பகிரவும்

எழுத்தாளர் – எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம் – விகடன் பிரசுரம்

‘துணையெழுத்து’ புத்தகம் படித்து முடித்ததும் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வாசிப்பு என்பதையும் தாண்டி நீண்ட நாள் ஆசை கொண்ட பயணத்திற்குச் சென்று வந்த ஓர் உணர்வு. பெரும் மலையேறிக் குளிர் நடுங்க சூரிய வெப்பத்தை இதமாக இரசிப்பது போல இருக்கிறது.

நம் எல்லோர் வாழ்வில் நடக்கும் சர்வ சாதாரண நிகழ்வை எஸ்.ரா எடுத்துரைத்த விதம் சிலிர்க்க வைக்கிறது. கூச்சலின் நடுவே பேரமைதியை மனதிற்குள் தந்துவிடுகிறது. உலகை அவர் கண் வழி பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது.

எழுத்தாளர்களால் மட்டுமே நாம் சந்திக்கும் அதே சந்தர்ப்பங்களை விதியை புரிதலான கோணத்தில் பார்க்க முடிகிறது. வெறுமனே தத்துவங்கள் உதிர்த்து கருத்துக்களைத் திணிப்பது என்றில்லாமல் போகிற போக்கில் வாழ்வியலைச் சொல்லி விட்டுச் சென்றியிருப்பதே துணையெழுத்தின் சிறப்பம்சம்.

அவர் அதிகம் படித்திருக்கிறார் என்பதை விட பயணித்திருக்கிறார் என்பதைப் பாதி படிக்கும்போதே உணர்ந்து விடுவோம். நெடுந்தூரப் பயணத்தில் நம்மையும் கைபிடித்து அழைத்துச் செல்கிறார். தான் காணாமல் போய் நம்மைக் கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்.

அவர் அறிமுகம் செய்யும் விந்தை மாந்தர்கள், காட்சி அமைப்புகள் நம்மைத் திகைப்பில் ஆழ்த்தும். சில சமயம் சாட்டையால் அடித்து விட்டு மயிலிறகைக் கொண்டு நீவி விடுகிறார். மனித வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது எனப் பயணித்து காட்டுகிறார்.

சொல்லப்போனால் அவர் குறிப்பிட்டிருக்கும் பல நிகழ்வுகள் நம் வாழ்வைப் பிரதிபலிக்கும். குறிப்பாகப் பள்ளிக் காலத்தின் பால்ய நினைவுகள். கைப்பேசி வருவதற்கு முந்தைய தலைமுறையினரின் பள்ளிப் பருவம் ஒன்றைப் போலத்தான் இருக்கும் என த் தோன்றுகிறது.

புகைப்படத்தில் மட்டுமே மிஞ்சியிருக்கும் நண்பன், புத்தகம் திருடியது, முதன்முறையாகப் புலியை சர்க்கஸில் பார்த்தது, மறந்துபோன தோழி, அமிழ்ந்து மங்கிய விளையாட்டுகள் எனத் தொலைந்து போன பால்யம் கண்முன்னே கரைந்து போனது.

சில கதாப் பாத்திரங்கள் நம் வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா என்பதைத் தாண்டி நாம் எங்கோ கால ஓட்டத்தில் தொலைத்துப் போன உறவுகளின் நினைவைப் புதுப்பித்துக் கொள்ள வைக்கிறது.  இன்று பொருள் தேடித் புலம்பெயர்ந்த அனைவரையும் பிறந்து வளர்ந்த சொந்த ஊருக்கு ஒருமுறை போய்ப் பார்க்கத் தூண்டுகிறது.

புத்தகத்தில் பல நபர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் எஸ்.ரா. மலையாள எழுத்தாளர் பஷீர், தமிழ் கவி பிரமிள் என அறியாத பிரபலங்கள் முதல் வீட்டை தொலைத்துவிட்டுச் சாவி வைத்திருப்பவன், கடன் வாங்கியவன், உறுபசியில் சினந்தவன் என அடையாளம் தெரியாத பலரையும் நம் நண்பர்களாக மாற்றுகிறார்.

ஓவியங்கள், சிற்பங்கள், உணவுகள் என  நம்மைச் சுற்றி இருக்கும் எதார்த்தங்கள்  பலவற்றையும் நாம் ரசிக்கத் தூண்டுகிறது துணையெழுத்து. வாழ்க்கை எவ்வளவு எளிமையானது. அதில் வாழும் எளிய மனிதர்கள் எவ்வகையான அசாத்திய சூழலை எதிர்கொள்கிறார்கள், அப்போது எடுக்கும் முடிவுகளின் விளைவுகளை நிதிர்சனமாகச் சொல்கிறது இந்த புத்தகம்.

மெல்லிய சாரலைப் போல நம் மனம் முழுக்க பேரன்பை வீசிக்கொண்டே இருக்கிறது தீராத வார்த்தைகள். அன்பையும், பரிவையும் விதைத்து நம்மைச் சுற்றி வாழும் அதிசய உலகின் மனிதர்களை மனதோடு அணைத்துக் கொண்டிருக்கிறார்.

படித்து முடித்ததும் முதலில் இனி எங்கு பயணப்பட வேண்டியிருந்தாலும் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டியவற்றை வசதியாகக் கைப்பையில் எடுத்து வைத்துக் கொண்டேன். மீண்டும் புத்தகத்தைத் திறக்கும்போது துணையாக என் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு கதை சொல்ல அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு.

Featured Image credit: boncart
Facebook Comments
பகிரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here