பிறந்த ஊரும், பிறந்த இடமும், படித்த பள்ளியும் எப்போதுமே, எல்லோருக்குமே எல்லையற்ற நேசத்திற்குரியது. அதன் அடையாளங்களையும், இனிமையான ஞாபகங்களையும், பசுமையான காதலையும் சுமந்துகொண்டு அங்கிருந்து துவங்கும் திரைக்கதை இத்தனை நெருக்கமாக எழுதப்பட்டிருப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே பார்க்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா மட்டுமே இத்தனை நெருக்கமாக எழுதுவார். இன்றைக்கு பிரேம்குமார் எழுதியிருக்கிறார். அதற்காக முதலில் ஒரு சல்யூட் வைத்து வரவேற்போம் நம்மிலிருந்து வந்திருக்கும் இன்னொரு உலக சினிமா இயக்குனரை!

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் ‘The life of Ram’ பாடல் ராம்கள் தூக்கிச் சுமக்கும் ஞாபகங்களைப் பிரதிபலித்து இனிமையான உணர்விற்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்திருக்கிறது. புல்லின் மீதிருக்கும் மென்பனித் துளியின் மொத்த அழகு! செல்லப் பிராணியின் ஸ்பரிசம் தீண்டும் இதம்! மெலிதினும், மெலிதான பாடல் வரிகள்.

“கரை வந்த பிறகே பிடிக்குது கடலை!
நரை வந்த பிறகே புரியுது உலகை!
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே!
இன்றை இப்போதை அர்த்தம் ஆக்குதே!

வாழா ஏன் வாழ்வை வாழேவே!
தாழாமல் மேலே போகிறேன்……..”

சமூக அழுத்தத்தில் இறுகிப்போகிற மனங்களை அவ்வப்போது இலகுவாக்குவது ஞாபகங்களும், காதலும்தான். ஒவ்வொருவர் நாடியையும் இறுகப் பற்றி இந்த இரண்டு உணர்வையும் தட்டி எழுப்பியிருக்கிறார் பிரேம்குமார். பள்ளிக் காலத்து நினைவுகளில் பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், விழாக்கள், பேருந்துகள்,புத்தகப் பைகள், சைக்கிள், ரெக்கார்ட் நோட், வருகைப் பதிவு என ஆரம்பித்து வாட்ச்சுமேன் வரை கூட இதற்கு முன்பு பதிவு செய்தவர்கள் உண்டு. ஆனால் கரும்பலகை ஓரத்தில் உள்ள சாக்பீஸ் துகளெல்லாம் மனதை வருடுவது நெகிழ்வின் உச்சம் தொடும் காரியம். அதேபோலவே பழைய தொலைக்காட்சிப் பெட்டியை வைப்பது வரை சரி. அதற்கு மேல் பழைய UMS antenna booster எல்லாம் திரைக்கதையில்  வைத்து எழுதியிருப்பது தையல்காரன் கடையில் இருக்கும் பழைய ஊசியைப் பதிவு செய்யும் செயல். இத்தனை நுணுக்கமாக எழுதிய கைக்கு முத்தமிடத்தான் வேண்டும். சமீப காலத் தமிழ் சினிமாவில் நல்ல திரைக்கதை ஆசிரியர்கள் உருவாகி வருவது மகிழ்ச்சியும், பெருமையுமாக இருக்கிறது. இத்தனை நெருக்கமான எழுத்தில் குறிப்பிடத்தக்க ஒரு இடம் வருகிறது. அதில் காபி கொடுக்க வந்த ஓட்டல் பணியாளர் “சாரி சார் நான் தப்பான நேரத்துல வந்துட்டேன்!” என்கிறபோது ராமச்சந்திரன் “இல்ல சார் நீங்க சரியான நேரத்துல தான் வந்திருக்கீங்க!” என்று சொல்லும் காட்சியைப் பொங்கக் காத்திருக்கும் பால் மீது ஒரு துளி நீர் தெளித்தது போன்ற கவிதை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல? இதுபோன்ற கவிதைகளை அதிகமாக பாக்கியராஜ் மற்றும் பார்த்திபனின் படங்களில் மட்டுமே பார்த்ததுண்டு.

“விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில”

அவதாரம் படத்தை விட இந்தப் படத்தில் வரும் காட்சியில்தான் பொருத்தமாக உள்ளது . அது அடுத்த நூற்றாண்டிலும் தேடப்படும் இசைஞானியாகவே இருப்பார் இளையராஜா என்பதை உறுதிப்படுத்துகிற காட்சி. மலையாள வரவான இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் அகவெளியை வெளிப்படுத்துவதற்கான இசையமைப்பாளர் என்பது ‘தாய்க்குடம் பிரிஜ்’ஜிலேயே தெரிந்ததுதான். மொத்த உயிரோட்டத்தையும் உருக்கி ஊற்றியிருக்கிறார் வயலின் வழியே! ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் காட்சிப் பேழையில் வரைந்திருப்பது காலத்தால் அழியாத மெகா ஓவியம். உலக சினிமாக் களத்தில் தனித்துவமான இடம் காத்திருக்கிறது தோழருக்கு.

திரிஷா என்னையா திரிஷா கடைசி வரைக்கும் ‘யமுனை ஆற்றிலே’ பாடாமலேயே போன பள்ளிக்காலத்து ஜானு (மலையாள வரவான Gouri g kishan) கொள்ளை அழகு, மிரட்டலான நடிப்பு . அப்படியே முன்வரிசையில் அமர்ந்துகொண்டு என்னைத் திரும்பித், திரும்பிப் பார்க்கும் என் பள்ளிக் காலத்துக் காதலியை கண் முன் கொண்டுவந்து நிறுத்தி மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்துவிட்டாள் ஜானு. பொறுக்க முடியாமல் நானும் ஒரு முறை கேட்டுவிட்டேன் ‘யமுனை ஆற்றிலே’…. பாடுமா என்று! இந்த ஜானு  திரும்பி ராமுவைப் பார்க்கும்போதெல்லாம் ஆயிரம் இளையராஜா பாடல் கேட்ட உணர்வுகள் படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் வரும். கனக்கச்சிதமான பாத்திரத் தேர்வு. ‘ஆட்டோகிராப்’ லத்திகா வையும், ‘ப்ரேமம்’ மலரையும் ஓரம்கட்டிவிட்டாள் இந்த ஜானு.

காதல் என்பது ஒரு காட்டாறு அது தடைபடும் இடத்திலெல்லாம் வெகுண்டெழும், விழுகிற இடத்திலெல்லாம் விரிந்து நடக்கும். இறுதியில் தன் ஜீவனோடு ஆர்ப்பரிப்பில்லாமல் கலந்துவிடும். தொலைந்துபோன காதலனைத் தேடி தொலைதூரம் கடல் கடந்து வந்து தொலைத்துப் போன ஞாபகங்களை (அதை மட்டும்) மீட்டெடுத்துப் போகும் நாயகி தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிது. தொலைத்த காதலின் ஞாபங்களை அசைபோட்டு இருவரும் ஒரு இரவுப் பொழுதை மட்டும் கழிப்பதுதான் மொத்தக்கதை என்றால் அது எளிதான விளக்கம். ஆனால் அந்த ஒரு இரவுதான் நீண்டு செல்லும் எல்லையில்லா எதிர்காலத்தைத் தூக்கிச் சுமக்கப்போகும் ஞாபகப் பேழை! என்பது ராமு, ஜானு போன்றவர்களுக்கு மட்டுமே புரிகின்ற உன்னதமான உளவியல். இந்த உளவியலை இலக்கியப்படுத்துவது வெற்பு என்றால் இதைக்  காட்சிப்படுத்துவது விண் என்று சொல்வதுதான் சாலப் பொருந்தும். எத்தனை பேருக்குக் கிடைக்கும் அப்படியொரு இரவு! ஆனால் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கும் ஒரு இரவுதான் அது! காதலிமுன் கரைகின்ற இதயம் கனியமுது சுரக்கின்ற பலா! அது வாய்க்கப் பெறாதவர் பிறவிப்பயனை அடையாது கடவுவராக!

படம்: the Indian express

ஓரிரவு முழுவதும் இருவரும் ஒன்றாகத் தங்கப் போகிறார்கள் என்றதும் நம்குரங்கு மனம் தவறாகத்தான் சிந்திக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த இயக்குனர் ரம்பை, ஊர்வசி மேனகை பற்றிய இருவருக்கும் இடையிலான உரையாடலின் வழி அந்த உணர்வின் தன்மையைத் தெளிவுபடுத்திவிட்ட பிறகுதான் இருவரையும் ராமச்சந்திரன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் (நம்மையும்தான்). கைவிளக்கில் மின்னும் திரிஷாவின் முகம் தமிழ்சினிமாவின் கனவுக்கன்னி 19 வருடங்களாக அப்படியே இருக்கிறாரே! என்று பலரையும் பொறாமையில் வியக்க வைக்கும்.

நண்பர்களாக வரும் இணைப் பாத்திரங்களும் அளவாகவும், அழகாகவும் இணைந்திருக்கிறார்கள். எல்லோரையும் சொல்லிவிட்டு தனது தாடைக்குக் கீழிருக்கும் முடி கூட நடிக்கும் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கும் பிற்பாதி ராமைப் (விஜய் சேதுபதி) பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா? தமிழ் சினிமா கண்டெடுத்த தங்கப் புதையல்தான் பிறவிக் கலைஞன் விஜய் சேதுபதி என்றே வாழ்த்திக் கொண்டாடுவோம்.

படம்: isaitamilan

மாற்றத்தினூடே இருத்தலையும், இருத்தல் நிமித்ததையும் குறிஞ்சித் திணையில் பதிவு செய்திருக்கும்  இந்த முயற்சியில் எத்தனையோ ஆசைகளோடும், கனவுகளோடும், ஞாபகச் சின்னங்களை வழி நெடுகிலும் தொலைத்துவிட்டு வாய்க்காத அந்த இரவைத் தேடியபடியே வாழ்க்கையின் பயணத்தை முடித்துக் கொள்ளும் ராம்களுக்கும், ஜானுக்களுக்கும் உயிருள்ளவரை இந்தப் படம் ஏதோ ஒரு நிம்மதியைத் தரும், தரட்டும்……

Featured Imge credit: Youtube

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here