பகிரவும்

இந்த உலகம் பொருள் சார்ந்த உலகமாக மாறிவிட்டது. சுழன்று கொண்டிருக்கும் மனித வாழ்க்கையின் மையப்புள்ளி பணம் என்கின்ற ஒற்றை விடயத்தை அடிநாதமாக வைத்துச் சுழல்கிறது. பணம் ஒரு மொழி. அதன் உட்பொருள் சமூகத்தொடர்பு. நாம் ஒரு பொருளுக்காக, ஒரு சேவைக்காக, ஒரு செயலுக்காக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்கிறோம்.

இந்தத் தொடர்பு, இந்தப் பிணைப்பு ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குகிறது. மதிப்பீட்டின் மூலம் இது சாத்தியமாகிறது. இதில் ஏற்படும் மனிதச் சங்கிலியும், சமூகத் தாக்கங்களும் சிலரை வசதி படைத்த மனிதர்களாகவும், சிலரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள சமூகமாகவும் மாற்றுகிறது. மத்திய வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் இரண்டு நிலையிலும் இல்லாமல் தாங்கள் இருக்கும் நிலையைத் தக்க வைக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வுகள் இல்லாத பணமில்லாத ஒரு வாழ்கையைச் சற்று பின் நோக்கிப் பார்ப்போம்.

மனிதன் தோன்றிய காலமும் நாணயங்களின் பரிவர்த்தனை தொடங்கிய காலமும் நம்மால் சரியாகக் கணக்கிட முடியாத அளவிற்குப் பழமையானது. மனிதன் எழுத்துக்களைப் பயன்படுத்தும் முன்னரே குறியீடுகளை வைத்து நாணயங்களை அச்சிட்டுப் பயன்படுத்தி வந்துள்ளான். இதற்கு முன்னர் இருந்த முறை பண்டமாற்று முறை. “என்னுடைய ஆடு ஒன்றை வைத்துக்கோள். எனக்கு வண்டிச்சக்கரம் ஒன்றைச் செய்து கொடு” என்னுடைய ஐம்பது முட்டைகளை வைத்துக்  கொண்டு உன்னிடம் உள்ள காய்கறிகளை எனக்குக் கொடு” என்று அவர்களின் தேவைகளுக்கு ஏற்றார்போல் மக்களை நாடி அவர்களிடம் தங்கள் பரிவர்த்தனையைச் செய்து கொண்டனர். தேவைகள் இருவருக்கும் சமமாக இருக்கும்பொழுது அல்லது பரிவர்த்தனை செய்ய இருவரிடம் சமமான பொருட்கள் இருக்கும்பொழுதும் இதில் சிக்கல் இல்லை. ஒருவர் கோழி ஒன்றை வைத்து கொண்டு பசியோடு வாழைப்பழம் வாங்க வரும்பொழுது பரிவர்த்தனை செய்பவரிடம் ஐந்து பழங்கள் மட்டும்தான் உள்ளது என்றால் அது ஒரு நியாயமில்லாத பரிவர்த்தனை என்றாகிவிடும். இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க உருவானதே நாணயங்கள்.

படம்: beneaththesurface.co.za

மத்திய கிழக்கு சீனர்கள், லிதியன்கள் உடன் நம் இந்தியர்கள் நாணயங்கள் அச்சிடுவதில் முன்னோடிகளாகத்  திகழ்ந்தனர். ஆறாம் நூற்றாண்டில் மகாஜனபதாக்கள் என்று அழைக்கப்பட்ட குடியரசு ராஜாங்கங்களான ‘காந்தாரா’, ‘குண்டலம்’, ‘குரு’, ‘பாஞ்சாலம்’, ‘சாக்கியம்’, ‘சுரசேனா’, மற்றும் ‘சவுராஷ்டிரா’ ஆகிய மண்டலங்களில் கர்ட்டப்பணம் புழக்கத்தில் இருந்துள்ளது. பிறகு மௌரியர்கள் ராஜ முத்திரையுடன் தரமான நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டனர். அவைகளை விளக்கி அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் கூறும்பொழுது ரூபியரூபா (இரும்பு காசுகள்), ஸ்வர்ண ரூபா (தங்க காசுகள்), தாமர ரூபா (பித்தளை காசுகள்), சீச ரூபா (ஈய காசுகள்) என்று விளக்கமளிக்கிறார்.

நாணய மதிப்பீடு அவர்களது தேவைகளைப்  பூர்த்தி செய்தது. உள்நாட்டு அல்லது அரசர்கள் காலத்தில் அவர்களது தேச பரிமாற்றத்திற்கு இது உதவினாலும் கடல் கடந்த வாணிபத்திற்கு, பிற தேச சந்தைகளுக்குப் பொதுவான வர்த்தகத்திற்கு உலோகங்கள் தேவைப்பட்டது. ஆகவே இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உருவானது உலோகங்களின் பரிவர்த்தனை. விலையுயர்ந்த பரிவர்த்தனைகளுக்குத்  தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தத்  தொடங்கினர். இவைகளை வெட்டிப்  பகிர்ந்து பயன்படுத்தலாம் என்பதாலும், இதற்கு ஒரு பரவலான உலகளாவிய தேவையும் இருந்ததாலும் இவை மிகவும் பயன்பட்டன. கடல் கடந்த வாணிபத்திற்கு இவற்றை கொண்டு செல்ல எளிதானது. உலோகப்  பயன்பாடு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு நீடித்தது. பின் ஒரு கட்டத்தில் பாதுகாப்பு காரணக்களுக்காக உலோகங்களைக்  கொண்டு செல்வதைத் தவிர்க்க ஒரு யுத்தியைக் கையாண்டனர். தங்களிடம் உள்ள உலோகத்தைப் பொதுவான ஒரு நபரிடம் அளித்து ஒரு பெட்டகத்தில் வைத்துவிட்டு அந்த நபரிடம் ஒப்புகைச் சீட்டு ஒன்றைப்  பெற்றுக் கொண்டு அதை வைத்துத் தங்களுக்குத்  தேவையானவற்றை வாங்கிக்  கொண்டனர். இதன் பரிணாம வளர்ச்சி தான் காகிதப்பணமாக மாறியிருக்கலாம்.

படம்: gradeup

இந்தியாவைப்  பொறுத்தவரை கிழக்கிந்தியக்  கம்பெனி இந்தியாவிற்குள் வணிகர்களாக இருந்தபொழுது கி.பி. 1717 ஆண்டு முகலாய அரசர் பரூக் சீயார் என்பவரிடம் அனுமதி கேட்டு பம்பாய் நாணயங்கள் அச்சிடும் மையத்தில் தங்களுக்கான நாணயங்களை அச்சிட்டுக்  கொண்டனர். ஆங்கிலேயர்கள் தங்கக்  காசுகளைக்  கரோலினா, இரும்பு காசுகளை  ஏஞ்செலினா,  தாமிரக் காசுகளை கப்பரூன் , மற்றும் டின் எனப்படும் சிறு காசுகள் என்று வேறுபடுத்திக்  கொண்டனர்.

இந்தியாவின் முதல் காகிதப்பணம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஹிந்துஸ்தான் பாங்க் மற்றும் பெங்கால் வங்கி என்கிற இரு வங்கிகளால் அச்சடிக்கப்பட்டது. கி.பி. 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சிக்குப்  பின்னர் இந்திய ரூபாய்களை அகற்றி விட்டு ஜார்ஜ் ஆறாம் மன்னனின் படத்துடன் காலனியாதிக்க இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது.

முதல் இந்திய ரூபாய் நோட்டு (1770 ஆம் ஆண்டு ).
படம்: quora

 

நமது இந்தியன் ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அங்கு முதலில் அச்சடிக்கப்பட்ட காகிதப்பணம் ஜார்ஜ் ஆறாம் மன்னர் படம் பொறித்த ஐந்து ரூபாய் நோட்டுகள். இங்கு அதிக பட்சமாக ஒரு நோட்டு 10,000 ரூபாய் வரை அச்சடிக்கப்பட்டது. பின் சுதந்திரம் பெற்ற பின் அந்த நோட்டு மதிப்பிளப்பு செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் மதிப்பிளப்பு ரூபாய் அநேகமாக இதுவாக இருக்கலாம்.

படம்: jagranjosh

சுதந்திர இந்தியாவின் முதல் அச்சடிக்கப்பட்ட நோட்டு ஒரு ரூபாய். அந்த ஒரு ரூபாய் நோட்டு 64 பைசாக்களைக்  கொண்டது. அசோகச்  சக்கரம் பொறித்து நமது இந்திய அரசாங்கத்தின் பெயருடன் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 15, 1950 ஆம் வருடம் புதிய அனா முறையுடன் முதல் சுதந்திர இந்தியாவின் காசுகள் ஆச்சடிக்கப்பட்டன. இந்தப்  புதிய அனா முறையில் ஒரு ரூபாய் நோட்டு 16 அனாக்களைக்  கொண்டது. பின் 1957 ஆம் ஆண்டு, இந்திய நாணயச்  சட்டப்படி மதிப்பீடு தசம பின்னங்களுக்கு மாறியது. ஒரு ரூபாய் நூறு காசுகளாக அறிவிக்கப்பட்டது . பின் அச்சடிக்கப்பட்ட காசுகள் 1 நயா பைசா, 2 நயா பைசா, 5 நயா பைசா, 10 நயா பைசா என்ற மதிப்பில் பார்வையற்றோர்களுக்காக வெவ்வேறு வடிவில் வெளியிடப்பட்டன.

பின் 1959 ஆம் ஆண்டு சிறப்புப்  பத்து ரூபாய் மற்றும் நூறு ரூபாய் தாள்கள் அச்சிட்டனர். இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக இது அச்சிடப்பட்டது. (இப்பொழுது விமான மையத்திற்குள் நுழையக்  கூட இது பத்தாது) முதன் முதலில் 1969 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த தினத்தின் நினைவாக அவரது படத்துடன் ஒரு ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. பிற்காலத்தில், 1996 ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி நிரந்தமாக நமது ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றார்.

படம்: coinsofrepublicindia

ஆரம்ப காலத்தில் இந்தியாவின் ரூபாய் அச்சடிக்கும் விகிதாச்சாரம் 5ல் 2 பாகம் தங்கம் அல்லது முழு இருப்பு பத்திரங்கள், இதில் 40 கோடிக்கு குறைவில்லாத தங்கத்தின் அளவுடன் இருந்தால், மீதி மூன்று பாகத்திற்கு நாணயங்கள் அச்சிடலாம் என்கிற விகிதாச்சார பணம் அச்சடிக்கும் முறையில் இயங்கின. இந்த விதிமுறை 1956 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெளிநாட்டு பணப்  பரிவர்த்தனையில் 515 கோடி அளவிற்கு இருப்பு இருந்தால் மட்டுமே ஒரு 10,000 ரூபாய் மதிப்பிற்கு அச்சிட முடியும். இதில் 400 கோடி அளவிற்குப்  பிற வகை இருப்புகளும் மற்றும் 115 கோடி அளவிற்குத்  தங்கமாக இருப்பும் வேண்டும் என்கின்ற குறைந்தபட்ச இருப்புத்  திட்டத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இதற்காகப்  பிரத்யேகமாகத்  தங்கத்தை ரிசர்வ் வங்கி இறக்குமதி செய்தால் பண வீக்கம் ஏற்படும் என்பதால் பிற முதலீடுகளில் இருப்பு நிலை சரியாக இருந்தால் தங்கத்தின் இருப்பை பராமாரிக்க மட்டும் உத்தரவு பிறப்பித்துவிட்டு ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுக்  கொள்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நமது பணப்  பரிவர்த்தனையில் நமக்கு ஏற்பட்ட புரட்சி என்றால் அது கடன் அட்டைகள் மற்றும் வங்கி சேமிப்புக்  கணக்கு அட்டைகள். காசோலை முறைக்குப்  பிறகு இது பணப்  பரிவர்த்தனைக்கு பரவலாகப்  பயன்பாட்டிற்கு வந்தது. பின்பு இணையவழி பரிவர்த்தனையை மக்கள் அதிகம் விரும்பத்  துவங்கினர். இன்றைய நவீன யுகத்தில் இணைய வழி பண பரிமாற்றங்களைத்  தங்கள் செல்பேசியிலே பெரும்பாலோனோர் முடித்துக்  கொள்கின்றனர்.

படம்: livemint

தொழில்நுட்ப அல்லது பொருளாதாரப்  புரட்சி ஒவ்வொரு முறையும் நம் கதவுகளைத்  தட்டும்பொழுது ஆரம்ப காலத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளத்  தயங்கினாலும் பிற்காலத்தில் அதுவே பழக்கத்திற்கு வந்துவிடுகிறது. இப்பொழுது நாம் அடுத்த புரட்சிக்குத்  தயாராகி விட்டோம். ‘பிட்காயின்ஸ் எனப்படும் பணமில்லா பணம். ஒவ்வொருவருக்கும் இணையத்தில் ஒரு மணி பர்ஸ் (wallet) கொடுக்கப்படும். நமக்கான ஒரு மறையீட்டு முகவரி கொடுக்கப்படும். அதன் மூலம் நாம் பிட்காயின்களைப்  பெற்று வழங்கி வர்த்தகம் அல்லது பிற தேவைகளுக்குப்  பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான தனி தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் கூட வெளிநாட்டில் வந்துவிட்டன. மறையீட்டுப்  பணத்தில் இப்பொழுது ஏறத்தாழ எழுநூறு வகைகள் சந்தையில் உள்ளன. லைட்காயின், மியூசிக்காயின் என்று பல வகை இருந்தாலும் இதற்கான மூல பரிமாற்றம் பிட்காயின் மூலமாகவே நடைபெறுகிறது. இதில் ஒரு விந்தை என்னவென்றால்  இது பிணையத்தில் உள்ள இணையவழிப்  பணம் என்பதால் எந்த அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லை. எனவே பலர் இதை ஏற்கத் தயங்குகின்றனர். சமீபத்திய நிதி அறிக்கையில் இந்தியா இதை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

படம்: windowsreport

இவ்வாறு பண உற்பத்தி குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் நமக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் மனித வாழ்கையில் ஒவ்வொரு செயல்பாடுகளையும் தீர்மானிக்கிற பணம் நல்வழியில் சேர்ப்பதும், போதுமான அளவே வைத்துக் கொள்வதும்தான் இயற்கைக்கு உகந்தது என்பது புரியும்.

பண உற்பத்தியும், அதன் பயன்பாடும் வெவ்வேறு பரிமாணத்தில் நம்மை நோக்கிச் சுழன்று வந்தாலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மிடம் கண்கட்டி வித்தை காட்டி நமது சேமிப்புகளை சுருட்டிக்கொண்டு போகப்  புதுப் புது யுத்திகளும், தொழில்நுட்பங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. சாதாரண சீட்டுக்  கம்பெனி மோசடியில் ஆரம்பித்துப்  பங்கு வர்த்தகம், காப்பீடு, அதிக வட்டி தரும் திட்டங்கள், நகைச்  சீட்டு, லாட்டரிச்  சீட்டு என்று இந்தியாவில் வருடா வருடம் பல்லாயிரம் கோடிகளை மக்கள் இழப்பது வாடிக்கையாகி உள்ளது. நல்ல கல்வியறிவு உள்ளவர்களே அதிக லாபத்தையும், குறுகிய கால முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு இதில் சிக்கிக்  கொள்கின்றனர். அரசினால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே இவைகளைக்  கட்டுபடுத்த முடியும். அதற்கு மேல் சுய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இவைகளிடம் இருந்து தப்பிக்க முடியும். நவீன கணினி யுகத்தில் HYIP (HIGH YIELD INVESTMENT PLAN) போன்று திட்டங்கள் முதலை போல் வாய் பிளந்து நிற்கின்றன. வெளிநாட்டுப்  பண மதிப்பில் நம் கண் முன்னே நடக்கும் இது போன்ற கொள்ளைகள் பற்றிய விழிப்புணர்வு நம் ஒவ்வொருவரிடம் அவசியம் தேவை…..

Facebook Comments
பகிரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here