ஒரு தாயின் கடிதம்

0
366
views
A Black Mother
படம் : The Medium

3 வருடங்களுக்கு முன்பு டிசம்பர் 5 ஆம் தேதி, நிச்சயமாக அந்த தினத்தைத் தேதியோடு நினைவு வைத்திருக்கிறேன். ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் அந்த தினம் இருவேறு நிலைகளில் நினைவு வைக்கப்பட்டிருக்கிறது. அன்று நானும், என் இஸ்லாமிய நண்பனும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது தாடியுடனும், கைலியுடனும் நின்றிருந்த என் நண்பனையும், என்னையும் காவல்துறையினர் தனியாக அழைத்து “உங்கள் பெயர் என்ன?, எந்த ஏரியா?, இந்த நேரத்துல இங்க என்னடா டீ சாப்பிட்டுகிட்டு இருக்கிங்க?, உங்க வீடு எங்க?, உனக்கு இந்த துலுக்கன எப்படி தெரியும்?, டேய் நீ நெல்பேட்டையா?, கோரிப்பாளையமா?, மரியாதையா சீக்கிரம் கெளம்பி வீடு போய் சேருங்க” என்று மிரட்டி விட்டுச் சென்றார். நீங்கள் வாழ்வது மதுரை போன்ற தூங்கா நகரமாக இருந்தாலும் சரி டிசம்பர் 5 மற்றும் 6 நிச்சயமாக நீண்ட தாடி வைத்துக்கொண்டு, கைலி அணிந்துகொண்டு, அதிலும் இஸ்லாமியராக இருந்துகொண்டு இரவில் டீக்கடையிலோ, பஸ் ஸ்டாண்டிலோ நிற்பது என்பது இந்திய இறையாண்மையில் தண்டனைக்குறிய குற்றம் என்பது எழுதப்படாத சட்டம்.

‘டிசம்பர் 6’ என்பது இந்தியாவில் எல்லா இஸ்லாமிய குடும்பங்களுக்கும் பயம் மிகுந்த ஒரு தினமாகவே கடந்த கால் நூற்றாண்டாக கழிகிறது. சந்தேகத்தின் பேரில் கைது, பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக கைது, விசாரணைக்காக கைது, பொய் வழக்கில் கைது என்று பத்துக்கு ஏழு இஸ்லாமிய குடும்பத்தில் யாரோ ஒருவர் அந்த தினத்தை காவல் நிலையத்தில் கழிக்கிறார். இதே நிலைதான் தலித்துகளுக்கும். கொலை, கொள்ளை, வன்முறை காரணங்களைக் காட்டியும், காவல்துறையின் மாதக்கணக்கிற்கு போதிய வழக்கு இல்லாமைக்காகவும் கைது செய்யப்படும்  தலித் இளைஞர்கள் ஏராளம். அம்பேத்கர் பிறந்தநாள் அன்று தங்கள் குடியிருப்புக்கு மத்தியில் தொலைக்காட்சி பெட்டியில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை காண்பது என்பதும் எழுதப்படாத சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அன்றைக்கு அந்தப் படத்தைப் போடுவதற்காகவே ஒரு இரவு முழுவதையும் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு டீயும், பிஸ்கட்டும், வடையும் வாங்கிக் கொடுத்துக் கழித்த நண்பர்களும் என் வாழ்வில் இருக்கிறார்கள்.

படம் : flickr

இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான ‘இந்தியா’ தனது மக்களின் பாதுகாப்பிற்காக, நல்வாழ்விற்காக அயராது பணிசெய்யும் காவல்துறை, சட்டம், நீதித்துறை இவற்றின் உதவியால் சாத்தியப்படுத்தியிருக்கிறது. சமூக ஊடகங்களும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் கூட மக்களின் குரலை இல்லாமல் அதிகாரத்தின் குரலை பிரதிபலிப்பவையாகவே உள்ளன. அவை பெரும்பான்மையின் குரலாகவே பொதுவெளியில் ஒலிக்கிறது. அதாவது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்றே அவைகள் குறிப்பிடுகின்றன.  

“குழந்தைகளை ஆற்றில் எறிந்துவிடு.

நாகரீகம் அதிகமாக நமக்குக்

கொடுத்துவிட்டது.

தாங்கள் கருப்பர்களாக இருக்கிறோம் என்பதை

அறிந்துகொள்வதற்காக அவர்கள்

வளர்ந்து ஆளாவதைக் காட்டிலும்

இறப்பதுமேல்.”

                                – ஃபன்டன் ஜான்சன்

நியூயார்க் நகரத்தின் சென்ட்ரல் பார்க் – ல் வெள்ளை அமெரிக்கப் பெண்மணி கற்பழித்துக் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அன்றைய தினம் அந்தப் பூங்காவில் இருந்த இளைஞர்களைக் கைது செய்கிறது. அந்தப் பட்டியலில் நான்கு கருப்பின அமெரிக்க இளைஞர்கள் உள்ளனர். உலகின் மிகப்பெரிய வல்லாதிக்க நாடான அமெரிக்காவின் காவல்துறையால் உலகின் பல்வேறு தொழில்நுட்பங்களின் உறைவிடமாக உள்ள அமெரிக்காவில் அந்த கொலையைச் செய்தது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்த வழக்கில் அந்தக் கருப்பின இளைஞர்கள் சிக்கவைக்கப்படுகின்றனர். 14 வருட சிறைக்குப்பின் ஒரு நாள் உண்மையில்  அந்த குற்றத்தைச் செய்த நபர் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார், குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த மரபணு மாதிரிகள் அந்த நபரின் மரபணுவோடு ஒத்துப்போகிறது. 14 வருடங்களுக்குப் பின் அந்த நான்கு இளைஞர்கள் அமெரிக்க நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நட்டயீடாக 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அரசால் அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த வழக்கின் விசாரணையைப் பார்த்தால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சார்பாக வாதாடிய நபர்கள் அனைவருக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லாத போதும் அவர்களுக்குள் இருக்கும்  நிறவெறி என்பது ‘இவர்கள் இல்லாவிடிலும் நிச்சயமாக வேறேதுனுமொரு கறுப்பன்தான் இந்த குற்றத்தைச் செய்திருக்கவேண்டும், அதற்கு இவர்கள் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்’ என்று பேசுவதும், அந்த வழக்கின் தரவுகளைக் கொண்டு விசாரணை அதிகாரியாக இருந்த பெண் அமெரிக்காவின் மிகப்பெரிய குற்றவாளிகளாக அவர்களை முன்னிருத்தி பல்வேறு திரில்லர் நாவல்கள், புத்தகங்கள் என எழுதி விற்பனையில் சாதனை படைப்பதுமாக இருக்கிறது. மனித சமூகம் எந்தவிதமான ஆதாரமும் இல்லாவிடினும் ஒருவரை ‘குற்றவாளி’ என்றோ, கொலைகாரன் என்றோ குற்றம் சுமத்த அவர்களின் பிறப்பு ஒன்றே போதுமான ஆதாரமாக மாறுவது என்பது வெறுப்பின் உச்சம். 

“மிகமிகத் துயரமான கண்ணீர்

ஒரு கருப்பு நங்கையின் கண்ணீர்தான்.

ஏனெனில்

அவளை அழவைப்பது சுலபமல்ல

அவள் மகனை அவளிடமிருந்து எடுத்துச்செல்.

அவனை போதை பழக்கத்துக்கு ஆளாக்கு.

வயலில் அவனை உழைக்கவை.

கொரியாவில் அவனை கொன்றுபோடு.

ஒரு பி.எச்.டி பட்டத்துடன்

ஒட்டலில் உணவு பரிமாறச் செய்.

அவள் உதிர்ப்பாள் ஒரு புன்னகை

தனக்கை உரித்தான

கசப்பு புன்னகையை

கேடயமாகப் பயன்படும்

தன் கருப்பு முகமுடியின் ஊடாக

அவள் உதிர்ப்பாள்.

கண்ணீர் பெருகும்

உள்ளுக்குள் இரத்தச்சிவப்பாக.

அவள் கணவனை அவளிடமிருந்து

பிரித்துவை.

சமையலறையிலேயே சாக வை.

பெரிய கடன் ஒன்றை உண்டாக்கி

ஆயிரம் நாளில் அதை

திருப்பிக் கொடுக்கச் செய்.

அவள் கொடுப்பாள்.

தண்டனை ஒன்று கொடுத்து

ஆயிரம் இரவுகளை கழிக்கவை.

அவள் கழிப்பாள்.

ஆயினும்

வெள்ளையனே,

நீ அவளிடமிருந்து

கண்ணீரை மட்டும் பெறமுடியாது

ஏனெனில்,

அவள்

துயரங்களின் அரசி”.

– ரே டுரம்

ஒரு சமூகம் முழுமைக்கும் ஒரு தலைமுறை முழுமைக்கும் பிறப்பால், இனத்தால், நிறத்தால்,  மக்களைப்  பிளவுபடுத்தி, அவர்களை ஒடுக்கும் வெறுப்பை விதைத்த ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். சுற்றுச்சூழல், அரசியல் போன்ற இன்னபிற காரணங்களைத் தாண்டி இவ்வளவு வெறுப்பை உமிழும்  ஒரு சமூகத்தில் வாழ்வது என்பது ஒரு குழந்தை வளர்ப்பில் ஏற்படுத்தும் பாதிப்பு மோசமானதாக இருக்கும் என்பதோடு அந்தச் சமூகத்தில் வளரும் மக்களின் மனநிலையில் வன்முறையையே விதைக்கிறது.

இதையேதான் அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் நாம் பார்க்கிறோம். இந்தியாவின் பல பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் தீவிரவாதிகளாக நடத்தப்படுவது, அவர்களின் பெயரும், மத அடையாளமும் மட்டுமே அவர்களைக் குற்றவாளிகளின் பக்கத்தில் நிறுத்தி வைப்பதற்கு காரணமாவது எனத் தொடர்கிறது. இந்த வெறுப்புகள் பள்ளி மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படுவதை ‘Mothering A Muslim’ புத்தகத்தில் ‘நஸியா எரும்’ குறிப்பிட்டிருந்தார். அதே போல் துலுக்கன், பறையன், சக்கிலியன் என மத, சாதிய அடையாளங்களால் அவர்கள் இழிவு செய்யப்படுவதும், குற்றவாளிகளாக காட்டப்படுவதும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ எனப் புகழ்பாடிக்கொள்ளும்  தமிழகத்தின் வீடுகளிலும் நிகழ்கிறது.

இந்த இன, மத, சாதிய வெறியினால் பாதிக்கப்படும் மக்களின் குரல்களை கேட்பதற்கு  யாரும் தயாராக இல்லை. கறுப்பின மக்களின் துயர்கள் எவ்வளவு எழுதப்பட்டாலும், பேசப்பட்டாலும் ஒரு கறுப்பின நபர் அமெரிக்க அதிபராக ஆனாலும் கூட அந்த இன்னல்கள் இன்னும் தீரவில்லை. இதே நிலைதான் இந்தியாவில் ஒரு தலித் குடியரசுத் தலைவராக இருந்தாலும் ‘எந்தக் குற்றத்திற்காக தான் சிறைவைக்கப்பட்டிருக்கிறேன்’ என்றே தெரியாமல் சிறையிலிருக்கும் தலித்துகளும், முஸ்லீம்களும் இங்கு அதிகம். இதைத்தான் ‘Framed as a Terrorist, Ordinary Man’s Guide to Radicalism’ போன்ற புத்தகங்களில் தங்கள் நேரடி வாழ்வனுபவங்களாக எழுதியும் உள்ளனர்.

அமெரிக்காவின் கறுப்பின வரலாற்றில் மிக முக்கிய நபர்களாக கருதப்படும் ‘ஃபெட்ரிக் டக்ளஸ்’, ‘மால்கம் எக்ஸ்’, ‘மார்டின் லூதர் கிங்’ போன்ற நபர்களின் வாழ்க்கை வரலாறுகளும், ஜேம்ஸ் பால்ட்வின் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களும் அந்த மக்களின் வாழ்க்கை போராட்டங்களை உலகுக்கு காட்டின. வரலாற்றை எழுதுவது என்பதிலும் எல்லோருக்கும்  இருப்பதைப் போல் தரவுகளைத் திரட்டி, சான்றாதாரங்களின் சேர்க்கையில் நிகழ்வதாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வரலாறு என்பது கிடைப்பதில்லை, அது அவர்களின் வாழ்க்கைப் போராட்டமாக, மரணங்களாக, துன்பங்களாக, அவர்களின் நினைவில் இருப்பவையே எஞ்சியிருக்கின்றன. அந்த நினைவுகளையே அந்த மக்கள் தங்கள் தலைமுறைக்கு கடத்துகின்றனர். ஜேம்ஸ் பால்ட் வின்னின் ‘I am not your Negro’, தா நெஹிஸி கோட்ஸின் ‘Between World and Me’ போன்ற புத்தகங்கள் இப்படிப்பட்ட நினைவுகளின் சேமிப்பாக, அந்த அனுபவங்களை தங்கள் தலைமுறைக்கு கடத்தி ஒரு போராட்ட வாழ்வைப் புரியவைக்கும் செயலாக அமைகின்றன. டென்சில் வாஷிங்டன் தன்னுடைய ‘Equalizer 2’ திரைப்படத்தில் த – நெஹிஸி கோட்ஸின் புத்தகத்தை ஒரு கறுப்பின இளைஞனுக்கு கொடுத்து இந்த புத்தகத்தை நீ நிச்சயமாக படிக்க வேண்டும் என்பார். அதே புத்தகம்தான் 2015 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தான் வாசித்த சிறந்த புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றது. ‘ஒரு கறுப்பின தந்தை தன் மகனை வளர்க்கும்போது வெள்ளை அமெரிக்க சமூகத்தில் எதைக் கற்றுக்கொண்டார்? எதை தன் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிறார்? அந்தக் குழந்தை வளரும் சமூகம் எப்படிப்பட்டது? ஒரு கறுப்பின இளைஞனாக தான் வளர்ந்து வந்தது எப்படி?’ என்பதைப்பற்றி தன் குழந்தையுடன் நடத்தும் உரையாடலாக அந்தப் புத்தகம் அமைந்தது. அன்றைய தினம் அமெரிக்காவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகமாக அமைந்தது.

படம் : threecolumnblogger

‘Breathe – A letter to my Sons’ என்ற Imani Perry யின் புத்தகம் தன் கறுப்பின மகன்களுக்கு ஒரு தாய் எழுதும் கடிதங்களின் தொகுப்பாக அமைகிறது. இதுவரையில் கறுப்பின அமெரிக்கர்களால் எழுதப்பட்ட வரலாற்றுத் தொகுப்புகளாக அமையும் புத்தகங்கள் பொதுவாக ஆண்கள் எழுதுவதாக அதாவது தந்தை மகனுக்கோ, மகளுக்கோ எழுதுவதாக அமைந்தவையே. அந்தவகையில் மாறுபட்ட  இமானி பெர்ரியின் இந்த புத்தகம் கறுப்பினத் தாயான ஒரு பெண் தன் குழந்தைகளை ஒரு வல்லாதிக்க நிறவெறி கொண்ட வெள்ளை அமெரிக்காவில் வளர்ப்பது என்பதில் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,  அவருடைய வாழ்க்கை, தன் குழந்தைகளிடம் ஒரு தாய்க்கு இருக்கும் பாசம், எதிர்பார்ப்பு எல்லாம் சேர்ந்ததாக அமைகிறது. புத்தகத்தின் துவக்கத்தில் தன் குழந்தைகளுக்கு இருக்கும் முதல் நினைவாக இமானி பெர்ரி குறிப்பிடுவது ஒபாமாவின் அதிபர் தேர்தல் வெற்றி என்பதைவிட டிராய் டேவிஸின் மரணத்தைதான். ‘அவர்கள் டிராய் டேவிஸை கொலை செய்துவிட்டனர்’ என்று தன் குழந்தைகள் அழுததுதான் இமானி பெர்ரி தன் குழந்தைகள் குறித்த மிக முக்கிய நினைவாக குறிப்பிடுகிறார். இங்கு ஒபாமாக்களைவிட டிராய் டேவிஸ்கள்தான் அதிகமாக உள்ளனர் என்று தன் குழந்தைகளுக்கு எழுதும் கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார். ஒரு சராசரி அமெரிக்கரின் வாழ்விலிருந்து ஒரு கறுப்பின அமெரிக்கரின் வாழ்வு என்பது நிச்சயம் மாறுபட்ட ஒன்றே. அவர்கள் அடிமைகளாக இழுத்து வரப்பட்டனர், அவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர், அவர்கள் வன்புணர்வு செய்ய்பட்டனர், உழைப்பால் சுரண்டப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதத்தையும், நாகரீகத்தையும்  போதிக்கப்போவதாக ஐரோப்பிய சிந்தனை கொண்ட அன்றைய அமெரிக்க சமூகம் அவர்களைக்  காட்டுமிராண்டிகளாகப் பார்த்தது. வீதிகளில் மிருகங்களைப் போல் சுட்டுவீழ்த்தப்பட்டனர். அவர்கள் வீதிகளில் நடக்க, பள்ளிக்குச் செல்ல, அலுவலங்களுக்குச் செல்ல, வாக்களிக்க, தேர்தலில் போட்டியிட என அனைத்திற்கும் போராடினார்கள், உயிர் துறந்தார்கள். இமானி பெர்ரி தன்னுடைய புத்தகத்தில் உலகெங்கிலும் உள்ள கறுப்பினப் போராளிகள், சிந்தனையாளர்கள் அனைவரின் எழுத்தையும் குறிப்பிடுகிறார்.

படம் : Good reads

ஒரு தாயின் பதிவு என்பதைத் தாண்டி, தான் வாழ்கின்ற நிறவெறி கொண்ட ஏகாதிபத்திய சமூகத்தில் அதன் அத்தனை கோர முகங்களையும்  கற்றுணர்ந்த ஒரு தாய் தன் குழந்தைகளை அந்த ஏகாதிபத்தியம் நடத்துகின்ற வன்முறையின் கொலைக் கரங்களுக்கு தின்னக்கொடுக்காமல் இருக்கச் செய்யும் ஒரு வாழ்நாள் போராட்டத்தின் பதிவாகவே இந்தப் புத்தகத்தைக் காணலாம். இது இதற்கு முன்னால் ஜேம்ஸ் பால்ட்வின், த – நெஹிஸி கோட்ஸ் போன்றவர்களின் முழுமையான அரசியல், வரலாறு நிறைந்த எழுத்தாக மட்டும் நின்றுவிடாமல் இயல்பிலேயே பாசமும், அன்பும் பலவீனமாக ஆக்கப்பட்ட ஒரு தாயின் குரலாக ஒலிக்கிறது.

“அம்மா,

(மகனைப் பிரிந்த

கறுப்பு அன்னையர் அனைவரும்)

நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தாய்

காத்திருப்பதற்கும் நம்பிக்கைக் கொள்வதற்கும்

வேதனையும் வலியும் நிறைந்த நேரங்களில்

நீ நம்பிக்கையுடன் இருந்ததைப் போல

ஆனால் வாழ்வு

என்னுள் கொன்றுவிட்டது அந்தப் புதிரான நம்பிக்கையை

இப்போது நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை

எனக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்

நான்தான் அம்மா அது

நாங்கள்தான் அந்த நம்பிக்கை

உன் குழந்தைகள் வாழ்வை நிலைநிறுத்தும் ஒரு நம்பிக்கையை நோக்கி

இன்று

நாங்கள் காட்டுகிராமங்களில் ஆடையற்ற குழந்தைகள்

நடுப்பகலில் மணலில் கந்தல் துணியினாலான பந்துடன் விளையாடும்

பள்ளிகள் அற்ற குழந்தைகள்

நாங்கள்தான் காப்பித் தோட்டங்களில் தங்கள் வாழ்வை எரிக்கும்

ஒப்பந்தத் தொழிலாளர்கள்

அறியாமையில் உழலும் கறுப்பு மனிதர்கள்

வெள்ளையர்களை மதிக்க வேண்டியவர்கள்

பணக்காரர்களை நினைத்து பயப்பட வேண்டியவர்கள்

கறுப்புக் குடியிருப்புக்களில்

நாங்கள் உன் குழந்தைகள்

மின்சார விளக்குகளுக்கு அப்பால்

மரணத்தின் முரசின் ஒலியில்

தள்ளாடி விழுந்துகொண்டிருக்கும்

குடிகாரர்கள்.

உன் குழந்தைகள்

பசியுடன்

தாகத்துடன்

உன்னை அம்மாவென்று அழைக்க வெட்கப்பட்டவர்களாக

சாலையைக் கடக்க பயந்தவர்களாக

மனிதர்களைக் கண்டு பயந்தவர்களாக

நாங்கள் நாங்களாக

நாளை

அடிமைத்தனம் ஒழிந்ததைக் கொண்டாடும்போது

நாங்கள் பாடுவோம் விடுதலையின் பாடல்களை

ஒளியைத் தேடிச் செல்கிறோம்

அம்மா,

(மகனைப் பிரிந்த

கறுப்பு அன்னையர் அனைவரும்)

உன் குழந்தைகள்

வாழ்வைத் தேடிப் போகிறோம்.”

                                                – அகோஸ்டினோ நேதோ (1922-1979)

‘When they see us’ இணைய நாடகத்தில் தன் மகனை குற்றமற்றவன் என நிரூபிப்பதற்காக போராடும் ஒரு தாய், இந்தியாவில் அச்ச உணர்வு மேலோங்கிட சிறையில் வாடும் ஒரு இஸ்லாமிய இளைஞனின் சிறைவாழ்கைக்கு பின்னால் அவன் நம்பிக்கைகளாக இருக்கும் தாய் பேரறிவாளனின் நம்பிக்கையாக இருக்கும் அற்புதம்மாள் போன்ற தாய் தான் வரலாற்றில் அதிகாரத்திற்கு எதிரான போரை துவக்கி வைப்பவர்களாக இருக்கிறார்கள். கார்கியின் தாய் நாவல் ஒரு புனைவாகவோ, கனவாகவோ நின்று போன ஒரு படைப்பல்ல ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு என்பதன் நிகழ்கால வரலாறுகளையே நாம் காணமுடிகிறது.

துணை நூற்பட்டியல்:

1. James Baldwin, I am Not your Negro, Penguin Classics, 2017.

2. Ta – Nehisi Coates, Between the world and Me, Spigel & Grau, USA, 2015.

3. When they see us, Limited series, Netflix, 2019

4. Neyaz Farooquee, Ordinary Man’s guide to Radicallism, Context, 2018.

5. Mohammed Aamir Khan, Framed as a Terrorist, Speaking tiger, India, 2016

6. அமில்கர் கப்ரால், வேர்களை நோக்கி, விடியல் பதிப்பகம், கோவை.

7. அமில்கர் கப்ரால், நுக்ருமாவும் ஆப்பிரிக்க விடுதலையும், விடியல் பதிப்பகம், கோவை

8. மால்கம் எக்ஸ், என் வாழ்க்கை, அலெக்ஸ் ஹெய்லி, விடியல் பதிப்பகம், கோவை.

9. ஃபிரான்ஸ் ஃபனான், ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலையின் வடிவங்கள், விடியல் பதிப்பகம், கோவை.

10. டேவிட் மாசி, ஃப்னான் அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும், விடியல் பதிப்பகம், கோவை.

11. Nazia Erum, Mothering a Muslim, Juggernaut, India, 2018.

12. Revati Laul, The Anatomy of Hate, Context, 2018.

13. இந்திரன் ராஜேந்திரன், அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், யாழி பதிவு வெளியீடு, சென்னை, 1993.

14. Agostinho Neto, Translated by Marga Holness,  “When My Brothers Come Home”,

Poems from Central and Southern Africa, Wesleyan University Press, Connecticut, 1985

தமிழில் கண்ணன் எம்., பூபதிராஜ் எஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here