பகிரவும்

ஒவ்வொருவர்  வங்கிக் கணக்கிலும்  15 இலட்சம், 70 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, 5 இலட்சம் வரை வருமான வரி நீக்கம் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்த பாஜகவின் இறுதியாண்டு நிதிநிலை அறிக்கையை இந்த நாடே பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஒருபுறம் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்று ஆறு மாதத்திற்கொரு முறையான அதிர்ச்சிகளில் முழ்கியிருந்த மக்கள் புதியதாய் ஏதாவதொரு அதிர்ச்சியை இந்த பட்ஜெட்டில் கொடுத்துவிடப் போகிறார்களோ என்ற அச்சத்தில் இருக்க, அப்படியான எந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பையும் வெளியிடவில்லை நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ஆனால் பட்ஜெட்டே அதிர்ச்சியானதாகத்தான் அமைந்தது. தங்களை மீட்டெடுக்கும் என்று காத்திருக்கும் மக்களுக்கு ஒரு புளியங்கொம்பு கூட வீசப்படவில்லை.

ஒரு பட்ஜெட்டை அது பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தும், உடனடியாக நாம் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளை அது எப்படி அணுகுகின்றது என்பதை வைத்தும் மதிப்பிடுவார்கள். அதாவது ஒரு பட்ஜெட்டை அதன் மேக்ரோ பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் மதிப்பிடுவது. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சி, பகிர்வு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை என்ற மூன்று மேக்ரோ பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு இந்த பட்ஜெட் எந்த அளவு உறுதுணையாக இருக்கும்? என்பது கேள்விக்குறியே என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

படம்: digitallearning.eletsonline

பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து வந்துள்ளது. அதற்கு இந்த வருடமும் விதிவிலக்கல்ல. அதற்குமேல் இந்த பட்ஜெட் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல்  அந்தச் சரிவின் வேகத்தை அதிகரித்து விட்டதோ? என்ற அச்சத்தையும்  பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது 2017-2018 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் என்று மத்திய புள்ளியல் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது இந்த அரசின் மூன்றாண்டு ஆட்சியின் மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.

ஒட்டுமொத்த மத்திய அரசின் வருவாய் செலவு 2017-2018 க்கான பட்ஜெட் மதிப்பீட்டீல் 85.6 சதவீகிதமாக கணக்கிடப்பட்டிருந்தது. அது 2017-2018 க்கான திருத்திய மதிப்பீட்டில் 87.7சதவீகிதமாக உயர்ந்துள்ளது. வருவாய் செலவில் வட்டியின் சுமையும் 5.30 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒட்டு மொத்த வருவாய் செலவில் வட்டியின் பங்கு மட்டும் 27.30 சதவிகிதமாகும். அதாவது இந்தியா ஆண்டுக்கு ஐந்து லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாயை வட்டியாக மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வட்டியே இவ்வளவு என்றால் கடன் எவ்வளவு இருக்கும். நாடே வட்டி கட்டிக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? என்று பெரும் அச்சம் தொற்றிக்கொள்கிறது.

நடப்பு நிதியாண்டில் தனது ஒட்டுமொத்த செலவுகளுக்காக 5.95 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நாடு கடன் வாங்குகிறது. அந்த 5.95 லட்சம் கோடியில் 5.31 லட்சம் கோடி, அதாவது வாங்கும் மொத்த கடனில் 90 சதவிகிதம் வட்டிக்கே பயன்படுத்தப்படுகிறது. நம் நாடு கடன் வாங்கி வட்டிகட்டிக் கொண்டிருக்கிறது.

வருவாய்ப் பற்றாக்குறையும் 2.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, அரசு தனது அன்றாட செலவுகளை சந்திக்க 4.39 லட்சம் கோடி அளவிற்கு கடனை உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக GDPயில் 44.7 சதவிகிதம் என்று சென்ற பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட ஒட்டு மொத்த கடன்களின் சுமை இந்தத் திருத்திய மதிப்பீட்டில் 50.1சதவிகிதமாக உயர்ந்தள்ளது. இதனால் விலைவாசி உயரும் மற்றும் வட்டி விகிதம் உயரும். இவை தனியார் முதலீட்டை மேலும் வீழ்ச்சியடையச் செய்து, இனிவரும் ஆண்டுகளில் இந்த பட்ஜெட் பொருளாதார மீட்புக்கு எந்த வாய்ப்புகளும் இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் இனி நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களை இது எந்த அளவிற்கு பாதிக்கும் என்றும் பார்க்க வேண்டும்.  மக்களின் ரத்தத்தை உறிஞ்ச அனுமதிக்கும் ஒழுங்குமுறையாக மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் இருக்கிறது. நாட்டின் முக்கியத்துறைகளான சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகியவை பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியையும் அடையவில்லை. பிரதான பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல், அறிவிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன என்று முன்னாள் நிதியமைச்சரும், பொருளாதார வல்லுனருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் இது போன்ற நிதிப் பொறுப்பற்றத் தன்மையை கட்டுப்படுத்தவே 2003ஆம் ஆண்டில் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டு நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறைக்கும் இலக்குகள் வகுக்கப்பட்டது. இந்த அரசு அந்த இலக்குகளைத் தூக்கி எரிந்ததோடு அல்லாமல் வருவாய் நிதிப்  பற்றாக்குறைக்கு இனி எந்த இலக்கும் தேவையில்லை என்றும் நிதிப்  பற்றாக்குறைக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கு அவசியமில்லை என்றும் கூறி இந்த நிதிப்  பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தையே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.

இது இந்தியப்  பொருளாதாரத்தை பாதிப்பதோடு அல்லாமல் நமது பொருளாதாரத்தின் மீது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தகர்த்து பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கும் காரணமாகியுள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டச் செலவீடு கடுமையாக குறைக்கப்பட்டதோடு அல்லாமல் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவே குறைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டின் அளவே 22.18 லட்சம் கோடி ரூபாய் என்பதை மறந்து பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் வழங்க 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குவதாகக் கூறுகிறது.சென்ற பட்ஜெட்டில் 10 இலட்சம் கோடி கடன் வழங்கத் திட்டம் என்று அறிவித்த பின்னர்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், அரை நிர்வாணக் கோணத்தில் டெல்லியில் பிரதமர் வீட்டு வாசலிலேயே போராடியதும் நடந்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த விவசாயிகள் போராட்டம்.
படம்: the wire

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இந்தச் சூழலில்தான்  மனிதவளர்ச்சிக்கான துறைகளுக்கு வெறும் அறிவிப்புகள் மட்டுமே மிஞ்சியுள்ளது (அதுவும் நமபத்தகுந்ததாகவே இல்லை). ஒட்டுமொத்த கல்வித்துறைக்கு இந்த அரசு அடுத்த நான்கு ஆண்டுகளுக்குச் செலவு செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது 1 இலட்சம் கோடி. அதாவது ஒரு மாநிலத்திற்கு ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 700 முதல் 750 கோடி வரை. இத்தொகை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆரம்பப் பள்ளிகளின் கழிவறைக்குப் பினாயில் வாங்கக் கூடப் போதாது. அதோடு இவர்களது ஆகப்பெரிய சாதனையாக அறிவித்திருக்கும்  மருத்துவக் காப்பீடு  (தலா 5 இலட்சம் என்று பத்துகோடி குடும்பங்களுக்கு) திட்டம் பயனாளர்களைச் சென்று சேரும் முன்னரே தேர்தல் வந்துவிடும். அப்படியே சென்றாலும் 1% வெற்றியே சந்தேகம்தான்.

அடுத்து மிக, மிக முக்கியமாக நாட்டின் வளர்சிக்குக் காரணமாக விளங்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு. “நாட்டில் வேலையின்மைப் பற்றி பேசுகிறார்கள். இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கிறார்கள். அந்த வருமானத்தையே வேலைவாய்ப்பாகக் கருத வேண்டும்” என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியே கூறியிருந்தார். அதோடு இந்த வகைத் தொழில்களை ஊக்குவித்தது முத்ரா கடன் திட்டத்தின் வெற்றி எனவும் அந்தப் பேட்டியில் அவர் கொண்டாடுகிறார்.

மோடியின் இப்பேச்சுக்கு நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. பெங்களூரு நகரில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, இளைஞர்கள் பட்டமளிப்பு ஆடையுடன் பேருந்துகளில் பக்கோடா விற்பனை செய்து மோடியின் பேச்சைக் கண்டித்து தங்களது எதிர்ப்பினைக்  காட்டினர்.

படம்: earlytimes

நம் நாட்டில் இளைஞர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள நமது ஊரில் எத்தனை இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தால் போதும். இப்படி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை எடுத்தால், நம் நாடு எவ்வளவு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது புரியும்!

இனிவரும் காலங்களிலும் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் வேகமெடுக்கப் போவதில்லை என்று International labour Organisation (ILO) – சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வருகிற 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களின் வேலைவாய்ப்புகளில் சுமார் 77 சதவிகிதம் பாதிக்கப்படும் என்று அந்த ஆய்வு அதிர்ச்சி தருகிறது. 53.5 கோடிப் பேரைக் கொண்ட இந்தியாவின் தொழிலாளர்கள் சந்தையில் சுமார் 39.86 கோடிப் பேரின் வேலைவாய்ப்புக்கு ஆபத்து இருப்பதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. (ஆதாரம் – World Employment and social Outlook Report).

படம்: firstpost

இப்படியான நேரத்தில் தான் வேலையில்லாதவர்களைப் பக்கோடா விற்றுப்  பிழைத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் பிரதமர். நெறிகளோடு, தீங்கிழைக்காத எந்தத் தொழிலும் தவறல்ல. பக்கோடா விற்றுப்  பிழைத்துக்கொள்ளச் சொல்வதும் தவறல்ல. ஆனால் யாராக இருந்து சொல்லியிருக்கிறார் என்பதில்தான் பிரச்சனையே. இந்த நாட்டின் பிரதமர். எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று நாம் நம்பிக்கை வைத்திருக்கும் பொருப்பிலிருந்து கொண்டு இதைச் சொல்லியிருப்பதில்தான் இத்தனை அசவுகரியங்களும், அச்சமும். இவரே இப்படிச் சொல்லிவிட்டால் நாம் யாரிடம்தான் முறையிடுவது.

“வேலையே கிடைக்கவில்லை” என்று சொல்பவர்களையும், “தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற  வேலை கிடைக்கவில்லை” என்று சொல்கிறவர்களையும் இல்லாமல் செய்ய வேண்டிய அரசாங்கம், “பிச்சை எடுப்பதைவிட பக்கோடா விற்பது மேல்” என்று சொல்கிறது.

“இன்று வேலைவாய்ப்பின்மைக்குப் பக்கோடா விற்பதைத் தீர்வாகச் சொன்ன மோடி, நாளைக்குப் பிச்சையெடுப்பதைக்கூடத் தொழில் வாய்ப்பாகக் கருதலாம் என்று சொன்னாலும் சொல்லுவார்” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்வினையாற்றியுள்ளார்.

உடனே இதை ஏதோ பெரிய அவமானமாகக் கருதிய மத்திய அரசு, தன் கருத்திற்குத் நியாயம் சேர்த்திருக்கிறது. பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா, முதன்முறையாக மாநிலங்களவையில் பேசியுள்ளார். “வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தப் பிரச்னை இப்போது உருவானதல்ல. சுதந்திரத்துக்குப் பிறகான 55 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி என்னதான் செய்திருக்கிறது? வேலையில்லாமல் இருப்பதைவிடக் கூலி வேலைக்குப் போவதோ, பக்கோடா விற்பதோகூட சிறந்ததுதான். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.” என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமா? பிரதமரின் ஜன் யோஜ்னா திட்டம் மூலம் 31 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்ததையும், ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றையும் பட்டியலிட்டு, மோடியின் பெருமைகளைப் பாடி சிலாகித்துள்ளார். 31 கோடி அல்ல, அதற்கும் மேலான பெரும் மக்கள்தொகை இந்தியாவில் வறுமையில் உள்ளது. வெறும் வங்கிக் கணக்கு அவர்களை உயர்த்திவிடும் என்று நினைப்பதையும், அதை ஒரு பெருமையாக ஆளும்கட்சியின் தேசியத் தலைவர் மாநிலங்களவையில் சொல்வதையும் நாம் எப்படியாகப் பார்ப்பது. பசித்திருப்பவனுக்கு ஆகாரம் முக்கியமா? அறிவிப்புகள் முக்கியமா? ஆளும் கட்சித் தலைவர் மாநிலங்களவையில் இவ்வாறு பேசியது ஏற்கனவே உடைந்துபோன சாமானிய மக்களின் தலையில் இடியையே இறக்கியதுபோல் ஆகிவிட்டது.

நாட்டின் வேலைவாய்ப்பின்மையைத் தற்போது சரி செய்ய இயலாது, ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்கின்றன மோடி, அமித் ஷா போன்றோரின் பேச்சுகள்.

படம்: hindustantimes

ஒரு நாளைக்கு 200 ரூபாய் ஊதியம் என்பதில் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை. இந்த ஊதியம் என்பது மிகவும் அற்பமான ஒன்று. சும்மா இருப்பதற்குப் பதிலாக 200 ரூபாய் வருவாய் என்று வேண்டுமானால் கொள்ளலாம். ஆனால், இதையும் பட்டியலில் இணைத்து வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்கிறது. ஆனால், ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கு இந்த ஊதியம் நிச்சயமாகப் போதுமானதாக இருக்காது என்பது கூட அறியாத ஆட்சியாளர்கள் இருப்பது தேசிய அவமானமே. ஆக நிமிடத்திற்கு நிமிடம் தேசப் பற்று பற்றிப் பேசும்  பிரதமரரும், அவரது கட்சியினரும் உண்மையான தேசிய உணர்வின் பொருளை உணராமல் பேசுவதும், நடந்துகொள்வதும் வேதனையே.

வேலைவாய்ப்பு என்பது சமூகம் மற்றும் குடும்பப் பொருளாதாரச் செலவுகள், சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் கல்வி பாதிப்புகள் போன்ற பலவற்றோடு தொடர்புடையது.  ஒரு அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் மோடி இதை ஒருபோதும் அணுகவில்லை என்பது நமக்குப் புரிகிறது.\

ஆக மிகப் பிரம்மாண்மாக அரியணை ஏறிய அரசு வழங்கியிருக்கும் இந்த   நிதிநிலை அறிக்கை அவர்கள் கூறியது போலவே படித்த பட்டதாரி இளைஞர்கள் பகோடா போடச் சென்றால் கூட அதை மடித்துக் கொடுக்கும் காகிதமாகக் கூட உதவாது என்பது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமான சோதனை.

Featured Image credit: The wire

Reference:

Facebook Comments
பகிரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here