பகிரவும்

இந்தியாவில் கிரிக்கெட்டைப் போல் பிற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. தற்போது ஐ.பி.எல். என்றவுடனே கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாடத்திற்குச்  சொல்லவா வேண்டும்? உலகெங்கும் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் இந்தக் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களும் கடும் போட்டியிடுகின்றன. இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விடக்  கிரிக்கெட் இன்று மிகவும் புகழ் பெற்ற ஆட்டமாக உருமாறியிருக்கிறது. காரணம் இதன் மூலம் கிடைக்கும் வருவாய்.  இதை விளையாட்டு என்று கருதிக் கொண்டாலும் கூட தனி மனித வாழ்க்கைப் பொறுப்புகளை பல வேளைகளில் இது பாதிக்கிறது என்பதும், கிரிக்கெட் நட்சத்திரங்கள் அளவுக்கு அதிகமாக வணங்கப்படுகிறார்கள் என்பதும்,  இது மிகப்பெரிய வர்த்தகத் தளமாகி சூதாட்டத்தின் இருப்பிடமாகிவிட்டது என்பதே மறுக்கப்பட முடியாத உண்மை. ஏன் மற்ற விளையாட்டான கபடி, மாரத்தான், ஹாக்கி, கால்பந்து, கூடைபந்து, டென்னிஸ் போன்றவை எல்லாம் இந்த அளவு பிரபலம் ஆகவில்லை. கிரிக்கெட் வீரர்களைப் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் விடும் நிறுவனம் ஏன் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இது போன்ற முன்னுரிமை தருவதில்லை. இதுபோன்று மற்ற விளையாட்டிற்கு ஏன் மதிப்பு கொடுப்பதில்லை.

எத்தனை, எத்தனை கனவுகளுடன் திறமைகளுடன் நம் கிராமங்களில் உள்ள பெண்களும், ஆண்களும் பல்வேறு விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றும் அவர்கள் சாதனையை உலகில் பறைசாற்ற முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் வேண்டுமா தற்போதைய சூழ்நிலையில் தெள்ளத்தெளிவாகப்  புலப்படும் ஒரு உண்மை விளையாடுபவர்களின் திறமையை பார்க்கும் சூழல் இங்கு இல்லை அவர்களின் பொருளாதார சூழ்நிலை என்ன அவர்களின் பிறப்பு, சாதி போன்றவை என்ன என்று பார்த்தே பல வாய்ப்புகள் எத்தனையோ திறமை படைத்தவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. பல திறமைசாலிகளுக்கு ஆர்வம் இருந்தும் பயிற்சிக் கொடுக்கப் போதுமான பொருளாதார உதவியில்லாததால் அது வெளிக்காட்ட முடியாமலே மட்டுப்பட்டுவிடுகிறது.

ஒரு வேளை அவர்களில் ஒருவர் பல சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றாலும் சாதி அடிப்படையிலும், மோசமான பொருளாதார பின்னணியினாலும் சமூக நீதிக்குப் புறம்பாக நசுக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்.   அப்பட்டமாகப் பல பொய்களைக் கூறி அவர்கள் பெற்ற விருதையும்,  பதக்கங்களையும் பறித்துக்கொண்டு அதோடு  முடக்கிவிடுகிறது. “நம் நாட்டைப் பொறுத்தவரை மிகத் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இருக்கின்றனர். ஆனால் விளையாட்டில் உள்ள அரசியல் காரணமாகப் பலருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்கள் புறங்கணிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. திறமையான நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஒலிம்பிக்கில் தங்கம் பெற முடியவில்லை என்று பேசிக் கொள்வதில் என்ன நியாயம் உள்ளது என்று எனக்கு புலப்படவில்லை. உங்கள் அனைவருக்கும் சாந்தியை நினைவிருக்கிறதா? தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீராங்கனைதான் சாந்தி சௌந்தராஜன். புதுக்கோட்டை மாவட்டம், காதகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சவுந்திரராஜன் என்பவரின் மூத்தபெண்.

செங்கல் சூளையில் கூலிக்கு வேலை பார்க்கும் அப்பாவுக்கு உதவப் போனவர், அங்கேயே தானும் வேலை செய்ய ஆரம்பித்தார். செங்கல் சூளையில் இருந்தபோது  வீட்டுக்குச் செல்வதாக இருந்தால், நடந்து செல்லமாட்டார் ஓட்டம்தான். இவரின் ஓட்டம் வேகமாக இருப்பதைப் பார்த்த உள்ளூர் பிரமுகர்கள், சாந்தியைப் பற்றி பேச ஆரம்பித்தனர். உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர்,  சாந்தியை முறைப்படி ஓட்டம் பழக அழைத்தார். அந்தத் தருணத்தில், வறுமையின் காரணமாகப் பள்ளியில் இருந்து இடை நிறுத்தம் செய்யும் அளவில் இருந்தார் சாந்தி. எனினும் ஓட்டத்தில் விடாப்பிடியாக இருந்த சாந்தியை, பள்ளிக்கு அழைத்துச் சென்று முறைப்படியான பயிற்சியும் கொடுத்தார்கள். புதுக்கோட்டையில் ஓடுவதற்குச் சரியான இடம் இல்லை என்பதால், சாலையின் ஓரமாக ஓட ஆரம்பித்தார். நாளைடைவில் நாட்டின் புகழ்பெற்ற விளையாட்டு மைதானங்களில் எல்லாம் சாந்தியின் கால்கள் ஓடின. சாந்தியின் ஓட்டம் நிற்கவில்லை. ஒருபுறம் வறுமையும் வெறுமையும் சாந்தியை துரத்தினாலும் அவரோ அதைப் பொருட்படுத்தாமல், பதக்கங்களைக் குறிவைத்து ஓடிக்கொண்டிருந்தார்.

படம்: caravanmagazine

ஒருக்கட்டத்தில் இவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். 2006-ல் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 நிமிடம், 3.16 விநாடிகளில் இலக்கை எட்டிய சாந்தி பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால் இந்த பெருமையை இவர் உடம்பில் கொட்டிய வெற்றியின் வியர்வை காயும் முன்பே அவர் மனதில் நெருப்பாய் இடியை பாய்ச்சினார்கள். சாந்தி வாங்கிய பதக்கத்தோடு அவரது உழைப்பு, கனவுகளையும் சிதைத்தார்கள். அதற்குச் சொல்லப்பட்ட காரணம், ”பதக்கம் வாங்கிய சாந்தி ஒரு பெண் இல்லை. அவரது உடம்பில் ஆண் தன்மை அதிகமாக இருக்கிறது. ஆண்களுக்கான சுரப்பிகள் சுரக்கின்றன…” என்பதுதான். பெயர் இல்லாமல் வந்த மொட்டைக் கடிதாசி போல மொட்டைப் புகாரைக் கணக்கில் வைத்துக்கொண்டு சாந்தியை பாலின பரிசோதனைக்கு ஆட்படுத்தினார்கள். இந்தியாவின் சார்பில் சென்ற அலுவலர்கள் எவரும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. காரணம் இங்கு இருக்கும் சாதி அரசியல் பெருமைசேர்க்க நினைத்த பெண்ணிற்கு இழிவை மட்டுமே தந்தது இந்தச் சமூகம். அவரிடமிருந்து அனைத்துப் பதக்கங்களும் பறிக்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்கவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.

2006-ல் இந்தியா பத்து தங்கங்கள், 17 வெள்ளி, 26 வெண்கலம் என்று மொத்தம் 53 பதக்கங்களை வாங்கி, எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் அதைப்பற்றிய பேச்சுகள் இல்லை; சாந்தியைப் பற்றியே பெரிதும் பேசப்பட்டது. 2007-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக சாந்தி வலம் வந்தார். 200-க்கும் மேற்பட்ட ஊடகங்களில், 300 மொழிகளில் சாந்தியின் நிலைமை குறித்துக் கட்டுரை எழுதினார்கள். முதல் முறையாக ஊடக அறிவியல் முறையில், பாலியல் பரிசோதனைகள் குறித்த அறிவியல் பூர்வமான செய்திகளை அலசத் தொடங்கினார்கள். ஆனாலும் சாந்தியின் நிலைமை மாறவில்லை.

சாதாரண பிரிவில் பிறந்த ஒரே காரணத்திற்காக “எத்தனை திறமையுடன் நீ நாட்டிற்கு பெருமை தேடித் தந்தாலும், சாதி அடிப்படையில் உனக்கான அங்கீகாரம் முற்றிலும் மறுக்கப்படும்”  என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். விளையாட்டுத்துறையைப் பொறுத்தவரையில், ஒரு ஆண் தானொரு ஆண்தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்களைப் பெண் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விதிமுறையால் சர்வதேச அளவில் இதுவரையில் 75 வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனவுகளைத் தொலைத்த சாந்தி தன் சொந்த ஊரிலேயே தடகள பயிற்சிக்கூடம் ஒன்றை நிறுவி இளையோருக்குக் கட்டணமின்றி நடத்தி வந்தார். இவருடைய பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் சென்னை தொடரோட்டப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றனர். எனினும் பண நெருக்கடியால் பயிற்சிக்கூடத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

படம்: mensxp

சாந்தியின்  சான்றிதழ்கள், வளர்ந்த சூழல், பிறப்புச் சான்றிதழ் என்று அனைத்திலும் அவர் ஒரு பெண்ணாகவே திகழ,  விளையாட்டு உலகமோ அவரை  ஆண்தன்மை கொண்டவர் என்றது. தன்னை நிரூபிக்க அவர் ஏறாத படிகள் இல்லை சந்திக்காத பிரபலங்களும் இல்லை. சர்வதேச அளவில் சாந்தியின் பெயர் பேசப்பட்டது. பல்வேறு நாடுகள் சாந்திக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. ஆனால்,  இந்தியா சார்பில் யாரும் வாய் திறக்க முன் வரவில்லை. இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம்,  விளையாட்டு ஆணையம், அதிகாரிகள் எவரும் சாந்தியின் நிலை குறித்து, சர்வதேச விளையாட்டு நீதிமன்றங்களில் முறையிட முன்வரவில்லை. தோகாவில் விளையாடிக்கொண்டிருந்த சாந்தியை,  பாதியிலேயே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியவர்கள்  இங்கு வந்த பிறகு அவர் வாங்கிய பதக்கங்களையும் பறித்துக் கொண்டனர்.

சாந்தி தனக்கு நடந்த அநீதிக்காக வழக்குத் தொடர்ந்தார். அவரின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சம்பந்தமே இல்லாத பதில்களைத் தந்தது எதிர் தரப்பு. கேள்விகளைச் சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்டபோது சில கேள்விகளுக்கு பதில்கள் மாறியுள்ளன. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,  ‘தடை விதிக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளனர். ஆனால் சாந்தியின் கேள்விக்கோ, ‘இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை’  என்று கூறியுள்ளனர். இந்தப் பதிலுக்கு சாந்தி தரப்பில், அதுபோன்ற அழைப்பு தமக்கு வரவில்லை என்றும்,  விசாரணையும் நடைபெறவில்லை என்றும் கூறுகின்றனர்.

138கோடி மக்கள் தொகைக்கொண்ட நம் நாட்டில் ஒவ்வொருவரின் தனித்துவமான திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றே. சாதி, மதம், பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு என்று தனிமனித திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும், சமூக நீதி காப்பாற்றப்படும் சூழல் உருவாகிறதோ அன்றுதான் துறைதோரும் வல்லமை படைத்த, ஆற்றல் வாய்ந்த திறமைசாலிகளைக் கொண்டு இந்த நாடும் முன்னேறும், சர்வதேச  விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களையும் பெற்று வரும்.

Facebook Comments
பகிரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here