் இம்மாநாடு நிறைவடைவதும் இதுவே முதல் முறை.

அமெரிக்க வணிக அமைப்பின் முன்னுரிமைப் பட்டியலில் இருக்கிறது இந்தியா. மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியப் பொருட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவது அமெரிக்காவிற்கு (48.6%). அதேபோல இந்தியாவிற்குள் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது சீனப் பொருட்கள் (68.06%). மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி சீனாவிலிருந்து இந்திய இறக்குமதியின் அளவீடு அமெரிக்க மதிப்பின் படி 68 மில்லியன் டாலர் ஆகும். ஆக இந்தியாவோடு வணிகத் தொடர்பில் இருக்கும் முதன்மையான இரண்டு உலக நாடுகளும் மேற்கொண்டுவரும் இத்தகைய பொருளாதார நடவடிக்கையால் நேரடியாகவே பாதிக்கப்படும் நாடு இந்தியா.

சீனாவைக் கட்டுப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் இந்திய உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றபோதும் அமெரிக்காவின் இத்தகைய வரி உயர்வு தொடர்ந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதும் நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்புகளால் பலனடையப் போவது என்னவோ இரண்டு நாடுகளைச் சேர்ந்த மூலதன முதலாளிகளாக மட்டுமே இருக்க முடியும். அதோடு ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்திய அரசு மேற்கொண்ட அதிரடிப் பொருளாதார நடவடிக்கைகளான பண மதிப்பிழப்பும், ஜிஸ்டி வரி விதிப்பும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெரிதும் பாதித்திருப்பதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா சீனா இடையேயான இந்த வர்த்தகப் போர் 17 வது நாடாளமன்றத் தேர்தல் முடிந்து அமையவிருக்கும் புதிய அரசுக்கு பெரும் சவாலாகவே இருக்கப் போகிறது. அதோடு இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவைச் சந்திக்கும் அபாயமும் உள்ளது.

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நிதிப் பற்றாகுறையை சமாளிக்கவும் உலக வங்கியிலிருந்து இந்தியா பல்லாயிரம் கோடி டாலர்களைக் கடனாக வாங்கியிருப்பதால் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்து அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கப்போகிறது இந்தியா. எனவே அமைந்திருக்கும் புதிய அரசுக்கு வலிமையான மற்றும் உறுதியான பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதும் பெரும் சவாலே!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here